ரோட்டோரம் எழுதிய முதல் பாட்டு!

ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில்... நான் ஒருமாதமாக சிகிச்சை பெற்றுவந்தபோதும்... உடல்நிலை சரியாகாததால்... குழந்தைகளோடு வந்து தினமும் என்னைப் பார்த்துவிட்டுச் சென்ற என் மனைவி மிகவும் மனமுடைந்துபோனாள். என் உள் மனசுக்கு ஏதோ விபரீதமாகப்பட்டதால்... மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவிருந்த ஒரு நபர் மூலம் நம்பிக்கையான வார்த்தைகளை என் மனைவிக்குச் சொல்லி அனுப்பினேன். அவரும் என் வீட்டிற்குச் சென்று... ""இன்னும் ரெண்டுநாள்ல உங்க வீட்டுக்காரர டிஸ்சார்ஜ் செய்யவிருப்பதா டாக்டர் சொல்லிக்கிட்டாரும்மா'' எனச் சொல்லிவிட்டு வந்தார்.

நான் அனுப்பிய நபர் சரியான நேரத்திற்குச் சென்றதால்... என் குடும்பம் தப்பியது.

ஆமாம்... மிகுந்த மனவேதனையில் இருந்த என் மனைவி... காபி போட்டு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும், தான் குடிப்பதற்கும் தயாராகிக் கொண்டிருந்திருக்கிறாள்.

Advertisment

பால் கலந்த அந்த காபியில் பால்டாயிலும் கலந்திருந்தது.

நான் அனுப்பிய நபர் விஷயத்தைச் சொல்லிச் சென்றதும்... பால்டாயில் கலந்திருந்த காபியை தூக்கிவந்து சாக்கடையில் ஊற்றியிருக் கிறாள்.

நான் குணமடைந்து வீடு திரும்பிய போது இதைச் சொல்ல... நான் அதிர்ந்துபோனேன்.

Advertisment

சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரி யில் சேர்ந்து ஐந்து மாதங்கள் படித்தால்... ஃபர்ஸ்ட் கிரேடு தமிழாசிரியருக்கு உரிய சம்பளம் கிடைக்கும்.

ஐந்தாறு மாதங்கள் கஷ்டப் பட்டா... அடுத்து சம்பளம் கூடு தலா கிடைக்கும். அதை வச்சு குடும்பத்தை அன்றாட கஷ்டமில் லாமல் நடத்தலாம்’ என முடிவெடுத்து... ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தேன்.

தினமும் காலையில்... ராயப்பேட்டையிலிருந்து சைதாப் பேட்டைக்கு பஸ்ஸில் போவேன். திரும்பி வரும்போது நடந்தே வருவேன்.

mgr

இப்படி ஒருநாள்... கல்லூரியி லிருந்து நடந்து... களைப்பாக வீடுவந்து சேர்ந்தபோது... ""சரவணா ஃபிலிம்ஸ் கம்பெனியி லருந்து உங்களைத் தேடி வந் தாங்க...'' என என் மனைவி சொல்ல... எனக்குள் களைத்துப் போயிருந்த வாத்தியார்... இப் போது புலவராக புது உற்சாக மெடுத்தார்.

விரைந்து செல்ல வேண் டுமே... வீட்டிலிருந்த சில்லறைப் பணத்தை எடுத்துக்கொண்டு... டாக்ஸி பிடித்து... சாரதா ஸ்டுடியோ சென்றேன்.

டைரக்டர் கே.சங்கர்... ""வாங்க புலவரே'' என வரவேற்றார்.

சங்கருக்கு என் இலக்கியப் புலமைமீது அலாதி மதிப்பு. அவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்டவர். கம்பனின் வர்ணனைகள் மீது அவருக்கு ஈர்ப்பு. அதனால் கம்பராமா யணத்தை அறிந்துகொள்ள ஆசைப்பட்டார். என்னிடம் சொன்னார். நான் அதிகாலையிலேயே அவரின் வீட்டிற்குச் சென்று ஒரு நாளுக்கு பத்து பாடல்கள்வீதம் படித்துக்காட்டி... விளக்கம் சொல்வேன். சங்கரின் கம்பராமாயண ஆசையை இப்படியாக நிறைவேற்றியவன் நான்.

""சரவணா ஃபிலிம்ஸுக்காக எம்.ஜி.ஆரை வச்சு "குடியிருந்தகோயில்' படம் எடுத்துக்கிட்டிருக்கேன். ஒரு இக் கட்டான சிச்சுவேஷனுக்கு ஒரு பாடல் எழுதணும்'' என்றார்.

சிச்சுவேஷனையும் விரிவாகச் சொன்னார்.

""கவிஞர்கள் வாலி, ஆலங்குடி சோமு உட்பட சிலர் எழுதியும் திருப்தியில்லாததால் இந்த சிச்சுவேஷனுக்கு உங்களை பாட்டெழுதச் சொல்ல முடிவு செய்தோம்...''’என்றார் சங்கர்.

