"சரக்கும் இல்லை;… கஞ்சாவும் இல்லை,… புதிய போதையில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்' என்ற அதிர்ச்சித்தகவல் நக்கீரனுக்கு கிடைக்க ஆராய ஆரம்பித்தோம்.

ஏற்கனவே, புதுக்கோட்டை புதுக்குளத்தின் கரையில் போதை இளைஞர்கள் பயன்படுத்தி வந்த ஊசிகள், மருந்துப் புட்டிகள் கிடந்ததை "நக்கீரன்' அம்பலப்படுத்தியது. அப்போது, அறந்தாங்கி அருகில் அறுவை சிகிச்சை அரங்கே இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் வலி மற்றும் மயக்க மருந்துகளை குடோனில் இருந்து வாங்கி, போதைக்காக அரசியல் வி.ஐ.பி.களுக்கு விற்றுவந்தது தெரியவந்தது.

dd

கடந்த மாதம் புதுக்கோட்டை நகரில், அறுவை சிகிச்சையின்போது வலி நிவாரணியாக பயன்படுத்தும் ஊசி, மாத்திரைகளை போதைக்காக இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்த ஒரு பெண்ணை... மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் உத்தரவின் பேரில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த நிலை யில், "புதுக்கோட்டையில் இருந்து இன்னொரு கும்பல், அறந்தாங்கி பகுதி இளைஞர்களை குறிவைத்து புறப்பட்டுள்ளது' என்ற தகவல் கிடைத்தது. செப்டம்பர் 30-ஆம் தேதி அறந்தாங்கி அருகில் உள்ள அரசர் குளத்தில்,… புதுக்கோட்டை முன்னாள் ஆணழகன் ரியாஷ்கான் (வயது 22), ஜெகன் (வயது 34) ஆகிய இரு இளைஞர்களை நாகுடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் நவீன் பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் ஏராள மான வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள் இருந்தன.

Advertisment

அவர்களிடம் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா தலைமையிலான டீம் தொடர்ந்து விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை பானுமதி, வினோத், வாசு மற்றும் இவர்களுக்கு மாத்திரை, ஊசிகளை சப்ளை செய்யும் திருப்பூர் கௌதம்ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்தது. 3.75 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 2,500 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். ஒரு மாத்திரையை 18 ரூபாய்க்கு வாங்கி இளைஞர்களிடம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் "நக்கீரன்' இணையத்தில் இதுகுறித்து செய்திகள் வெளியிட்டிருந்தோம். இதைப் படித்த, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு " "நக்கீரன் இணைய' செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி "இந்தியா முழுவதும் இந்த நெட்ஒர்க் நடக்கிறது, உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள்' என்று பரிந்துரைக்க... அதன்படி தகவல்கள் பறந்தன.

dd

Advertisment

புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ், "போதை மருந்துக் கும்பலை உடனடியாக பிடித்து இளைஞர்களை மீட்க வேண்டும்' என்று அதிரடி உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லையில்தான் போதைக்காக கஞ்சா, ஊசி, மாத்திரை, மருந்துகள் அதிகமாக விற்கப்படும் தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப் படை போலீசார் பெரியகுளம் மியூசியம் பிரபாகரன் (வயது 27), ரெட்டைக்குளம் பியூசியம் சுகு (எ) சுகுமார் (வயது 27), சங்கரமடம் தர்மா (வயது 25), ஆர்ஜிபுரம் ராசேந்திரன் (வயது 24), நரிமேடு சமத்துவபுரம் சதீஸ்வரன் (வயது 26), பாண்டியன் (வயது 24) ஆகிய 6 பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து இளைஞர் களிடம் போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்த வலி நிவாரணி மாத்திரைகளையும், ஊசி மருந்து களையும் பறிமுதல் செய்தனர். 15 நாட்களில் போதைக்கான மருந்து மாத்திரை விற்றவர் 13 பேரை கைது செய்துள்ளனர் புதுக்கோட்டை போலீசார்.

மேலும் பலரைக் கைது செய்யப்பட... நடவடிக்கை தொடர் கிறது.

