எம்.பியானதால் வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குநேரி சட்ட மன்றத் தொகுதி, ராதாமணி எம்.எல்.ஏ மரணத்தால் காலியான விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல்கள், மாநிலம் முழுவதும் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் எது முதலில் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவிடம் சமீபத்தில் விவாதித்திருக்கிறார்கள் தலைமை தேர்தல் ஆணைய டெல்லி அதிகாரிகள்.
அப்போது, நீதிமன்றம் கண்டித்தாலும்கூட, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடவே அரசு விரும்புகிறது. அதனால் இடைத்தேர்தலை எப்போது நடத்த ஆணையம் தீர்மானிக்கிறதோ அப்போது நடத்தட்டும் என்கிற அரசின் விருப்பத்தை டெல்லிக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே, இடைத்தேர்தலின் தேதி குறிக்கப்பட்டது என்கிறார்கள் தேர்தல் ஆணைய தரப்பினர்.
தேதி அறிவிக்கப் பட்டதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடத்தில் பரபரப்பு தொற் றிக்கொண்டது. நாங்குநேரி தொகுதியை காங் கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, விக்கிரவாண்டி யில் தி.மு.க. போட்டியிடுவது என ஸ்டாலின் எடுத்த முடிவு, காங் கிரசாருக்கு ஆச்சரியம்தான். அதனால் அரசியல் களத்தில் பலவித யூகங்கள் வெளிப்படுகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ""நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் எழுதி மீடியாக்களுக்கு தந்ததால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமளவு நிலைமை இருந்தது. அ.தி.மு.க.வை எதிர்க்க தி.மு.க.தான் சரி என்பதே ஸ்டாலின் நிலைப் பாடாக இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க., நாங்குநேரியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. அப்படி இருந்தால், தி.மு.க.வை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு கஷ்டம், காங்கிரஸ் என்றால் ஜெயிக்கலாம் என நினைத்து, நாங்குநேரியை காங்கிரசுக்கு
விட்டுக்கொடுத்துவிடுங்கள் என தி.மு.க.விடம் பா.ஜ.க. வேண்டுகோள் வைத் திருக்க வாய்ப்புண்டு. பா.ஜ.க.வுக்கு ஒதுக் காமல் அ.தி.மு.க.வே போட்டியிடும் பட்சத் தில், அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எடப் பாடி பழனிச்சாமி யும் அதே பாணி யில் தி.மு.க. விடம் கோரிக் கை வைத் திருக்கலாம்'' என்கிறார் யூகமாக.
இடைத்தேர்தலை எதிர் கொள்வது குறித்து எடப்பாடியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தபோது, ""நாடார் சமூக பிரமுகர்கள் பலருக்கும் பல உயரிய பதவிகள் கொடுத்து கௌரவித் திருக்கிறது பா.ஜ.க. தலைமை. அதனால், காங்கிரசை ஆதரித்து நின்ற நாடார் சமூகம், தற்போது பா.ஜ.க.வை ஆதரிக்கிறது. இதனைச் சொல்லியே நாங்குநேரியை தங்களுக்கு ஒதுக்குமாறு ஓ.பி.எஸ். சிடம் கேட்டிருக்கிறது பா.ஜ.க. இதனை எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். சொல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நம்முடன் கூட்டணி வைக் கும் போதே, இடைத் தேர்தல் தொகுதிகளை பா.ஜ.க. கேட்கக் கூடாது என்கிற நமது நிபந்தனை யை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனடிப்படையில்தான் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் சீட் கேட்டு பா.ஜ.க. நெருக்கடி தரவில்லை. இப்போது நாங்குநேரியை விட்டுக்கொடுக்கச் சொல்வது சரியல்ல ’ என சொல்லி யுள்ளார். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் தனது ஆதர வாளரை நிறுத்த நினைக்கிறார் எடப்பாடி. ஆனால், இதற்கு ஓ.பி.எஸ். சம்மதிக்கவில்லை. அதே சமயம், தனது குடும்பத்தினருக்காக விக்கிரவாண்டியை கேட்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். இரு தொகுதிகளிலும் சீட் கேட்டு கட்சியின் வி.வி.ஐ.பி.கள் பலரும் மல்லுக்கட்டியதால் வேட்பாளரை முடிவு செய்வதில் ஏகத்துக்கும் நெருக்கடியை சந்தித்தார் எடப் பாடி'' என்கின்றனர்.
வேட்பாளர் தேர்வில் உளவுத்துறையின் உதவியை நாடி யிருந்தார் எடப்பாடி. இரு தொகுதிக்கும் அவர் குறித்துக் கொடுத்த தலா 4 வேட்பாளரை பற்றிய செல்வாக்கு நிலவரங்களை தந்தது உளவுத்துறை. அவர்கள் தரப்பில் நாம் பேசியபோது, ""தேர்தலில் வெற்றிபெற கூட்டணி வலிமை ஒருபுறமிருந்தாலும் வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதில்தான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி ஆட்சிக்கு எந்த வகையிலும் சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், எடப்பாடியின் இமேஜைக் காப்பாற்ற இரு தொகுதிகளின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தேவைப்படுகிறது. இதனை செய்தால்தான் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ளவும் முடியும். அதற்காகத்தான் எடப்பாடிக்கு வெற்றி அவசியமாகிறது.
தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது ஆளுந்தரப்பு. நாங்குநேரி யில் 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்களும், விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 வாக்காளர்களும் இருக்கின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலுமே சராசரியாக தலா 1 லட்சம் வாக்குகளை குறிவைக்கிறது அ.தி.மு.க. தலைமை. ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் என 30சி பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. இது தவிர, தோழமைக் கட்சிகள், உதிரிக் கட்சிகள், தி.மு.க.வின் அதிருப்தி யாளர்கள், சமூக அமைப்புகள், சாதி சங்கங்களுக்கென தனியாக 10 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வாய்ப்புக் கிடைக்கும் வேட்பாளர் தனியாக பெருந் தொகை செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஆலோசித்துள்ளனர். மேலும், ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் 8 ஆயிரம் வாக்குகள் பிரித்து தரப்படவிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரின் கீழ் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குழுவும் அமைக்கப் பட உள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதிலிருந்து பணப்பட்டுவாடா செய்வது வரை தனித்தனி குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன'' என அ.தி.மு.க.வின் வியூகங்களை விவரிக்கின்றனர்.
எதிர்க்கட்சியான தி.மு.க.வும் வெற்றியை குறிவைத்து களமிறங்கியுள்ளது. அறிவாலயம் தரப்பில் விசாரித்தபோது, ""இரு தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றம் வரப்போவ தில்லை என்பதால்தான் நாங்குநேரியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து டெஸ்ட் வைத்துள்ளோம். முடிவுகள் எப்படி வந்தாலும் எங்களுக்கு சாதகம்தான். காங்கிரஸ் வெற்றிபெற்றால் கூட்டணியின் வலிமை என சொல்லிக்கொள்ளலாம். தோல்வியடைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த இடங்களை அவர்களுக்கு கொடுத்து ஏற்க வைப்போம். மறுத்தால் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றுவோம்.
விக்கிரவாண்டியை பொன்முடியின் பொறுப்பில் கொடுக்கவிருக்கிறது தலைமை. உதயநிதியை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என விரும்பினார் பொன் முடி. இது குறித்து ஸ்டாலினிடம் பொன்முடி பேசிய நிலையில், தனது மகன் சிகாமணியை உதயநிதியிடம் விவாதிக்க வைத்தார். ஆனால், இடைத்தேர்தலில் உதயநிதியை நிறுத்தி ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என ஓ.எம்.ஜி. குரூப்பும் கட்சியின் சீனியர்களும் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர்.
இந்த நிலையில், எடப்பாடியின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என மக்களே தீர்ப்பளித்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்க விக்கிரவாண்டியின் வெற்றி ஸ்டாலினுக்கு அவசியமாக இருக்கிறது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற இமேஜும் கிடைக்கும் எனவும் தலைமை யோசித்துள்ளது. அதனால், ஆட்சியாளர்களின் பண விநியோகத்தை தடுப்பது ஒரு புறமெனில், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் வகையில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில் 20சி பட்ஜெட்டை போட திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கேற்ற வகையி லேயே வேட்பாளர் நிறுத்தப்படுவார். வன்னியர்கள் பெரும்பான் மையாக உள்ள தொகுதி என்பதால் அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ம.க.வின் வாக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வன்னியருக்கு வாய்ப்பளிக்கவும் ஆலோசனை நடந்தது. ஆனால், வன்னியர் என்றில்லை; தலைமை யாரை நிறுத்துகிறதோ அவரை ஜெயிக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார் பொன் முடி. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வி லுள்ள 65 மாவட்ட நிர்வாகி கள் என அனைவரையும் தொகுதிக்குள் களமிறக்க வியூகங்கள் வகுக்கப்பட்டுள் ளன'' என்று விவரித்தனர்.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சி களுக்கு அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவு கிடைத் திருக்கும் நிலையில், தினகர னின் அ.ம.மு.க.வும், கமல்ஹாச னின் மக்கள் நீதி மய்யமும் இடைத்தேர்தலை புறக்கணித் துள்ளன. இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு மிடையே போட்டி அதிகரித் துள்ளது. இந்த வலிமையான போட்டியை எதிர்கொள்ள களத்தில் குதிக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. வேட் பாளர்களின் இறுதிப் பட்டி யல் ரிலீஸானதும் சூடு பிடிக்க விருக்கிறது தேர்தல் களம்.
-இரா.இளையசெல்வன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர் & குமரேஷ்
புதுவை கூட்டணியில் போட்டா போட்டி!
புதுவை சட்டமன்ற சபாநாயகர் வைத்தியலிங்கம் எம்.பி.யாகிவிட்டதால் அவரது காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவதால், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட பா.ஜ.க. விரும்புகிறது. ஆனால், இதனை அ.தி.மு.க. ரசிக்கவில்லை. இந்த நிலையில், காமராஜ் நகர் தொகுதிக்கு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்தனியாக விருப்பமனு வாங்குவதை திங்கட்கிழமை தொடங்கினர். இருப்பினும், தொகுதியை கேட்டு அ.தி.மு.க. தலைமையிடம் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியது பா.ஜ.க.!