நீட் தேர்வு அச்சம் மேலும் ஒரு உயிரைப் பலிகொண்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கூழையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ், இரண்டுமுறை நீட் தேர்வெழுதியும் தேர்வு பெறாத வருத்தத்தாலும் இந்த முறையா வது வெற்றி பெறுவோமா என்ற அச்சத் தாலும் தூக்கில் தொங்கி பலியானார்.

கூழையூர் சிவக்குமாரின் மகனான தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வு எழுதியும் டாக்டர் சீட் பெற முடியவில்லை. இந்த ஆண்டுதான் நீட் தேர்வெழுத கடைசி வாய்ப்பு. இதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், டாக்டர் கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்துவிடும்,'' என்று நண்பர்களிடம் தனுஷ் அடிக்கடி புலம்பிவந்துள்ளார் இந்நிலையில் செப்டம்பர் 12-ஆம் தேதி கண்விழித்த அவரது குடும்பத்தினர் தனுஷை தேர்வுக்கு அனுப்புவதற்காக ஆயத்தம் செய்ய அவனது அறைக்குச் சென்றபோது, தந்தையின் வேட்டியை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கு வதைக் கண்டு அதிர்ந்து போயினர். தகவலறிந்து விரைந்து வந்த கருமலைக் கூடல் போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துமனைக்கு அனுப்பினர்.

neet

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனுஷின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம், "இப்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்து நீட்டிற்கு எதிரானதுதான் என்றார். வானத்தையே வில்லாக வளைப்போம் என்பதுபோல் பேசினார். விளைவு, மேலும் ஒரு மாணவரை நீட்டிற்கு தாரை வார்த் துள்ளோம்'’ என விமர்சனம் செய்தார்.

Advertisment

மாணவர் தனுஷின் உடலுக்கு தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். குடும்பத் தினருக்கு நிதி அளித்தனர். மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யவிருப்பதாகவும், நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் வரை சட்டரீதியான போராட்டம் தொடருமெனவும் அறிவித்தார்.

2018-ல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்தது மத்திய அரசு. அதுமுதல், தனியார் பயிற்சி மையத்தில் ஆண்டுக்கணக்கில் பயிற்சிபெற்றால் மட்டுமே தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களும் பெறக்கூடியதாக நீட் தேர்வு திகழ்கிறது. இதனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வு தொடங்கியது முதல் இன்று வரை அனிதாவில் தொடங்கி தனுஷ் வரை 18 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.

நீட் தேர்வு வருகைக்குப்பின் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு தயாராகுபவர்களின் எண் ணிக்கை சரிந்து வருகிறது. 2020-ல் மட்டும் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக் கையில் 13 சதவிகிதம் சரிவு ஏற்பட்டது. கொரோனா காரணமாக இவ்வருடம் நீட் தேர்வு நடைபெறுமா என சந்தேகம் இருந்தபோதும், மத்திய அரசு நீட் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்திருந்தது.

Advertisment

மத்திய அரசின் சுகாதார வழிகாட்டு நெறி முறைகளின்படி நடைபெற்ற இத்தேர்வில் தமிழ் நாட்டிலிருந்து 1,10,971 மாணவர்கள் விண்ணப் பித்திருந்தனர். அதாவது கடந்த ஆண்டைவிட இம்முறை 7000 பேர் குறைவாக தேர்வெழுதியுள்ளனர்.

neet

முந்தைய அ.தி.மு.க. அரசில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கோரி சட்டப்பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தனர். அவை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உரிய அழுத்தம் அளிக்கவில்லையென எதிர்க்கட்சியான தி.மு.க. விமர்சனம் செய்தது. தேர்தல் வாக்குறுதி யாக, மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்திருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என அறிவித்தது.

தேர்தலில் வெற்றிபெற்றதும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை தி.மு.க. அரசு அமைத்தது. இந்தக் குழுவிடமிருந்து அறிக்கை கிடைத்ததற்கும் நீட் தேர்வு தேதிக்குமிடையே குறைந்த அவகாசம் இருந்ததால் இவ்வாண்டு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறமுடியாத நிலை ஏற்பட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது, மாநில அரசின் பட்டியலிலிருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்குப் போனது. அது முதல் கல்வி தொடர்பான பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் கையே ஓங்கியிருக்கிறது. நீட், புதிய கல்விக் கொள்கை என எல்லாவற்றிலும் ஒன்றிய அரசு வைத்ததே சட்டம்.

நீட் ரத்து பற்றிய குரல் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே ஒலிக்கிறது. அதை பிற மாநிலங்களின் குரலாகவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் சட்டப்போராட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக எடுக்கும்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.