அறந்தாங்கி நகரை ஒட்டியுள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூக்குடி கிராமத்தில் 1957-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக ஓட்டுக் கட்டடத்தில் தொடங்கி, தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிக்கு கட்டிய வகுப்பறை கட்டடம் குறுகிய காலத்திலேயே சிதிலமடைந்து விட்டதால் பல வருடங்களாக பள்ளியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள சமுதாயக்கூடம், அதன் முன்புள்ள மரத்தடியில் 6, 7, 8ஆம் வகுப்புகள் நடந்து வந்தன. ஒவ்வொரு நாளும் பிரேயர் முடிந்ததும் மதிய உணவுக்கு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குச் சென்று மீண்டும் சமுதாயக் கூடத்திற்கு திரும்பவேண்டிய அவல நிலை. இதுகுறித்த செய்தியை கடந்த 2022 ஜூன் 16-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் வீடியோ செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
நக்கீரன் இணைய செய்தியைத் தொடர்ந்து அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 வகுப்பறை கட்டடம் கட்ட நிதியொதுக்கிய நிலையில், புதிய கட்டடம் கட்டும் இடத்தை கிராம மக்கள் தேர்வு செய்து பள்ளமான பகுதிக்கு மண் நிரவிக்கொடுத்தனர். புதிய இடத்தில் 2 வகுப்பறைக் கட்டடம் கட்டி சட்டமன்ற உறுப்பினர் திறந்துவைத்தார்.
இதன்பிறகும் மாணவர்கள் நெருக்கடியான ஓட்டுக்கட்டடத்தில் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் சேர்க்கை குறையத் தொடங்கியது. இதனைப் பார்த்த அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் கல்வி அலுவலர் (ஓய்வு) நடராஜன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் பாரதியிடம், “""நான் படித்த பள்ளி இப்படி வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நான் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைத் தருகிறேன், உடனே வகுப்பறைகள் கட்டுங்கள்''’என்று சொல்ல உடனே பள்ளித் தலைமை ஆசிரியர் பாரதி, சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தைக் கூட்டி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியபோது பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ""நடராஜன் அய்யா கொடுக்கும் ரூ.7 லட்சம் தொகையை நமக்கு நாமே திட்டத்தில் செலுத்தி னால் அரசின் பங்குத் தொகையும் சேர்த்து ரூ.21 லட்சத்தில் கட்டடம் கட்டலாம்'' என்று கூறினார். கல்வித்துறை அதிகாரிகளை பள்ளிக்கே அழைத்து நமக்கு நாமே திட்டத்திற்கான பங்குத் தொகையை ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி கொடுக்க, அடுத்த சில மாதங்களில் ரூ.21 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. கட்டடத்துக்கு முன்பு ரூ.80 ஆயிரம் செலவில் தகரசெட்டும் அமைத்துக் கொடுத்துள் ளார் நடராஜன்.
பள்ளி திறப்புவிழாவில் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தான் படித்த பள்ளி வளரவேண்டும் என்று உதவிகள் செய்துள்ள தன்னார்வ கொடையாளர்களைப் பாராட்டியதுடன் பள்ளி வளாகம், நடைபாதைக்கு பேவர் பிளாக் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் உறுதியளித்துள்ளார்.
அதே பள்ளியில் படித்து சிங்கப்பூரில் பணியாற்றும் கொ.வெ. செந்தில்குமார், அரசுப்பள்ளி ஆசிரியர் கொ.வெ.ஆறுமுகம் குடும்பத்தினர் தங்கள் பங்களிப்பும் பள்ளியில் இருக்கவேண்டும் என்று தாங்களாக முன்வந்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ.10 லட்சம் பங்குத் தொகை செலுத்தி, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடம் கட்டி கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகத்தை அழைத்துவந்து திறந்துவைத்தனர். பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் கட்டடமாக கலையரங்கம் கட்டும் பணியும் செய்துவருகின்றனர். பூங்கா அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல கிராம மக்கள் பள்ளி வளாகத்திற்கு முள்வேலி அமைத்துக் கொடுக்க, சேகர் என்பவர் மாணவர் களின் சைக்கிள்கள் நிறுத்துமிடம் அமைத்துக்கொடுத்துள் ளார். விரைவில் அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளும் விரைந்து நடக்கும் என்கின்றனர்.
நடராஜனிடம் நாம் பேசியபோது, ""நான் படித்த பள்ளிக்கூடத்தில் இப்ப படிக்கும் குழந்தைகளுக்கு வகுப்பறைகள் இல்லாமல் அங்கேயும் இங்கேயும் அலைவதைப் பார்த்து வேதனையாக இருந்தது. மாவட்டக் கல்வி அலுவலரை பள்ளிக்கே அழைத்து எனது பங்குத் தொகை ரூ.21 லட்சத்தைக் கொடுத்தேன். சில மாதங்களில் புதிய 2 வகுப்பறை கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு அமைச்சர் மெய்யநாதனை அழைத்து திறந்து வைத்தோம்''’என்றார்.
பள்ளி கட்டடம் கட்டிக்கொடுத்த கொ.வெ.செந்தில் குமார், ஆசிரியர் கொ.வெ.ஆறுமுகம் ஆகியோர், “""நாங்களும் இந்தப் பள்ளியில் படித்து நல்ல நிலையில் இருக்கிறோம். வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் தவிப்பதை நக்கீரன் வீடியோவில் பார்த்தோம். அப்பவே நாம படிச்ச பள்ளிக்கு ஏதாவது செய்யணும் என்று எங்கள் குடும்பத்தினரிடம் பேசி னோம். நமக்கு நாமே திட்டத்தில் ரூ.10 லட்சம் செலுத்தினோம். இப்ப ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திறந்து வைத்திருக் கிறார். நாம படிச்ச பள்ளிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சி''’என்றனர்.