"போலி பட்டுப் புடவைகள், நெசவாளர்களின் கண்ணீர் கதைகள்!' என்ற தலைப்பில் கடந்த 17.07.2024 இதழில் விரிவான செய்திக் கட்டுரையை நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், கைத்தறி நெசவாளர்களின் துயரக் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? எனக் கேள்வி எழுப்பியிருந்தோம்.

Advertisment

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, மத்திய ஜவுளித்துறை சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி மனோகரன் தலைமையில், ஜவுளித்துறை நெசவாளர் சேவை மைய இணை இயக்குநர் சசிகலா, மாவட்ட கைத்தறி பிரிவு ஆய்வாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஆய்வுக்காக ஆரணி வந்தனர். ஆரணியில் உள்ள விசைத்தறிக் கூடங்களில் திடீரென நடத்திய ஆய்வில், லட்சுமிபுரத்தில் பன்னீர்செல்வம் என்பவர் தனது நிறுவனத்தில் விசைத்தறியில் பட்டுப்புடவை நெய்வதை கண்டறிந்தனர். கைத்தறியில் நெய்யவேண்டிய பட்டுச்சேலையை விசைத்தறியில் நெய்வதைக் கண்டு அதிர்ச்சியாகி அதற்கு சீல் வைத்தனர்.

Advertisment

ss

அதேபோல் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, செய்யார் கிழக்கு மாடவீதியில் பாண்டியன் என்பவர் நடத்திய விசைத்தறிக் கூடத்தில் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தி செய்வதைக் கண்டனர். ஆதாரத் துக்காக, பிங்க் கலர் புடவையை கட் செய்து எடுத்துக் கொண்டனர். அதோடு, பாண்டியனின் விசைத்தறிக் கூடத்துக்கும் சீல் வைத்தனர்.

இதுகுறித்து செய்யார் கம்பன் கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேசன் நம்மிடம், "சுமார் 50 முறை எம்.எல்.ஏ., அமைச்சர், கலெக்டர் என நாங்கள் எத்தனையோ பேரிடம் மனு தந்தோம். ஒருமுறையும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. நக்கீரனில் எங்கள் துயரம் குறித்து செய்தி வந்தபின் அதனை அடிப்படையாகக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இப்போது ஆரணி, செய்யாரில் இரண்டு விசைத்தறிகளுக்கு சீல் வைத்து, அவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடச் செய்துள்ளார்கள். இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட உங்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதிகாரிகள் வந்து ரெய்டு செய்ததும், விதிகளை மீறி விசைத்தறியில் கைத்தறி ரகங்களை தயார் செய்தவர்கள் அவசரமாகக் கம்பெனிகளை மூடிவிட்டுப் போய்விட்டார்கள். இதனால் முழுமையான ஆய்வை அதிகாரிகளால் நடத்த முடியவில்லை எனச் சொன்னார்கள். இதோடு அப்படியே நிற்காமல் அதிகாரிகள் மாதம் இருமுறை ரகசியமாக ஆய்வுக்கு வந்து விதிகளை மீறி செயல்படும் விசைத்தறிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அப்போதுதான் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும்'' என்றார்.

Advertisment