மீண்டும் ஸ்ரீமதி. எல்லோ ருக்கும் ஒரு சின்ன கேள்வி. சின்ன வருத்தம். இதைவிட்டு போகவே மாட்டாங்களானு.
நக்கீரன் ஆரம்பிச்சது 1988. அன்று முதல் இன்றுவரை, இந்த சமூகத்தில் நடந்த 75 முதல் 80 விழுக்காடு முக்கியமான பிரச்சினைகளுக்கு நக்கீரன் மூலம் தீர்வு கொண்டுவந்திருக்கோம். இது தற்பெருமை இல்லை. சில விஷயத்தை நாம சொல்லிக்காம இருக்க வேண்டியிருக்கு.
ஸ்ரீமதி விஷயத்தில மட்டும் தேவையில்லாம உள்ளே போறாங் கன்னு முணுமுணுப்புகள் வருது. எல்லா விஷயத்துலயும், முதல்ல தேவையில்லாம வர்றாங்கன்னு தான் எங்களைச் சொல்வாங்க. கடைசில நக்கீரன் சொல்றதுதான் நிக்கும். அந்தரீதியில 89-ல ஆட்டோ சங்கர் விவகாரம்.
ஆட்டோ சங்கர் 6 கொலை களை பண்ணினவர். தூக்குல போடறதுக்கு எல்லாரும் தயாரா கிட்டாங்க. அவர் தரப்புல இருக் குற நியாயத்தைச் சொல்றதுக்கு போலீஸுல இருந்து எல்லாரும் முட்டுக்கட்டை போடறாங்க.
கடைசில, உச்சநீதிமன்றத் துல போய் தடையை உடைச்சு அவரை தொடர் எழுதவெச் சோம். அதன் பின்புதான் பின் னணியிலிருந்த பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகள், அரசியல் வாதிகள், அதன் பின்னால் இருந்த சதிகள் எல்லாம் வெளி வந்து பரபரப்பா பேசப்பட்டது.
அடுத்ததா ப.சிதம்பரம் மத்திய அமைச்சரா திருச்சிக்கு வர்றார். நிறைய பேர் ப.சி.யை அடிக்கிறாங்க. அப்ப இருந்த முதலமைச்சர், விவசாயிகள்தான் அடிச்சாங்கனு சொல்றாங்க. நாங்க ஒரு ஆறு படம் வெளி யிட்டோம். இளவரசன் என்கிற அ.தி.மு.க.காரர்தான் இரும்புத் தடி வெச்சு அடிச்சார்ங்கிறது நிரூபணமாகுது. அதன்பின்பு வழக்கு அப்படியே மாறுச்சு.
அடுத்து சண்முகசுந்தரம். இப்ப ஏ.ஜி.யா இருக்காங்க. ஜெ. மீது டான்சி வழக்கைப் போட்ட துக்காக அவரை வீடுபுகுந்து வெட்டு றாங்க. அவர் உயிருக்கு ஆபத்தா கிடக்கறார். வெட்டுனவர் வெல்டிங் குமார்னு பெயர் வெளிய வருது. ஆள் யாருன்னு தெரியலை. நக்கீரன் தான் வெல்டிங்குமார் படத்தை வெளியிட்டோம். அப்புறம்தான் அவரைப் பிடிச்சாங்க.
மருத்துவ மாணவன் நாவரசு கொலை.
அவரைக் கொன்னு ஒரு சூட்கேஸ்ல பார்ட் பார்ட்டா வெட்டி வச்சுருந்தான் ஒரு கொலைகாரன். யார் கொன்னதுனு குழப்பம். அவனோட சீனியர் ஜான் டேவிட்தான் பண்ணுனான்னு நாங்க செய்தி வெளியிட்ட பிறகுதான் கைதானான்.
சிவகாசி ஜெயலட்சுமின்னு ஒரு அம்மா. போலீஸ் ட்ரெஸைப் போட்டுட்டு அந்தம்மா அலப்பறையா போலீஸ் ஜீப்ல சுத்திவரும். அதுக்குப் பின்னணியில் மூணு போலீஸ்காரங்க இருந்தாங் கன்றதை படம் மூலம் வெளிக் கொண்டுவந்தோம். அவர் இப்ப உள்ள போனதுக்குக் காரணமே நக்கீரன்தான்.
தர்மபுரி பஸ் எரிப்பு. வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரோட எரிக்கப்பட் டாங்க. யாராலயும் மறக்கமுடி யாது. பின்னாடி 22 பேர் இருந்தாங்க. அவங்க பெயரை முதமுதல்ல வெளியிட்டது நக்கீரன். அதன்பின்பே அவங்க கைதானாங்க.
