குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்த மூன்று வேட்பாளர் களும் அக்கட்சியினராலேயே தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் கே.எஸ்.மூர்த்தி. பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் நாமக்கல் மேற்கில் அடங்குகின்றன.

nn

Advertisment

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய சொந்தத் தொகுதியான பரமத்திவேலூரிலேயே கே.எஸ்.மூர்த்தியால் கரையேற முடியவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சர் தங்கமணியுடன் தன்னுடைய மணல் பிஸினஸூக் காக கே.எஸ்.மூர்த்தி நல்ல அண்டர்ஸ்டேண்டிங்கில் இருந்தார் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

இப்படியொரு குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளை யம் நகரங்களில் தலா மூன்று கோஷ்டிகள் உள்ளதாகவும், அதனால்தான் இந்த நகராட்சிகளில் தி.மு.க. தலைமை அறிவித்த நகர்மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள், சொல்லி வைத்தாற் போல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.

இதுதொடர்பாக குமாரபாளையம் தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம். ''குமாரபாளையம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலின்போது வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு சீட் தராமல், நகர பொறுப்பாளர் செல்வத்தின் பேச் சைக் கேட்டு, கட்சித் தலைமைக்கு வேட்பாளர் களைப் பரிந்துரை செய்து, ஒப்புதல் பெற்றார் மா.செ.

இதில் 31-வது வார்டில் வெற்றிபெற்ற விஜய்கண்ணன் இளைஞராக இருந்தாலும், முன்னாள் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர். அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் அவர், தி.மு.க.வில் சீட் எதிர்பார்த்துக் கிடைக்காத அதிருப்தியிலிருந்த 17 பேரையும் சுயேட்சைகளாகக் களமிறக்கினார்.

மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 14 வார்டுகளில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க. 10 இடங்களிலும், சுயேட்சைகள் 9 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். தலைவர் பதவிக்கு மா.செ. மூர்த்தியின் ஆதரவாளர் சத்தியசீலன் போட்டி யிட்டார். ஆனால் அவரைத் தோற்கடித்து, சுயேட்சை விஜய்கண்ணன் தலைவரானார்.

தலைவர் பதவியை தி.மு.க.வும், துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க.வும் எடுத்துக்கொள்ள தங்க மணியுடன் தி.மு.க.வினர் டீல் பேசி யிருந்தனர். இதை விரும்பாத தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர் சிலர், சுயேட்சைகள் விஜய்கண்ணனை ஆதரித்தனர். அவர் 18 வாக்குகளைப் பெற்று, குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் ஆனார்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 19 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 8, பா.ஜ.க. 1 இடத் திலுமாக வெற்றிபெற்றன. சுயேட்சை கள் 5 வார்டுகளில் வென்றனர்.

bb

Advertisment

நகரசபைத் தலைவர் பதவிக்கு, திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயனை வேட்பாளராக அறிவித்தது தி.மு.க. தலைமை. ஆனால் அவருக்கு எதிராக நடேசன் தரப்பு இறுதிக்கட்டத்தில் தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சுரேஷ்பாபுவின் மனைவி நளினியைக் களமிறக்கியது. மறைமுகத் தேர்தலில் நளினி சுரேஷ்பாபு 18 வாக்குகள் பெற்று, தலைவராக வெற்றிபெற்றார். இதுதொடர்பாக திருச்செங்கோடு தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ''இந்த நகரில் நடேசன் அணி, நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் அணி, மா.செ. மூர்த்தி அணி என மூன்று கோஷ்டிகள் உள்ளன என்றாலும், 40 ஆண்டாக கட்சியிலிருக்கும் நடேச னுக்கு செல்வாக்கு அதிகம்.

அவர் 8-வது வார்டில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருடைய விருப்ப மனுவைக்கூட தலைமைக்குக் கொடுக்காமல் இருட்டடிப்பு செய்து விட்டார் மா.செ. அதனால் மா.செ.வுக்கு நோஸ்கட் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளரைக் களமிறக்கினார் நடேசன்'' என்கிறார்கள் தி.மு.க.வினர்.

பள்ளிபாளையத்திலும் இதே கூத்துதான் அரங்கேறியிருக் கிறது. இந்த நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மேலிடம் நகரமன்றத் தலைவர் பதவிக்கு அமுதா வை நிறுத்தியது. இவர், தி.மு.க. நகர பொறுப்பாளர் ரவிச்சந்திர னின் உறவுக்காரர். இங்கும் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து, கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்து வரும் செல்வராஜைக் களமிறக்கியது வெப்படை செல்வராஜ் தரப்பு. கடைசியில் செல்வராஜ் வெற்றிபெற்று தலைவரானார்.

குமாரபாளையம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் என நாமக்கல் மேற்கு மாவட்டத்திலிருக்கும் மூன்று நகராட்சிகளிலும் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளர்களை அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தோற்கடித்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, ''நாமக்கல் மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை பள்ளிபாளையம் முன்னாள் ஒ.செ. வெப்படை செல்வராஜ், திருச்செங்கோடு நடேசன் ஆகியோர் வலுவாக இருக்கின்றனர். மூன்று நகராட்சிகளிலும் தலைமை நிறுத்திய வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டிருப்பது மா.செ.வுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது'' என்கிறார்கள் தி.மு.க. சீனியர்கள்.