நாகர்கோவிலில் காசி என்பவன், பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் என 90-க்கும் மேற்பட்டவர்களைத் தன் வலையில் வீழ்த்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்து வந்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் வர, போஸ்கோ சட்டம், குண்டர் சட்ட மெல்லாம் பாய்ந்து கைதாகி அவனும், கூட்டாளி டைசன் ஜினோவும் நாகர் கோவில் சிறையில் அடைபட்டுள்ளனர்.
காசி உள்ளிட்ட 7 கூட்டாளிகள் செய்த பாலியல் குற்றங்களைப் புலனாய்வு செய்து, நக்கீரன் தொடர்ந்து செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. பெண்கள் தொடர்பான பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், தன்னைக் காப்பாற்றுவதற்கு சிலர் வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையோடு, கட்சி பேதமில்லாமல் சில அதிரடி வழக்கறிஞர்களோடு அவன் பழகி வந்தான். இந்த அளவுக்கு கிரிமினல் புத்தியோடு, திட்டமிட்டே பெண்களைச் சீரழித்த ஒருவனுக்காக, நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது தெரிந்தவுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து குமுறல் வெளிப்பட்டது. ‘காசி போன்ற கொடூரன்களை தயவுதாட்சண்யம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும். இவனை தூக்கில் போட்டாலென்ன? என்கவுன்டரில் சுட்டுக் கொன்றால் என்ன?’ என்று நாகர்கோவில் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆஜராகமாட்டோம் என அங்கு வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்ததுபோல், நாகர்கோவிலிலும் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்த் தார்கள்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது பெற்றோர், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் குரலையும் எதிரொலித்தார் நக்கீரன் ஆசிரியர். யூடியூபில் ஆசிரியர் பேசிய வீடியோவை பார்த்துவிட்டு, "இதைத்தான் பண்ணனும்; இப்படித்தான் பண்ணனும். காசியை விட்டு வைக்கக்கூடாது' என்று பின்னூட்டங்களில் கொதித்து வருகிறார்கள், பார்வையாளர்கள்.
இந்நிலையில், தனது வீடியோ உரையில் காசிக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் தி.மு.க. வழக்கறிஞர்கள் வேகம் காட்டுகிறார்கள் என நக்கீரன் ஆசிரியர், எந்த வழக்கறிஞரின் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். இது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க- பா.ஜ.க. அரசியல் மோதலாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
நாகர்கோவில் நகர திமுக செயலாளரும், வழக்கறிஞருமான ஆர்.மகேஷ், ""நக்கீரன் யூடியூப் பதிவில் பொள்ளாச்சி சம்பவம் போலவே, நாகர்கோவிலில் காசி என்பவர் நடத்திய களியாட்டத்தை மிகவும் திறமையாக வும், துணிச்சலாகவும் பதிவு செய்திருந்தார் அண்ணன் கோபால். அவர், வழக்கறிஞரின் பெயரைச் சொல்லவில்லை. இருப்பினும் இந்தப் பதிவை வெளியிடுகிறேன். ஏனென்றால், வக்கீல் ‘மகேஷ்’ என்று இனிஷியல் போடாமல், காசிக்காக வாதாடுகிறார் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதைப் படித்த பல நண்பர்கள் அலைபேசியில் என்னை அழைத்து, ‘காசிக்காக நீயா வாதாடுகிறாய்?’ என்று கேட்டார்கள். இல்லை என்று சொன்ன நான், அந்த நாளிதழின் ஆசிரியரைத் தொடர்புகொண்டு, "இனி காசிக்காக வாதாடும் வழக்கறிஞரின் பெயரை வெளியிடும்போது இனிஷியலோடு வெளியிடுங்கள்' என்று கேட்டுக்கொண்டேன். அவரும், "அப்படியே செய்கிறேன்' என்றார். காசி என்ற கொடியவனுக் காக நீதிமன்றத்திலே ஆஜரானது என் பெயரை உடைய அ.தி.மு.க. வழக்கறிஞர்தான்''’என்று விளக்கம் தந்து வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷும், ""நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள், நாகர்கோவில் வழக்கறிஞர் கள், பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் போல செயல்படவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் எண்ணியதை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம். சங்க உறுப்பினர்கள் யாரும், காசி மற்றும் அவனது கூட்டாளிகளுக்காக வாதாட மாட்டோம். இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கான முயற்சியை முன்னின்று செய்தவர் தி.மு.க. வழக்கறிஞர் மகேஷ்தான்''’ என்று வீடியோவில் பேசினார்.
நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் நம்மிடம்,“""கொடியவன் காசி கைது செய்யப்பட்டது கொரோனா நேரத்துல என்ப தால், வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி உடனே முடிவெடுக்க முடியவில்லை. ஏனென்றால், கோர்ட் காம்ப வுண்டுக்குள் வழக்கறிஞர் கள் யாரும் செல்ல முடியாததுதான். இப்போது, காசிக்காக வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். இதற் குக் காரணம், நக்கீரன் ஆசிரியர் பேசிய யூடியூப் பதிவுதான்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
எந்தெந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்று எந்த ஒரு சட்டத் திலும் இல்லைதான்! ஆனாலும், பெண்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, கொடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட காசி போன்றவர்களுக்காக, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என்று சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, போற்றுதலுக்குரிய மனிதநேயச் செயலே. நக்கீரனின் கோரிக்கையை செயலாக்கும் விதத்தில் முடிவெடுத்த வழக்கறிஞர்கள் ஆர்.மகேஷ், ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி.
-ராம்கி