சேலம் -திருச்சியிடையே இயக்கப்படும் நவரதம் அரசுப் பேருந்துகளால், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தனியாருக்குப் போட்டியாக விரைவான பயணத்தைக் கருத்தில் கொண்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல் சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம், சேலம் - திருச்சி இடையே 15 பேருந்துகளை 'நவரதம்' என்ற பெயரில் இயக்கிவருகிறது. அதேபோல, கும்பகோணம் கோட்டத்திலிருந்தும் திருச்சி - சேலம் வழித்தடத்தில் 25 பேருந்துகள் நவரதம் பெயரில் இயக்கப்படுகின்றன.
நவரதம் பேருந்துத் திட்டத்தால் பயண நேரம் அதிகமாகி இருப்பதாகவும், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சேலம் கோட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேசினோம்.
"சேலம் -திருச்சியிடையே ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ஓட்டை, உடைசல் பேருந்துகளின் கண்ணாடி முகப்பில் 'நவரதம்' என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறோம். இதற்காக புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. திருச்சியிலிருந்து சேலத்திற்குப் புறப்படும் ஒரு நவரதம் பேருந்து, திருச்சி, நெ.1 டோல்கேட், முசிறி, தொட்டியம், ஏழூர்பட்டி, நாமக்கல், ஆண்டகளூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், சேலம் என 9 இடங்களில் மட்டும் நின்றுசெல்வதால் 'நவரதம்' என்கிறார்கள். '1 டூ 9' பேருந்து என்றும் சொல்கிறோம்.
இந்தப் பேருந்துகளில் நடத்துநர்கள் கிடையாது. சேலத்திலிருந்து கிளம்பும்போது சேலம் மத்திய பேருந்து நிலையத் தில் ஒரு நடத்துநர் நவரதம் பேருந்துகளில் ஏறும் பயணிகளிடம் டிக்கெட் போடுவார். அங்கிருந்து பேருந்து கிளம்பி, அடுத்து சீலநாயக்கன்பட்டியில் நிற்கும். அங்கு ஏற்கனவே காத்திருக்கும் நடத்துநர் பயணிகளிடம் டிக்கெட் போடுவார். இப்படி 9 நிறுத்தங்களிலும் 9 நடத்துநர், மறுமார்க்கத்திலும் 9 நடத்துநர் என மொத்தம் 18 நடத்துநர்கள் பணியில் இருப்பார்கள். நடத்துநர்கள் டிக்கெட் போட்டு, வசூலித்த கட்டணத் தொகையை டிரிப்ஷீட்டில் எழுதி, ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.
இந்த புதிய நடைமுறையால் ஓட்டுநர் களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அவசரத்தில் டிக்கெட் வசூல் கணக்கை சரிபார்த்து வாங்கமுடியவில்லை. வசூல் கணக்கு உதைக்கும்போது அதற்கான முழுச் சுமையும் ஓட்டுநர் தலையில்தான் விடிகிறது. அதேநேரம், நடத்துநர்களுக்கும் பணிச்சுமை கூடியிருக்கிறது. முன்பு ஒரு இரவு, ஒரு பகல் டூட்டி பார்த்த நடத்துநர்கள், இப்போது 2 இரவு, ஒரு பகல் என தொடர்ச்சியாக ஓய்வின்றி டூட்டி பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு நடத்துநர், ஒரே நாளில் 20 பேருந்துகளில் டிக்கெட் போடவேண்டிய நிலை'' என்கிறார்கள்.
கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களிடம் பேசியபோது, “"முன்பெல்லாம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து கிளம்பும்போது வழியில் திருவாக்கவுண்டனூர், கொண்டலாம்பட்டி, மல்லூர், நாமக்கல் அருகே புதன்சந்தை, புதுப்பட்டி, பழையபாளையம், திருச்சியில் குணசீலம், வாத்தலை, சிறுகாம்பூர் உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்வோம். இதனால் ஒரு பேருந்துக்கு, தினமும் சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைத்தது.
இப்போது 12 ஆயிரம் ரூபாயாக சரிந்துவிட்டது. 15 நிமிட பயண நேரக் குறைப்புக்காக ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துத்துறையை சில அதிகாரிகள் திட்டமிட்டு மேலும் நட்டத்திற்கு உள்ளாக்கு கின்றனர்.
பயண நேரத்தைக் குறைப்பதுதான் திட்டத்தின் நோக்கம் என்று வெளியில் சொன்னாலும், உண்மையில் நடத்துநர் பணியிடங்களை ஒழிப்பதுதான் அரசின் நோக்கம். நவரதம் பேருந்துகள் வந்தபிறகு, சேலம் - திருச்சி வழித்தடத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்த 4 நடத்துநர்களுக்கு இப் போது வேலையில்லாமல் போய்விட்டது. இதை யெல்லாம் கேட்டால், எங்கள் மீது அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுகின்றனர்'' என் கிறார்கள் ஓட்டுநர்கள்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க (சி.ஐ. டி.யு.) பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். "நவரதம் பேருந்து சேவையின் ரிசல்ட் போகப் போகத்தான் தெரியும். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம், அரசுப் பேருந்துகளில் இனி நடத்துநர்களே இருக்கக்கூடாது என்கிறது. இதை நாங்கள் ஏற்கமுடியாது,'' என்றார்.
இதுகுறித்து சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடியிடம் கேட்டபோது, "புதிதாக ஒரு மாற்றம் வரும்போது ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு கிளம்புவது சகஜம்தான். வரும்காலத்தில் இத்திட்டம் வெற்றி பெறும். திருச்சிக்கு செல்லும் பயணிகள் நிறுத்தங்களில் காத்திருக்கும்போது பேருந்து வருவதற்கு 5 நிமிடம் முன்னதாகவே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். நேரம் விரயமாவதைத் தடுக்க ஏ.டி.எம். கார்டு, கியூஆர் கோட் மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் வகையில் நடத்துநர்களுக்கு ஸ்வைப்பிங் மெஷின் வழங்கப்பட உள்ளது'' என்றார்.
இதுபோன்ற திட்டங்களால், சின்னச் சின்ன ஊர்களில் அரசுப் பேருந்து சேவை கிடைக்காமல் பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், சேவை மனப்பான்மையிலிருந்து விலகி, லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தடம் புரண்டு விடக்கூடாது என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
-இளையராஜா