சந்திரலேகா என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரிமேல எக்மோர்ல சுர்லாங்கிற ரௌடி பட்டப் பகல்ல ஆசிட் வீசினான். அவன் பாம்பேயைச் சேர்ந் தவன்னு படம் போட்டு முதலில் செய்தி வெளியிட்டது நக்கீரன்தான். அதன்பின்பே போலீஸ் போய் அவனைக் கைதுசெய்து கொண்டுவந்தது.
பிரேமானந்தா. ஏழைப் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வெச்சு நடத்திக்கிட்டிருந்தார். அவர் மேல் கொலை வழக்கு இருந்துச்சு. இந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் நக்கீரன் வெளியிட்ட ஆதாரங்கள்தான். பிரேமானந்தாவுக்கு ஆஜரான ராம்ஜெத்மலானி, கேஸ் ஜெயிக்கணும்னா நக்கீரனை ஆப் பண்ணுங்கயானு சொல்லி யிருக்காரு. பிரேமானந்தா தரப்புல இருந்து அப்பவே 50 லட்சம் பேரம் பேசுனாங்க.
98-ல மூணு ரயில்ல ஒரே நேரத்துல ராஜாங்கிற பேர்ல ஒருத்தர் குண்டு வெச்சிருந்தார். அதைச் செய்தது ராஜாங்கிற பேர்ல அலி அப்துல்லாதான் என நாம் படத்துடன் செய்தி வெளியிட்டோம். அலி அப்துல்லா அதை மறுத்தார். ஆனால் நாம் செய்தி வெளி யிட்ட மூன்றாவது நாளே இந்த வழக்கில் கைதானார்.
வீரப்பன். 93-ல முதன் முதல்ல அவரது படத்த வெளியிடறோம். வெளியிட்டதும், அப்ப இருந்த எஸ்.டி.எஃப் தலை வர் தேவாரம் ஃப்ரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டி கொடுக் கிறார். நக்கீரன் வீரப்பன் படத்தை வெளியிட்ட பிறகுதான் வீரப்பன் எப்படி இருப்பார்னு எங்களுக்கே தெரியும்னு ஒப்புக் கொண்டார். அதேபோல வீரப் பனைப் பிடிக்கிறதுக்காக சென்ற எஸ்.டி.எப்.காரங்களால அந்தக் காட்டுல இருந்த மலைமக்கள் மீது அத்துமீறல், பாலியல் கொடூரங்கள் நிறைய நடந்தது. நடந்த விஷயங்கள் அத்தனையும் மொத்தமா எடுத்துட்டுப் போய் டெல்லி மனித உரிமை ஆணை யத்தில் நாங்கள்தான் முதன்முதல்ல வழக்குப் பதிவு செய்தோம்.
அதன்பிறகே சதாசிவா கமிஷன் போடப்பட்டு, வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாரால் மலைவாழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல் களை கமிஷன் வெளிப்படுத் தியது. அது இன்னமும் பெண் டிங்ல இருக்கு.
நித்யானந்தா, இன்னைக்கு எங்கேயோ ஒரு நாட்டுல இருக்கேன்னு புரூடா விட்டுக் கிட்டிருக்கான். அதுக்குக் காரணமே நக்கீரன்தான். அவ னோட எல்லா லீலைகளையும் வெளிக்கொண்டுவந்தது நக்கீரன்.
ஜெயலலிதாவும் சசிகலாவும் தோழிகள், அவங்க ஒண்ணா இருக்குற படத்தை முதன்முதலா நாங்க வெளியிட்டோம். கொடநாடு எஸ்டேட்டை முதன்முதலா வாங்கப் போறாங்க. அதோ பார் அந்த எஸ்டேட் என ஜெ. சுட்டிக்காட்டுவதுபோல் ஒரு படத்தை வெளியிட்டோம். பின்புதான் அவர்கள் எத்தனை அன்யோன்யமான நண்பிகள் என்பது வெளிவந்துச்சு.
சங்கராச்சாரியார், சங்கர ராமன் கொலையில் கைது செய்யப்பட்டார். நாம் அவரிடம் ஒரு பேட்டி எடுத்துப் போட் டோம். அந்தப் பேட்டியில் என் கால் பெருவிரல் நகத்துல சிறு வலி வந்தாலே என் பக்தர்கள் தாங்கமாட்டாங்க. அவங்க ஏதாச்சும் செஞ்சுருப்பாங்கன்னு சொல்லியிருப்பார். அந்தப் பேட்டிதான் அவருக்கு எதிரான சாட்சியமாக மாறியது.
