ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளங்களில் ஒன்றான என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் சில நிர்வாகி களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு மிடையே எழுந்துள்ள பிரச்சனை தான் தற்போது கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

உலக அளவிலுள்ள கம்யூனிச சித்தாந்தவாதி களின், முற்போக்கு சிந்தனையாளர்களின் எழுத்துக் களை, பேச்சுக்களை, போராட்ட வரலாறுகளை நூல்களாக வெளியிட்டு கம்யூனிசத்தின் தேவையை வளரும் தலைமுறையினரிடம் கொண்டுசெல்வதற் கான ஓர் உன்னத கருவியாக 1951ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளால் உருவாக்கப்பட்டது தான் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எனப்படும் என்.சி.பி.ஹெச். நிறுவனம். சென்னை அண்ணா சாலையில் ஒரு புத்தகக் கடை, பின்னர் மதுரையில் மேல கோபுர வாசலில் சொந்த இடத் தில் ஒரு கடை எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து, தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் கிளை பரப்பி, தற்போது சுமார் 600 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள் ளது இந்நிறுவனம்.

vv

என்.சி.பி.ஹெச். நிறுவனம் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்ததாக இருந்தபோதிலும், நிறுவனச்சட்டப்படி பதிவு செய்வதற்காக இதற்கென தனியே தலைவர் கள், இயக்குநர்கள், அவர்களுக்கென பங்குகள் என இருப்பது வழக்கம். மற்றபடி இ.கம்யூனிஸ்ட் கட்சி யின் ஓர் அங்கமாகவே இந்நிறுவனம் இப்போது வரை செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் தோழர் பி.எஸ்.ஆர்., வி.பி.சிந்தன், மோகன் குமாரமங்கலம் உட்பட பலரும் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். தற்போது தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

இப்படியான சூழலில், என்.சி. பி.ஹெச். நிறுவனத்தின் இயக்குநர் களாக இருக்கும் சண்முகம் சரவணன் மற்றும் இரத்தின சபாபதி ஆகிய இருவரும் இந்நிறுவனத் தைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் நிர்வாகிகளின் பங்குகளை மோசடி யாகத் தங்கள் பெயருக்கு மாற்றிவிட்டதாக அவர்கள் இருவர் மீதும் கடந்த மே 4ஆம் தேதி, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் தோழர் ஆர்.நல்லகண்ணு ஆகி யோர் ஆவடி குற்றப்பிரிவு காவல் ஆணையரிடம் தனித் தனியே புகாரளித்தனர். அதன் படி விசாரணை நடத்தப்பட்ட தில், இரத்தின சபாபதி கைது செய்யப்பட்டார். சண்முகம் சரவணன் தற்போதுவரை தலை மறைவாக இருந்துவருகிறார் என்று கூறப்படுகிறது.

Advertisment

cc

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், ஆவடி காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரில், "இந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸில், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாள ராக இருந்த எம்.எஸ்.தாவூத் இயக்குநராக இருந்து, கடந்த 30.07.2019 அன்று கால மானார். அவர் இறந்தபின் இந்நிறுவனத்தில் அவர் பெயரிலிருந்த 1200 பங்குகளை, 25.01.2021 அன்று இயக்குனர் குழு கூட்டம் கூட்டியதுபோல் பொய்யாகக் காட்டுவதற்கு ஆவணங்கள் தயார் செய்து, அவரது பெயரிலிருந்த பங்கு களை அவரே கையெழுத்திட்டு வழங்கியதுபோல் இயக்குநர் சண்முகம் சரவணன் மற்றும் இரத்தின சபாபதி ஆகிய இருவரும் மோசடி செய்துள்ள னர். இதன்மூலம் எம்.எஸ். தாவூத்தின் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் இறந்ததையே மறைத்துவிட்டு அபகரித்துள்ள னர்' என்று குற்றம்சாட்டி யுள்ளார்.

