ஆண்டுதோறும் ஜூன் 15-ந் தேதி நடக்கும் விழா என்றாலும் ஒவ்வோர் ஆண்டும் உயிரோட்டத்துடன் சிறப்பு பெறுகிறது சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விழா. திராவிட இயக்க மூத்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான மறைந்த சின்னகுத்தூசி அவர்களின் பிறந்தநாளையொட்டி 7-ஆம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா, சென்னை -கவிக்கோ அரங்கில், மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர் தலைமையில் நிகழ்ந்தது.
தொடக்கத்தில் சின்னகுத்தூசியைப் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட, அதில் அரங்கமே மனம் நெகிழ்ந்தது. கடந்த ஆண்டுகளில் விருது பெற்றவர்கள் காட்சிப்படுத்தப்பட, இந்த ஆண்டுக்கான சாதனையாளர் விருதையும் சிறந்த கட்டுரையாளர்களுக்கான விருதுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வழங்கினார்.
தலைமை உரையாற்றிய இரா. ஜவகர், ""தி.மு.க ஆதரவாளராக இருந்தாலும் கூட கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தவர் குத்தூசி. நக்சலைட்டுகள் என்று ஜெ. ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இடதுசாரி தோழர்களை கலைஞர் ஆட்சியில் விடுதலை செய்ய காரணமாக இருந்தவர் சின்னகுத்தூசி'' என்பதை நெகிழ்வுடன் விளக்கினார்.
அரசியல் கட்டுரைக்கு விருதுபெற்ற, "தமிழ் இந்து' இதழின் நடுப்பக்க ஆசிரியரான சமஸ், ""கொண்ட கொள்கையிலும் எளிமையிலும் நேர்மையிலும் உறுதியாக இருந்தவர் சின்னகுத்தூசி''’என புகழாரம் சூட்டியதோடு, ""இன்று பிராமணியத்தை எதிர்ப்போர், பிராமணர் அல்லாதோர் பண்பு என்னவாக இருக்கும் என்பதை வரையறை செய்துகொள்ள வேண்டும்'' என வலியுறுத்தினார்.
சமூகவியல் கட்டுரைக்காகப் பரிசு பெற்ற இரா.மோகனசுந்தரம், "திராவிட இயக்கச் சாதனைகள் பெரிது'’ என விவரித்தார். பொருளாதாரக் கட்டுரைக்கான பரிசைப் பெற்ற பேராசிரியர் தி.ராசகோபாலன், ""சின்னகுத்தூசியைப் போல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான். என் இளமைக் காலத்தில் திருவாரூரில் அவர் தன் நண்பர்களோடு பேசுவதையெல்லாம் கேட்டு மகிழ்ந்தவன்'' என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டதோடு, ’"சின்னகுத்தூசியின் இறுதிக்காலத்தில், அவரைத் தன் தந்தையைப் போல் பராமரித்தவர் நக்கீரன் கோபால்' என்பதையும் நினைவு கூர்ந்தார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, பெரியாரிய செயற்பாட்டாளர் பார்வதி கணேசன், ""நான் பெரியாரை ஏற்றுக்கொண்டு, செயல்பட்டதற்குக் கிடைத்திருக்கும் இந்த விருது, என் வாழ்நாளில் மறக்கமுடியாத விருது''’என நெகிழ்ந்தார்.
வாழ்த்துரையாளர் வரிசையில் வந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன், ""சின்னகுத்தூசியைப் போன்ற ஒருவரை எப்போதும் பார்க்க முடியாது. இன்றைக்கு இணையத்தை பயன்படுத்தி 1 மணி நேரத்தில் எந்தத் தலைப்பிலும் கட்டுரை எழுதி விடலாம். ஆனால் அவர், இணையப் பயன்பாடு இல்லாமலே, காகிதக் குறிப்புகளை வைத்துகொண்டே எல்லாவிதமான கட்டுரைகளையும் எழுதினார். ஒவ்வோரு நிகழ்வையும் பின் தொடர்ந்து, அவற்றை முழுமையாக உணர்ந்துகொண்டு எழுதினார். அவரின் தேவை இருக்கிற, இந்தக் கருத்துரிமைப் போராட்டக் காலத்தில் அவரை நாம் இழந்து நிற்கிறோம்''’என்றார் ஆதங்கமாய். பதிப்பாளர் ராஜ்மோகன், பொதுக்கூட்ட மேடைகளில் உரையாற்றிய சின்னகுத்தூசியின் இளமைக்கால நிகழ்வுகளை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துகொண்டார்.
நினைவுரையாற்றிய நக்கீரன் ஆசிரியர் ""தன்னைச் சார்ந்தவர்களை எல்லாம் வழி நடத்தியவர் சின்னகுத்தூசி. நண்பர்களின் உடல் நலத்திலும் அக்கறை காட்டியவர். எங்கள் குடும்பத்திலும், எங்களோடு இருந்து வழி காட்டினார்'' என்பதை சம்பவங்களுடன் சுட்டிக்காட்டியது அனைவரையும் ஈர்த்தது.
விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தனது சுருக்கமான வாழ்த்துரையில், ""பார்வதி அம்மாள் போன்ற எங்கள் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்களை யெல்லாம் நீங்கள் அழைத்துப் பாராட்டுவதில் மகிழ்கிறோம். எந்த நிலையிலும் பெரியாரியத்தில் மட்டும் சமரசம் செய்துகொள்ளாத கொள்கையாளராகத் திகழ்ந்தவர் சின்னகுத்தூசி. தி.மு.க.வுக்கும் தி.க.வுக்கும் கொள்கை உரசல் (விரிசல்அல்ல) இருந்த காலத்தில் கூட தாய்க்கழகமான திராவிடர் கழகத்தை எதிர்த்து அவர் எழுதியதில்லை'' என்பதை பதிவு செய்தார்.
சிறப்புரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ’""புத்தகங்களுக்கு நடுவிலேயே வாழ்ந்தவர் சின்னகுத்தூசி. அவர் எங்கள் கட்சியை எதிர்த்து எழுதுவதை எல்லாம் விடாது படிப்பேன். எங்கள் தலைவர்களைத் தாக்கி எழுதுவார். அதையும் ரசிப்பேன். ஏனென்றால், அதில் பொய் இருக்காது. எதையும் துணிவாகச் சொல்லும் வலிமையும் தெளிவும் அவருக்கு இருந்தது. நக்கீரன் வெளியிட்டிருக்கும் சின்னகுத்தூசி யின் நினைவு மலர்தான், அண்மையில் நான் படித்த சிறந்த புத்தகம். அவரைத் தொடர்ந்து கொண்டாடும் நக்கீரனைப் பாராட்டுகிறேன்''’என்றார் உற்சாகமாக.
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், குத்தூசியின் நினைவுகளை இடையிடையே சொல்லி, விழாவை தொகுத்து வழங்கினார். கௌரா ராஜசேகர், ஃபாரடைஸ் ராயப்பன் உள்ளிட்டோரும் குத்தூசியின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சின்னகுத்தூசி அறக்கட்டளையின் இந்த விழா, மதவாத சக்திகள் வளர்ந்துவரும் சூழலில் அதற்குக் கடிவாளம் போடும் திராவிடத் திருவிழாவாக அமைந்தது.
-சி.ஜீவாபாரதி