நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட 2017ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் உயிர்ப்பலி இல்லாத ஆண்டே இல்லை என்கிற அளவுக்கு காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் - தமிழ்ச் செல்வி. இவர்களுக்கு விக்னேஷ், வினோத் என்று 2 மகன்கள். விஸ்வநாதன் பெட்டிக் கடை வைத்துள்ளார். விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டராகவேண்டும் என்ற கனவில் படித்து வந்துள்ளார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு +2 பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றார். முதலில் கேரளாவிலுள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும் பின் துறையூர் சௌடாம்பிகாவிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்தார்.
2 முறை நீட் தேர்வு எழுதியதில் ஒருமுறை தோல்வியடைந்தார். ஒருமுறை தேர்ச்சிபெற்ற நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் சீட் கிடைத்தது. அவர்கள் நன்கொடை அதிகளவில் கேட்டதால் இவரால் பணம் கொடுத்து சேரமுடியவில்லை. இந்த நிலையில் 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று டாக்டராக முடியுமா? என்று இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் திரும்ப வில்லை. நண்பர்களிடமும், வழக்கமாகச் செல்லும் இடங் களிலும் தேடிப்பார்த்த பெற்றோர், மகனைக் காணாததால் பதட்டமடைந்தனர். இதையடுத்து உறவினர்களும் இணைந்து தேடியபோது, விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
விக்னேஷ் மரணத்தைத் தொடர்ந்து கிராம மக்களும் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் பா.ம.க.வினரும் அரியலூர்- ஜெயங் கொண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடலை எடுக்கவந்த ஆம்புலன்ஸையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் குவிக்கப்பட்டு, ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி போராட்டக்காரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டம் கைவிடப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக விக்னேஷ் உடல் அனுப்பி வைக்கப் பட, தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, விக்னேஷூக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தபோது, பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டனர். விக்னேஷ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தி விடக்கூடாது என பா.ம.கவினர் அவசரமாக உடலைத் தூக்கிச் சென்றதும், விக்னேஷ் குடும்பத்தினரை பதற்றமடைய வைத்தது. குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் உதயநிதி.
அரியலூர் மாணவி அனிதா நீட் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டபோது களமிறங்காத பா.ம.க, இப்போது சாதி அடிப்படையில் இதனைக் கையில் எடுக் கிறது என தி.மு.க. மா.செ. சிவசங்கர் குற்றறம்சாட்டினார்.
எந்த சாதி என்று பார்க்காமல் நடுத்தர- கிராமப்புற- ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, உயிரைப் பறிக்கிறது நீட் எனும் பலிபீடம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது ஒன்றே தமிழகத்தின் எதிர்கால டாக்டர்களுக்கான நன்மையாக அமையும்.
-எஸ்.பி.சேகர்