போதைக் கும்பலை கைது செய்த போலீசார் நம்மிடம், ""டாஸ்மாக் சரக்கைவிட மிகவும் ஆபத்தான மாற்றுப் போதைக்கு இளைஞர்களையும் மாணவர்களையும் மாற்றி வருகிறார்கள். மாற்றுப் போதைக்கு அடிமையான இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் காதலிகளையும் பெண் தோழிகளையும் அதே போதைக்கு அடிமையாக்கி சீரழித்துவருகிறார்கள். வடகாடு காவல் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு மாணவிகள் தள்ளாடியபோது அவர்களை சோதனை செய்ததில்... போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இதே மாற்றுப் போதையோடு விபத்தில் சிக்கியும் சில இளைஞர்கள் இறந்துள்ளனர்.

dd

கீரமங்கலம் காவல் எல்லையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா, மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது. ""சில மாதம் முன்னாலதான் பிடிக்கப்பட்டாங்க. அவங்களை அவங்க பெற்றோர் வந்து மீட்டுச் சென்றார்கள். சில மாணவர்கள் போதைக்காக தங்கள் பெற்றோரையே தாக்க முயன்றுள்ளனர். இப்படி கிராமங்கள் நோக்கியும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டது'' என்றார்கள் வேதனையோடு.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நம்மிடம், “""மாற்றுப் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் என்ற தலைப்பில் நக்கீரன் இணைய செய்தி பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நம்ம சொந்த ஊரில் இப்படி இளைஞர்களை சீரழிக்கிறார்களே என்று உடனே நக்கீரன் இணைய செய்தியை மத்திய புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அலர்ட் செஞ்சதோட இந்தியா முழுவதும் நடவடிக்கைக்கு ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.க்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த 2 நாட்களில் இந்தியா முழுவதும் போதைக்காக ஊசி, மாத்திரைகளை விற்ற 78 பேரை கைது செய்துவிட்டார்கள். அதேபோல் மிசோரமில் மட்டும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் நெட்வொர்க் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை கண்டு பிடிச்சாச்சு. விரைவில் மொத்த கும்பலையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வு நடத்த இருக்கிறோம். என் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்த நக்கீரனுக்கு நன்றி'' என்றார்.

dd

"இந்த மாற்றுப் போதையால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற கேள்வியோடு உளவியல் நிபுணர் டாக்டர் இக்பால் ஷெரீப்பிடம் நாம் கேட்டபோது... ""இன்று போதை என்பதே ஒரு நோய். அதிலிருந்து மீளமுடியாமல் பலர் தவிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் மறுவாழ்வு மையங்கள் உள்ளன. மது போதைக்கு அடிமையாவது ஒரு பக்கம் என்றால், இன் னொரு பக்கம் இன்றைய இளைஞர்களை குறிவைத்து ஒரு கும்பல் வலி நிவாரணி மாத்திரை, மருந்துகளை போதை ஊசி என்று அதிக விலைக்கு விற்று சம்பாதிக்கிறது. ஓர் இளைஞன் ஒரு மாத்திரை சாப்பிட்டால் 4 மணி நேரம் அந்த மயக்கம் இருக்கும். போகப்போக... அதிக மாத்திரைகளை பயன்படுத்தவேண்டியிருப்பதால் அவன் வெறிகொண்டவனாகிவிடுவான். தனக்கு அந்த போதை கிடைக்கவில்லை என்றால் பெற்ற தாயானாலும் தகப்பனானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டான்.

மாத்திரைகளை கரைத்து ஊசிமூலம் உடலில் ஏற்றும்போது நரம்பில் ரத்த அடைப்பு ஏற்படும். அதனால் ஆங்காங்கே தோல் கருகும். மாத்திரைகள் அதிகம் உட்கொள்ளும்போது முதலில் லிவர் பாதிக்கும். பிறகு நடுக்கம், தலைசுற்றல், படபடப்பு, தலைவலி, மயக்கம், கனவு, மாய உருவங்கள் கண்முன்னே வந்து பேசும். அந்தக் குரல்கள் தற்கொலைக்குத் தூண்டும். தொடக்கத்திலேயே அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணமாக்கிவிடலாம். முழுவதும் அடிமையாகி விட்டால் அவர்களுக்கு தொடர்சிகிச்சை செய்யவேண்டி வரும்.

இந்த மருந்து, மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு ஏற்படும். லிவர் பாதிக்கப் படும், கிட்னி செயல் இழக்கும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கப்பட்டு உடல் முழுமையாக மெலிந்து கருத்து மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு வந்துவிடும். அடுத்தகட்டமாக உயிருக்கும் ஆபத்து ஏற்படும். "இதுபோன்ற வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டர் சீட்டு இல்லாமல் யாருக்கும் கொடுக்கக்கூடாது' என்ற கட்டுப்பாடு அதிகம் தேவை. அப்போதுதான் இந்தக் கும்பல்களிடமிருந்து இளைஞர்களையும், மாணவ-மாணவிகளையும் காப்பாற்ற முடியும்'' என்றார் ஆலோசனையாக.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், ""இளைஞர்களை மாற்றுப்போதைக்கு அடிமையாக்கிவரும் கும்பலை பிடிப்பது மட்டுமல்ல... பின்னணியில் இருக்கும் ஃபார்மா சிட்டிகல் மாஃபியாக்களையும் கைதுசெய்வோம்'' என்றார் அதிரடியாக.

-இரா.பகத்சிங்