டைப்பெடுத்த சாலைகள், பாலங்கள், ஏரிக்கரைகள் என தமிழகத்தில் வட மாவட்டங்களில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய பருவ மழை. தற்போதைய புயல், மழை மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை காலங்களின்போது வட தமிழகம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கடலூர் மாவட்டம் இயற்கைச் சீற்றத்தால் பெரிதும் பாதிப்புக் குள்ளாகி வருகிறது. கடந்த 2004-ல் சுனாமி, 2005-ல் நீலம் புயல், 2011-ல் தானே புயல், 2015-ல் வர்தா புயல், தற்போது பெஞ்சல் புயல்... இப்படி தொடர் பாதிப்புகள்.

nn

சில நாட்களாக காற்றழுத்தத் தாழ்வினால் தொடர்ச்சியாகக் கொட்டித் தீர்க்கிறது கனமழை. இதனால் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து எப்படி தப்புவது என்று வடதமிழக மக்கள் கலக்கத்தில் உள்ளனர். கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், போக்குவரத்து அமைச்சர் அரியலூர் சிவசங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வாரிவழங்கிவருகிறார்கள்.

ஆனால் மக்களுக்குத் தேவை நிரந்தரத் தீர்வு! வரும் காலங்களிலாவது இயற்கைச் சீற்றத்திலிருந்து எங்களைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள். சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கல்வராயன் மலை இங்கெல்லாம் பெய்யும் மழை நீர் மணிமுத்தாறு, பெண்ணை ஆறு, கெடிலமாறு, வெள்ளாறு, பரவனாறு, கொள்ளிடம் ஆறு, உப்பனாறு ஆகியவற்றின் வழியாகச் சென்று கடலூர் மாவட்ட கடல்பகுதியில் கலக்கின்றது. கடலூர் மாவட்டம் இயற்கையாகவே வடிகால் பகுதியாக அமைந்துள்ளது.

Advertisment

nn

கடந்த 2015-ஆம் ஆண்டு மழை வெள்ளப் பாதிப்பின்போது விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெரியகாட்டுப் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்துபோனார்கள். இந்த வெள்ள நீர், ஆறுகள் வழியாக வெளியேற முடியாமல் கரையோரமுள்ள விவசாய நிலங்களில் புகுந்து மண் மூடிவிடுகின்றன. மழைநீர் வடிந்த பிறகு அந்த நிலத்தை செப்பனிடுவதற்கு விவசாயிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

2011, தானே புயலால் பாதிக் கப்பட்டபோது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீராணம் ஏரியில் இருக்கும் உபரிநீரை கொள்ளிடம் ஆற்றில் கொண்டுசேர்க்கும் திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் செலவில் வீராணம் ஏரி வெள்ளநீர் சேகரிப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட காரணங்களால் தொடர்ந்து இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை காப்பாற்ற என்னதான் தீர்வு என்று கேட்டோம்.

Advertisment

nn

முன்பு ஆற்றின் கரைகள் உயரமாக இருந்தன. கரையில் சாலை வசதி ஏற்படுத்த கரைகளின் உயரத்தைக் குறைத்தனர் இதனால் கெடிலம் ஆற்றில் ஓடும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. அதேபோல் கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் பகுதிகள் மழை வெள்ள நீரில் தத்தளிக்கின்றன.

இதுகுறித்து விவசாய சங்க பிரமுகர் விநாயகம் நம்மிடம், “"வீராணம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 47.50 அடி. மழைக் காலங்களில் தண்ணீரை தேக்காமல், முன்கூட்டியே 40 அடிக்கு மேல் வரும்போது உடனடியாக உபரி நீரைத் திறந்துவிடவேண்டும். இதன்மூலம் பாதிப்பைக் குறைக்க முடியும். 2015-ஆம் ஆண்டு மழைக்காலத்தில் 40 அடிக்கு மேல் தண்ணீர் அளவு அதிகரித்தபோது உபரிநீரைத் திறந்துவிட அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அதுபோன்று தற்போது உத்தரவிட அதிகாரிகள் தயங்குகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம், தற்போது பெஞ்சல் புயல் மழையின்போது எழுத்துமூலமாக புகாரளித்தோம்.

ஆனால் அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. மழை அதிகரித்து இக்கட்டான தருணம் வரும்போது, அவசர அவசரமாக உபரிநீரைத் திறந்து விடுகிறார்கள். இப்படிச் செய்வதால்தான் கரையோர கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இன்னும் கூடுதலான அளவில் கொள்ளிடத்தில் தடுப்பணைகளையும் கதவணைகளையும் கட்டியிருந்தால், பல டி.எம்.சி. தண்ணீரையும் சேமித்திருக்க முடியும். வெள்ள அபாய இழப்புகளையும் குறைத்திருக்க முடியும்''” என்கிறார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரனோ, “"வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்யும் காலங்களில் மிகுந்த இடர்பாடுகளை மக்கள் சந்திக்கிறார்கள். தென்பெண்ணை, கெடிலம் போன்ற ஆறுகளின் கரைகளில் இருபுறமும் வலுவான கான்கிரீட் சுவர் எழுப்பவேண்டும். தற்போதைய நிலையில் விவசாயிகளின் விளைநிலங்கள் சுமார் 20,000 ஏக்கருக்கு மேல் சேறும் சகதியுமாக மண்மூடிக் கிடக்கின்றன. அவற்றைச் சீர்படுத்த அரசு உதவி செய்யவேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு "அருவாமுக்குத் திட்டம்'’என்று ஒரு திட்டத்தை உரு வாக்கினார்கள். அந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் பெரும் பாதிப்புகள் குறையும். வரும் காலங்களில் அரசு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக் கொண்டும், தனித்திட்டமாகவும் குடிமராமத்து பணி களை துவக்கி செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் ஏரிகள், குளங்கள் நிரம்பும். இதனால் வெள்ளப் பாதிப்புகள் குறைய வாய்ப்புண்டு.

nf

மேலும் நகர்மய விரிவாக்கம், பருவநிலை மாற்றம் இவற்றையெல்லாம் எதிர்கொள்வது சவாலானது. 50 மில்லி மீட்டர், 60 மில்லி மீட்டர் மழையெல்லாம் திடீரெனக் கொட்டித் தீர்க்கிறது. மழை நீரும் ஆற்று நீரும் சேர்ந்துதான் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இத்தகைய எதிர்பாரா மழையின் பாதிப்பைக் குறைப்பதற்கு அரசு விரைந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது மத்திய அரசினால் அனுப்பப்பட்ட ஆய்வுக் குழுவினரிடம் மேற்படி புள்ளி விவரங்களையும், வருங்ôலத்தில் மக்களை பாதுகாக்க என்னென்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதையும் எங்களுக்குத் தெரிந்த அளவில் எழுத்துமூலம் அவர்களிடம் கொடுத்துள்ளோம். மேலும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க இன்னும் எந்த மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தலாம் என்பது குறித்து பல்வேறு துறையினர்களைக் கொண்டு ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவருகிறோம்''” என்கிறார்.

"வரும் ஆண்டுகளில் கூடுதலாக ஆறுகள், ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வறட்சிக் காலங்களில் குடிநீருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் போராடும் நிலை உள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால் தண்ணீரைச் சேமிக்க தடுப்பணைகள், ஆக்கிரமிப் பிற்குள்ளான ஏரி, குளங்களை மீட்டெடுத்து அவற்றின் மழை நீர் தேங்குவதற்கு வழிவகை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்கள் தப்பலாம். வெயில் காலங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படாது'' என்கிறார் ஜீவானந்தம்.