அதேபோல், தோழர் இரா.நல்லகண்ணு அளித்துள்ள புகாரில், "இந்நிறுவன எம்.டி. சண்முகம் சரவணன், 2021ஆம் ஆண்டில் ஆயுட்கால உறுப் பினராகத் தனக்குத்தானே போலி ஆவணங்களின் மூலம் நியமனம் செய்துகொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் தன்னிடம், வயோ திகத்தின் காரணமாக உண் மையை மறைத்து சண்முகம் சரவணன் கையெழுத்து பெற்றதோடு, இதையே ஆதார மாக வைத்து, இன்னொரு இயக்குநரான வீரசேனன் என் பவரையும் ஏமாற்றி கைரேகை பெற்று, சட்டதிட்டங்களை மாற்றியதோடு, தன்னிடமும், தோழர் தா.பாண்டியனிடமும் உள்ள சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் பங்குகளைத் தன் பெயருக்கு மாற்றிவிட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த பங்குகளின் சந்தை மதிப்பு 80 கோடி ரூபாய் என்றும், இவரது கூட்டாளியான இரத்தினசபாபதி, 2.3 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 1200 பங்குகளை ஏமாற்றி அபகரித்துள்ளார் என்றும் புகாரில் தெரிவித் துள்ளார்.

vv

Advertisment

இந்த பிரச்சனை குறித்து என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் இயக்குநர்களின் ஒருவரான தோழர் சந்தானம் கூறுகையில், "நான் இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ராக இருந்துவருகிறேன். கடந்த நவம்பர் 2022ஆம் ஆண்டில் தோழர் முத்தரசனும், நானும் என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் இயக்குநர்களாக இணைக்கப் பட்டோம். அப்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்த போது மோசடி நடப்பதாக தெரியவந்தது. இயக்குநர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்த இரண்டு பேர் ஒப்புதல் மட்டுமே போதும் என்ற கோரத்தை பயன்படுத்தி நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன், பொதுமேலாளர் இரத்தின சபாபதி இருவரும் சேர்ந்து மோசடியில் ஈடு பட்டிருப்பது தெரியவந்தது. தோழர் நல்லகண்ணுவின் பெயரிலிருந்த 37,000 பங்குகளில் 30,000 பங்குகளையும், தோழர் தா.பாண்டியன் மற்றும் வீ.வீரசேனனின் பங்குகளை யும் தன் பெயருக்கு மாற்றியுள் ளார் சண்முகம் சரவணன். அதேபோல், இயக்குநர் இரத்தின சபாபதி, எம்.எஸ். தாவூது தோழரின் பங்குகளை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். எம்.எஸ். தாவூது தோழர் 2019ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். அதையே மறைத்து, 2021ஆம் ஆண்டில் அவரது கையெழுத்தை போலியாகப் போட்டு அவர் பங்குகளைத் தன் பெயருக்கு மாற்றியுள்ளார். அதேபோல் கடந்த ஏப்ரலில் தங்களுக்கு ஆதரவான 9 பேரை இயக்குநர்களாக இணைத்துள்ளனர்.

இந்த மோசடிகள் குறித்து தெரிய வந்ததும், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா முன்னிலையில் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தோம். அதையடுத்து மே 2ஆம் தேதி தோழர் நல்லகண்ணு இல்லத்தில் வைத்து நடந்த பேச்சுவார்த்தையில், மோசடியாக மாற்றிய பங்குகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தனர். இப்படி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போதே மே 1ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் எங்களுக்கு எதிராக சண்முகம் சரவணன் தரப்பினர் புகாரளித்திருப்பதாகத் தெரிய வந்தது. அதையடுத்தே நாங்களும் இந்த மோசடி தொடர்பாக ஆவடி காவல்துறையில் புகாரளித்தோம்'' என்று குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்தறிய சண்முகம் சரவணனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. அதையடுத்து என்.சி.பி.ஹெச். மதுரை மண்டல மேலாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டு கேட்ட போது, இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாதென்று மறுத்துவிட்டார். சண்முகம் சரவணனால் நியமிக்கப்பட்ட 9 இயக்குநர்களின் ஒருவரான பி.கே.ராஜன் என்பவரிடம் இந்நிறு வனம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் தரப்பில் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு... "அதுகுறித்து ஒரு அறிக்கையை அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள தாகக் கூறி, அதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் கேளுங்கள்' என்றும் கூறினார். அவர் அனுப்பிய அறிக்கையில் பூடகமாக வும், உண்மைக்கு மாறாகவும் குறிப்பிட்ட சில தகவல்கள் குறித்து விளக்கம் கேட்டபோது, விளக்கமளிக்க மறுத்து விட்டார்.

என்.சி.பி.ஹெச். நிறுவனம், உயரிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரால் நன்முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட நிறுவனம். தற்போது அந்நிறுவனத்தின் பங்குகளை முறைகேடாக மாற்றியிருக்கும் விவகாரத்தில் விரைவில் நல்லதொரு தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறோம்.