இப்ப ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். மோதல் மாதிரி, 90-ல நடந்த தலைமைக் கழக அடிதடி. ஜானகி அணிக்கும்- ஜெ. அணிக்கும் நடந்த தகராறைப் பதிவுசெய்தோம். அதுல 22 படங்கள் நாங்கள் எடுத்திருந் தோம். தலைமைக் கழகம் சீல் வைக்கப்பட்டுச்சு. உச்சநீதிமன்றத் துல நாங்க எடுத்த படத்தை தாக் கல் பண்ணித்தான், தலைமைக் கழகமே ஜெ. கைக்கு வந்தது.
அதுபோல் ஷெரினான்னு ஒரு பொண்ணு. நடராஜனோட இரண்டாவது மனைவியா பேசப்பட்டாங்க. கஞ்சா வழக்குல கைது செய்யப்பட்ட அந்தப் பொண்ணுக்கு நடந்த கொடு மையை நக்கீரன் வெளிக்கொண்டு வந்தது.
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு. 2007-ல நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பேர் இறந்துட்டாங்க. அந்த வழக்குல நாம 23 படங்கள் எடுத் தோம். மூன்று பேர் உயிரிழக்கக் காரணமானவர்கள், பத்திரிகை அலுவலகம் பற்றியெரியக் காரண மானவர்கள் உள்ளே இருக் கிறதுக்குக் காரணம் நக்கீரன். இந்த வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க நக்கீரனின் படங்கள்தான் உறுதுணையா இருந்ததுனு நீதியரசர் பாராட்டினார்.
இளவரசன் மரணம். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளவரசனும் திவ்யாவும் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஜூலை 4, 2013-ல் இளவரசன் இருப்புப் பாதையை ஒட்டி பிணமாகக் கண்டெடுக் கப்பட்டார். இந்த வழக்கிலும் நக்கீரன்தான் உண்மையை வெளிக்கொண்டுவந்தது.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், நக்கீரன்தான் இது ஆணவக் கொலை என்று கண்டு பிடித்து செய்தி வெளி யிட்டு வந்தது. இந்த வழக்கில் யுவராஜ் மீதான சந்தேகங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண் டதும், தற் கொலையின் பின்னணி குறித்து நக்கீரன் தொடர்ந்து எழுதிவந்தது. சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென் றும் வலியுறுத்தினோம். நக்கீர னின் விடாமுயற்சியின் பலனாக, கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜுக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனை விதித்தது.
விருத்தாசலம் கண்ணகி -முருகேசன் ஜோடியை யாரும் மறந்துவிட முடியாது. 200 பேர் நடுவில் சுடுகாட்டில், காதில் விஷம் ஊற்றிக் கொன்ற வழக்கு. நாம் வெளியில் கொண்டு வந்த பிறகுதான் கொலைகாரர்களுக்குத் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம். ஒவ்வொரு நாளும் நடந்த விஷ யத்தை வெளிக்கொண்டுவந்து வெட்ட வெளிச்சமாக்கினது நக்கீரன். அந்த மரணத்தில் மர்மம் இருக்குன்னு சொன்னது நாங்க தான். அந்தம்மாவின் கால்கள் எடுக்கப்பட்டத நாமதான் சொன் னோம். ஆறுமுகம் கமிஷன் போடப்பட்டு விசாரிச்சுக்கிட்டு இருக்கிறது.
முகமது அலி. கலைஞரை முரட்டுத்தனமாக கைதுசெய்தவர். அண்ணன் வைகோவை, ஐயா நெடுமாறனை, அண்ணன் சுப. வீரபாண்டியனை, என்னை எனப் பலரை பொடாவில் கைது பண்ணியவர் டி.ஐ.ஜி. முகமது அலி. கடைசியில் இந்தியாவில் நடந்த முத்திரைத் தாள் மோசடி யில் தமிழ்நாட்டின் ஏஜென்டே முகமது அலி என ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவந்து அவர் உள்ளே செல்ல காரணமாக அமைந்தது நக்கீரன் தான்.