இது மிக அருமையான வாய்ப்பு... இதை விட்டுவிடக் கூடாது...’ என்கிற உறுதியோடு... சங்கரிடம் விடைபெற்று வந்தேன். சிச்சுவேஷனை அசைபோட்டபடியே நடந்தேன். தி.நகர் பவர் ஹவுஸ் அருகே வந்தபோது... பாட்டு வரி உதித்தது. அப்ப டியே ரோட்டோரமாக நின்றுகொண்டேன்.

கையிலிருந்த ஃபைலை பிரித்தேன். உள்ளே எழுதுவதற்காக பேப்பர் இல்லை. பக்கத்து பொரிக்கடையில் வாங்க காசும் இல்லை. ஆனால்... பாட்டுவரிகளோ தொடர்ச்சியாக உதித்துக்கொண்டே யிருந்தது.

ஃபைலின் பின்புற அட்டையில்.... எழுத ஆரம்பித்தேன்.

""நான் யார்? நான் யார்? நீ யார்?

நாலும் தெரிந்தவர் யார் யார்?

தாய் யார்? மகன் யார்? தெரியார்?

தந்தை என்பார் அவர் யார்? யார்?’

உறவார்? பகையார்? உண்மையை

உணரார்

உனக்கே நீ யாரோ?

வருவார் இருப்பார் போவார் நிலையாய்

வாழ்வார் யார்யாரோ?

நான் யார்? நான் யார்? நீ யார்?''

-வரிகள் அருவியாய் கொட்டக் கொட்டக் கொட்ட... ஒரு பல்லவி யும், மூன்று சரணங்களுமாக பாடலை ரோட்டோரத்திலேயே

நின்று எழுதி முடித்தேன். வீடு திரும்பியதும்....

ஃபைலின் பின்பக்கத்தில் எழுதியிருந்த பாடலை... ஒரு வெள்ளைத்தாளில் என் அழகான கையெழுத்தால் பிரதி எடுத்தேன்.

இரவெல்லாம் தூங்கினேனா என்று தெரியவில்லை.

nn

விடிந்தது.... பொழுதுமட்டுமல்ல...

காலையிலேயே கிளம்பிப்போய் சங்கரைப் பார்த்து, பாடல் எழுதி வைத்திருந்த பேப்பரை எடுத்துக்கொடுத்தேன். அதை வாங்கி... அப்படியே மடித்து தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு... ""புலவரே... நீங்க உங்க வேலையைப் பாருங்க... நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போகிறேன்'' எனச் சொல்லிவிட்டு கிளம்பினார் சங்கர்.

நானும் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு கிளம்பினேன்.

சத்யா ஸ்டுடியோ சென்ற சங்கர்... "குடியிருந்த கோவில்' படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலு மணியிடம் பாடல் எழுதிய பேப்பரைக் கொடுக்க... அதை வாங்கிப் படித்துப்பார்த்த வேலுமணி, ""அட... இதுதான நாம தேடின பாட்டு! எழுதினது யாரு?'' எனக் கேட்டிருக்கிறார்.

""யார் எழுதினதுங்கிறது முக்கியமில்லை... பாட்டு நல்லா இருந்தா வச்சுக்கவேண்டியதுதான்'' என சங்கர் சொல்லியிருக்கிறார்.

நான் கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது... சரவணா ஃபிலிம்ஸ்ஸிலிருந்து என்னை கூப்பிட்டுவிட்டதாக... மனைவி சொன்னாள்.

சாரதா ஸ்டுடியோவுக்குச் சென்றேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்... பாடலைப் பாடிவிட்டு வெளியே வந்தார் டி.எம்.சௌந்திரராஜன்.

இந்த பாடல் பதிவுக்கு கொஞ்சநாட்கள் முன்புதான் டி.எம்.எஸ்.ஸின் மகன் இறந்து போயிருந்தார். புத்திரசோகத்தின் வலி அவரின் கன்களில் தெரிந்தது. அந்தச் சமயம் வெளியே வந்த ரெக்கார்டிஸ்ட் (பாடலை பதிவு செய்யும் கலைஞர்) ரெங்கசாமி... என்னைப் பார்த்துவிட்டு... "இவனா இந்தப் பாட்டை எழுதினான்?' என வியப்புக் காட்ட...

டி.எம்.எஸ். என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"பிணியார் வருவார் மருந்தார் தருவார்

பிழைப்பார் யார்யாரோ?

உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்

துணை யார் வருவாரோ?

நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்

நாளைக்கு யார்யாரோ?

பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்

முடிந்தார் யார்யாரோ?’

-இந்த வரிகள் புத்திர சோகத்திலிருந்த டி.எம்.எஸ். மனதில் ஆழப்பதிந்து போயிருக்கிறது. என் கைகளை மேலும் இறுக்கிக்கொண்டவர்... "நீங்க நல்லா இருக்கணும்' என ஆசிர்வதித்தார்.

எம்.எஸ்.வி.யின் இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவர்... இந்த பாட்டு வரிகளில் மயங்கிப்போய்... "எல்லாரும் தொலைஞ்சானுங்க'’என சொல்லிக் கொண்டே போனார்.

ஆனால்... இந்தப் பாடலை எழுதியது நான் என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியாததால்... என் வறுமை தொலையவில்லை. அதைச்...

(சொல்கிறேன்)

போட்டோ : ஞானம்