அந்தரங்கத்தில் தொங்கும் நிர்வாகம்!
""தமிழகத்தில் பல மேம்பாலக் கட்டுமானப் பணிகள் அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சூழலில் உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் புதுச்சேரியும் தொங்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய நோயாளிகள் 10 கிலோமீட்டர் சுற்றிச் செல்லவேண்டிய நிலை இருப்பதால், பல உயிர்களை இழக்கவேண்டியுள்ளது'' என்று குற்றம்சாட்டுகிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல். புதுவை-விழுப்புரம் சாலையிலுள்ள அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, 778 மீட்டர் நீளத்துக்கு 28.98 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கடந்த 2016-ஆம் ஆண்டு பணியை தொடங்கி இன்னும் முடிக்காதது குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியிடம் நாம் கேட்டபோது... ""முந்தைய என்.ஆர். காங்கிரஸ் அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தாமல் போனதுதான் காரணம். தற்போது தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கான புதுச்சட்டத்தை அமல்படுத்தி, கூடிய விரைவில் பாலத்தை கட்டிவிடுவோம்''’என்றார் நம்மிடம்.
கவர்னர் பிரச்சினை, எதிர்க்கட்சிகள் பிரச்சினை, சொந்தக்கட்சிப் பிரச்சினை என அந்தரத்தில் தொங்கும் நிர்வாகத்துக்கு நடுவே மேம்பாலத்தையும் கவனிங்க சி.எம்.
-சிவரஞ்சனி
இங்கும் ஒரு தூத்துக்குடி!’
""மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கும் நாகை மாவட்டம், நாகூர் அருகிலுள்ள கீழவாஞ்சூர் கிராமத்தில் 630 பரப்பளவில் மார்க் நிறுவனத்துக்கு சொந்தமான காரைக்கால் துறைமுகம் உள்ளது. ஜி.ஆர்.கே. ரெட்டிதான் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்தோனேசியாவிலிருந்து பல வருடங்களாக இத்துறைமுகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இறக்குமதி செய்யும்போது கன்வேயர் பெல்ட் போன்ற கருவிகள் இல்லாமல் கரைக்கு கொண்டுவரப்பட்டு திறந்தவெளியில் நிலக்கரி கொட்டப்படுவதால், நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுகிறது. கடந்தஆண்டு காரைக்கால் துறைமுகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, மாவட்ட சப்-மாஜிஸ்திரேட் விசாரணையில் 59 பேர் சுவாசக்கோளாறு, நுரையீரல் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது'' என்று கடுமையாக குற்றஞ்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள். இது குறித்து நக்கீரன் பலமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
கீழவாஞ்சூர் கிராமத்தின் பஞ்சாயத்து பொருளாளர் முருகேசன், ""துறைமுகம் அமைத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்னாங்க. நுரையீரல் பாதிப்புகளும் புற்றுநோய்களும் வந்து வாழ்க்கையையே இழந்ததுதான் மிச்சம். விதிமுறைகளை மீறும் துறைமுக நிர்வாகத்துக்கு எதிராக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் துணை நிற்கிறது. ஒன்பது வருடங்களாக இதை எதிர்த்து மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, நிலக்கரியைவிட ஆபத்தான "கிளிங்கர்' எனும் ரசாயனக் கலவையை இறக்குமதி செய்கிறார்கள்''’என்கிறார் வேதனையோடு. ஆர்.டி.ஓ. முதல் குடியரசுத் தலைவர் வரை புகார் அளித்துப் போராடிக்கொண்டிருக்கின்றன என்.எஸ்.ஏ.ஓ. உள்ளிட்ட சமூக அமைப்புகள்.
-நாகூர் ரிஸ்வான்
கொர்ர்ர்ர்ர்’ தி.மு.க.வின் ஐ.டி. விங்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவைத்தது கலைஞரும் ஸ்டாலினும்தான் என்று கிராஃபிக்ஸ் புகைப்படம் உலாவிக்கொண்டிருந்த நிலையிலும்கூட, தி.மு.க.வின் ஐ.டி.விங் அதனை முறியடிக்கும் வகையிலோ, ஜெ.தான் ஸ்டெர்லைட்டுக்கு நேரில் சென்று அடிக்கல் நாட்டினார் என்பதை நிலைநாட்டுவதற்கோ வேகம் காட்டவில்லை. தி.மு.க.வில் சமூக வலைத்தளத்தில் உ.பி.க்கள் பலர் இருந்தாலும் 2017-ஆம் ஆண்டுதான் மதுரை மத்திய எம்.எல்.ஏ. பழனிவேல்தியாகராஜன் தலைமையில் தி.மு.க.வின் ஐ.டி. விங் தொடங்கப்பட்டது. ஆனாலும், சமூக வலைத்தளங்களில் இயங்கி வந்த உடன்பிறப்புகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தி.மு.க. குறித்த எந்த விமர்சனங்களுக்கும் எதிர்வினையாற்றுவதில்லை. அ.தி.மு.க.வின் வேகம் தி.மு.க.வில் இல்லை என்பதை சொந்தக் கட்சியினரே தெரிவிக்கிறார்கள். தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான பல இணையதளங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
பழனிவேல் தியாகராஜன் தரப்போ, ""ஒவ்வொரு பகுதியிலும் தி.மு.க.வின் வாக்குபலம், அதனுடைய செல்வாக்கு, அதிலுள்ள சிக்கல்கள் குறித்த "டேட்டா'க்களை பதிவுசெய்து, தலைமைக்கு பயன்படும் வகையில்தான் கவனம் செலுத்திவருகிறோம். சோஷியல் மீடியாவில் ஸ்டேட்டஸ் போடுவது எங்கள் நோக்கமல்ல. கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்துவதுதான் நோக்கம்''’என்று சமாளிக்கிறது. ""எதிரி ஓவருக்கு 6 சிக்ஸ் அடிக்கிற நிலையில், நாங்க இப்பதான் நெட் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். என்னவோ போங்க'' எனப் புலம்புகிறார்கள் தி.மு.க நெட்டிசன்கள்.
-விக்னேஷ்குமார்
வாழ்வை முடக்கிய மரணம்!
வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு மரணம் ஏற்படுத்திய தாக்கத்தால் அரியலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல இடங்களில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
உடல்நலக்குறைவால் குரு மரணமடைந்த நிலையில், ஏன் இத்தனை நெருக்கடி என பா.ம.க. நிர்வாகிகளிடம் கேட்டோம். ""பா.ம.கவை நிறுவியதிலிருந்து, டாக்டர் ராமதாசின் நம்பிக்கைக்குரியவராகவும் அதிரடியான அரசியல்வாதியாகவும் இருந்தார் குரு. கட்சியின் வளர்ச்சிக்காக தனது சொந்த நிலங்களை கட்சியின் பெயருக்கு எழுதிவைத்தவர். அரசியலில் ஏற்ற-இறக்கங்களைக் கண்டவர். அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சைகள் கூட மிகவும் சிரமமாக இருந்தன. கட்சியில் குருவுக்கென ஒரு பட்டாளம் உண்டு. எப்படியாவது குரு தேறிவிடுவார் என நினைத்த நிலையில், அவர் மரணமடைந்ததால், ஆதரவாளர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இறங்கிவிட்டனர். குருவின் வாழ்வையும் இயல்பு வாழ்க்கையையும் முடக்கிவிட்டது அந்த மரணம்'' என்றனர்.
-கா.மனிஷா