நிர்மலாதேவி, கல்லூரிப் பேராசிரியை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவி களை எந்த அளவுக்கு பெரிய மனிதர்களுக்கு தாரைவார்த் தார்னு ஆதாரப்பூர்வமா வெளிக் கொண்டுவந்தோம்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்கப் மரணம். ஜெயில் மேனுவல்ல இருக்கிற டாக்டருடைய பிரிஸ்கிரிப்ஷனை வெளிக் கொண்டு வந்தபிறகுதான், போலீஸ் அடிச்சதனாலதான் அவங்க மரணம் என்ற திசையில் வழக்கு செல்ல ஆரம்பிச்சது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வெளியில் கொண்டுவந்ததும், அப்ப இருந்த சி.பி.சி.ஐ.டி. நிஷாவும், கக்கனோட பேத்தி எஸ்.பி. ராஜேஸ்வரியும், நான்தான் அந்தப் படத்தை எடுத்த மாதிரி என்னையே குற்றவாளியாக்கி னாங்க. அப்புறம் மக்கள் மன்றத் துக்கு விஷயத்தைக் கொண்டு வந்து பல விஷயங்களைப் பதிவுசெய்தோம். சி.பி.ஐ.க்கு வழக்கை மாத்தினதுல நக்கீரன் பங்கு இருக்கு. இன்று வரை அந்த வழக்கு போய்க்கிட்டிருக்கு.
நாகர்கோவில் காசின்னு ஒருத்தன். ஆயிரம் பெண்களுக்கு மேல பாலியல் துன்புறுத்தல் பண்ணியிருக்கான். அதனை ஆதா ரத்தோட வெளியில் கொண்டு வந்ததிலும் எங்கள் பங்கு உண்டு. இன்று அவன் சிறையில இருக்கான்.
சிவசங்கர் பாபா. இப்பத்தான் சிறையிலிருந்து வெளிய வந்திருக்கார். அடுத்து பத்ம சேஷாத்திரி ராஜகோபால், பள்ளிப் பிள்ளைகளிடம் அவன் நடத்திய கொடூரங்கள். அதை நாம்தான் வெளியில் கொண்டு வந்தோம். நீச்சல் குளத்தில் நிரஞ்சன் இறந்தது பள்ளியின் அஜாக்கிரதை என்பதை நாம்தான் வெளிக்கொண்டு வந்தோம்.
கோவை சின்மயா பள்ளி பொண்ணு இறந்ததையும் நாம்தான் வெளிக்கொண்டு வந்தோம். நக்கீரன் செய்ததில், ஒரு பகுதியைத்தான் நான் சொல்லியிருக்கேன்.
மேல சொன்ன அத்தனையும் நக்கீரன் மட்டுமே ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வந்தவை. இதை வெளிக்கொண்டு வர நாங்கள் கொடுத்த விலை எக்கச்சக்கம். விலைமதிப்பு இல்லாத உயிர்கள். பிரிண்டர் ஐயா கணேசன், அன்பு மாமனார் ஆர்.எஸ்.பாண்டியன் இருவரும் பலியானார்கள். கை, கால் இழந்தவர்கள் பலர். நான் உட்பட பல தம்பிகள் பலமுறை, பல ஆண்டுகள் சிறை. எங்களின் சம்பாத்தியம் முழுமையாக கோர்ட், வழக்கு, தலைமறைவு என அனைத்துக்கும் பல கோடிகள் விரயமானது. என் குடும்பம், தம்பிகள் குடும்பம் அனைவரும் பட்ட அடிகள் ஏராளம். இத்தனை அவமானம், துன்பங்களைச் சுமந்துதான் நக்கீரன் இன்று உங்கள் முன் கம்பீரமாக நிற்கிறது.
கடைசியா ஸ்ரீமதி.
இவை அனைத்தையும் நக்கீரனுடைய பணியாக எடுத்துத்தான் செய்தோம். யாருக்கும் போட்டியாகச் செய்யவில்லை. சமூகப் பிரச்சினை, மக்களைப் பாதிக்கும் பிரச்சனை என்பதனால் உயிரைப் பணயம் வைத்துதான் நாங்கள் ஆதாரங்களைக் கொண்டுவந்து உங்கள் முன் வைத்தோம். தீர்வு கொடுப்பது போலீஸ் மற்றும் நீதிமன்றத்தின் கையில் இருக்குது.
நாங்க புதுசா ஸ்ரீமதி விவகாரத்தில் நுழையவில்லை. ஸ்ரீமதி விவகாரத்தில் என்ன ஐயப்பாடு? அந்தப் பள்ளியில் ஆறேழு கொலைகள் நடந் திருக்குன்னு பேச்சு இருக்கு. எல்லாரும் அதை மறுத்தாங்க. பள்ளிப் பிள்ளைகளுக்கு எதுவும் நடந்ததுன்னா நக்கீரன் அரணா நிற்கும்னு காட்டத்தான் நாங்க முண்டியடிச்சு வர்றோம்.
ஆறு கொலைகளுக்கு மேல நடந்திருக்குனு சொன்னதை நிறைய பேர் மறுத்தாங்க. இப்ப பிரகாஷ்னு ஒரு பையன். அந்தப் பையனின் அம்மாவோட பேட்டியை நக்கீரன்ல வெளி யிட்டிருக்கோம். அவங்க பேசுறதைப் பாருங்க.
