அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைத்தது, கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது, உலகில் அதிகமாகப் பேசப்பட்டது வாட்டர்கேட் ஊழல். 1972ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். இவரது பதவிக்காலம் முடிந்து அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது, மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்க குடியரசு கட்சி நிக்சனையே நிறுத்தியது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென வேலைத்திட்டங்களையும், வியூகங்களையும் முன்னெடுத்த நிக்சன், தேர்தல் வேலையை தீவிரமாக செய்வதற்கு கமிட்டி ஒன்றை உருவாக்கினார்.
தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமெரிக்க ஜனநாயக கட்சியின் தேர்தல் வேட்பாளரின் அலுவலகக் கட்டடமான வாட்டர்கேட்டின் உள்ளே காவலுக்கு இருந்த காவலாளிகளுக்கே தெரியாமல் ஐந்து திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ஐந்து திருடர்களும் கட்டடத்தின் உள்ளேயிருந்து வெளிவந்தபோது காவலாளிகளிடம் மாட்டிக்கொண்டனர்.
அந்த ஐந்து திருடர்களையும் தீவிரமாக விசாரித்தபோது தான் அவர்கள் நிக்சனின் தேர்தல் கமிட்டியினர் அனுப்பிய கூலிப்படையினர் என்பது தெரிய வருகிறது. அதாவது நிக்சனை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என்ன மாதிரியான வியூகங்களை அமைக்கிறார் என்றும், என்ன மாதிரியான பிரச்சாரங்களைச் செய்யப் போகிறார் என்பதையெல்லாம் ஒட்டுக் கேட்பதற்காக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போன்ற சிறிய சட்டை பட்டன் அளவில் இருக்கும் ஒட்டுக் கேட்பு கருவிகளை வாட்டர்கேட் கட்டடத்தின் பல பகுதிகளில் ஒட்டி வைப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவருகிறது. ஆனால், அப்போது இந்த விசயம் எதுவும் பெரிதாய் வெளியே வராமல் பார்த்துக்கொண்ட நிக்சன், மீண்டும் தேர்தலில் அமோக வாக்கு வித்தியா சத்தில் வெற்றிபெற்று அமெரிக்காவின் ஜனாதி பதியாகிறார்.
ஆனால், வாட்டர் கேட் விவகாரம் ஓய வில்லை. அமெரிக்காவின் தலைநகரில் வெளிவரும் ‘"வாஸிங்டன் போஸ்ட்'’ பத்திரிகையாளர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டீன் ஆகியோர் இந்த செய்தியை துப்பறிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட ஆரம்பிக்கிறார்கள். இதற்கு விளக்கம் அளித்த நிக்சன், "எனது தேர்தல் கமிட்டியினரும் அதன் அலுவலர்களும் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படியொரு கீழ்த்தரமான வேலையை செய்துவிட்டனர்'' என்று கூறி, தனக்காக வேலை செய்தவர்களை பலிகடாவாக்கி விசாரணை எதிலும் கலந்து கொள்ளாமல் தப்பித்துவந்தார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கும், அங்கே இருக்கும் உயர் அதிகாரிகளுக்குமிடையே நடைபெறும் உரையாடல்கள் அனைத்தும் டேப் ரெக்கார்டர் மூலமாக பதிவு செய்யப்படும் என்பதை அறிந்த நீதிமன்றம், வாட்டர்கேட் பற்றி ஆலோசனை நடத்திய கேசட்டுகளை தருமாறு கேட்கிறது. நிக்சனோ, அந்த கேசட்டுகள் நாட்டின் பாதுகாப்பு அடங்கிய விசயங்கள் பேசப்பட்டிருக்கும் என்று தர மறுக்க... நிக்சனை விடாமல் தொந்தரவு செய்தது நீதிமன்றம். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்த நிக்சன், தன்னுடைய பேச்சுகளை மட்டும் அழித்துவிட்டு கேசட்டுகளை ஒப்படைத் திருக்கிறார். நீதிமன்றம், தொழில்நுட்ப வல்லுனர் களை வைத்து அவரது அழிந்த குரலை மீட் டெடுத்துவிட்டனர். இறுதி யாக மாட்டிக்கொண்ட நிக்சன், தனக்கு சிறைத் தண்டனை அளிக்காமல் மன்னித்துவிடுமாறு கெஞ்சி, தன்னுடைய ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறார். 1974-ஆம் ஆண்டு, தன்னுடைய பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியிலிருந்து விலகிய முதல் அமெரிக்க ஜனாதிபதி என வரலாற்றின் அழுக்குப் பக்கத்தில் ரிச்சர்ட் நிக்சன் இடம்பெற்றார்.
இதைப் போலவே தமிழகத்திலும் நடந்த ஒரு ஊழலை நமது நக்கீரன் வெளிக்கொண்டு வந்தது. 1991 -1996ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டெலிபோன் ஒட்டுக்கேட்பு ஊழலை தமிழகத்தின் வாட்டர்கேட் ஊழல் என்று நக்கீரன் வெளியிட்டது. முக்கிய தலைவர்கள், அரசியல் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அரசியல்வாதிகளின் தனியுரிமையில் அத்துமீறி கை வைத்த அ.தி.மு.க. அரசினை, நக்கீரன் அம்பலப்படுத்தியது. இந்த ஊழல் தமிழக அரசியலில் பதட்டத்தையும். பரபரப்பையும் உண்டாக்கியது. இதற்கு எதிர்வினையாக நக்கீரன் ஆசிரியர் உட்பட மூன்று பேரை கைது செய்தது தமிழக காவல்துறை.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (எங்பசஆ) 38-வது தமிழ் விழா மற்றும் முதலாம் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சி அமெரிக்காவில் வடகரோலினாவில் நடைபெற்றது. பெருந்திரளாக தமிழ்ச் சான்றோர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியரும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்தப் பயணத்தின்போது 1974ஆம் ஆண்டு பிரபல ஊழல் நடந்த இடமான ’வாட்டர் கேட்’ ஹோட்டலுக்கு உலக வங்கியில் பணிபுரியும் கிஷோர்சிங், ஹோட்டல் தொழில் அதிபர் அலெக்ஸ் ஆகியோர் நக்கீரன் ஆசிரியரை அழைத்துச் சென்றனர். அமெரிக்காவை அதிரவைத்த ஊழலுக்கு அடையாளமாக நின்ற அந்தக் கட்டிடத்தின்முன் தமிழகத்தில் அடையாளம் தெரியாமல் போயிருக்கக்கூடிய பல ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த நக்கீரன் ஆசிரியர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். வாட்டர்கேட் ஊழலை வெளிக்கொண்டு வந்து நிக்சன் பதவி விலகக் காரணமாக இருந்ததும் ஒரு பத்திரிகைதான். 1991-96 காலகட்டத்தில் நடந்த பல ஊழல்கள், அரசின் அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது நம் நக்கீரன்தான்!