"ஆறு மாசம் போயிருந்தா ப்ளஸ் டூ முடிச்சுட்டு வந்தி ருப்பான். ரொம்ப தூரம் போய்ட்டு வர்றதுனால ஹாஸ் டல் தங்கி படிக்கவெச்சோம். சனி, ஞாயிறு வீட்டுக்கு விடமாட்டாங்க. அன்னைக்கு என் வீட்டுக்காரருக்கு போன் வருது. சக்தி பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு சின்ன கிணற்றுல பிரகாஷ் இறந்துகிடக்கான்னு.
நான் என் பையனைப் பார்த்து நாற்பது நாள் கழிச்சு, அவனை பிணமா பார்க்கிறேன். மார்ச்சுவரில தான் என் பையனைப் பார்த்தேன். இன்னைக்கு வரைக்கும் அவனது மரணத்துக்கு என்ன காரணம்னு தெரியலை. அந்தப் பள்ளிக்கூடமும் சொல்ல மாட்டேங்குது. மார்ச்சுவரில, அந்த பள் ளிக்கூடம் சம்பந்தப்பட்ட அம்மா இருக்காங்க. பைய னோட மரணத்துக்கு என்ன காரணம்னு அவங்ககிட்டே கேட்கிறேன். வாய்திறந்தே சொல்லமாட்டேங்கிறாங்க.
சரி, பள்ளிக்கூடத்துல விசாரிக்கலாம்னு போகையில அவங்க பூஜை பண்ணிக் கிட்டிருக்காங்க. "ஒரு பையன் செத்துருக்கான். நீங்க பூஜை பண்றீங்களா'னு எங்க சொந்தக்காரங்க கேட்டதும், உள்ளயிருந்து ஆட்கள் பெரிய தடியை எடுத்துட்டு அடிக்க ஓடி வர்றாங்க. நாங்க பதறிப்போய் திரும்பி ஓடியாந்தோம். என் பைய னோட மரணத்துக்கு இன்னிக்கு வரைக்கும் காரணம் தெரியாது. அந்தப் பையனுக்கு நீச்சல் தெரியாது. ஏன் அவன் கிணத்துக்குப் போனான்?
பள்ளியை விட்டு சனிக்கிழமை வெளியே போனான்னா, ஏன் ஞாயிற்றுக் கிழமை வந்து சொல்றீங்க. பையனை ஹாஸ்டல்ல அவங்க பொறுப்பில விடறோம். ஏன் எங்க ளுக்குச் சொல்லலை?''
பிரகாஷோட அப்பா, ஸ்ரீமதி விவகாரத்துல நடக்குற திருப்பங்களைப் பார்த்து என் பையன் விஷயத் துக்கு தீர்வு கிடைக்கிற மாதிரி இருக்குன்னு சமூக வலைத்தளத்துல பதிவு ஒண்ண போட்டு விட்டாரு. அது வந்தப்புறம், அதைப் பின்தொடர்ந்து வழக் கறிஞர்கள் குழு அந்தப் பள்ளியில் நடந்த மரணங்களைப் பற்றி விசாரணையில் இறங்குது. அதன்பிறகுதான் பிரகா ஷோட அம்மா ராஜாமணி பேட்டியை வெளியிட் டோம். ராஜாமணி அம்மா சொல்றாங்க, "எனக்கு ஸ்ரீமதி அம்மா செல்வி மாதிரி பேச வாயில்லை. ஒருவேளை பேசியிருந்தா நீதி கிடைச் சுருக்குமோ'ன்னு பரிதவிச்சுப் பேசுறாங்க. அதைப் பார்க்கும் போதுதான், அந்தப் பள்ளிக்கு ஏன் வக்காலத்து வாங்குறாங்கனு கேள்வி எழும்புது.
கடைசியா ஒரு வீடியோ வந்துச்சுல்ல. ஸ்ரீமதியை கன்னுக் குட்டியைத் தூக்கிட்டு வர்ற மாதிரி, நாலு பேர் இரண்டு கை, இரண்டு காலைப் பிடிச்சு தூக்கிட்டு வர்றாங்க. மக்களுக்கு இருக்கிற கேள்வியைத்தான் நாங்க வைக்கிறோம். மூணு மாடியோட தரைத்தளத்தோட தூரம் சேர்த்து நாற்பதடி உயரத்துல இருந்து விழும்போது தலை தெறிச்சுருக்காதா?… அந்தப் பிள்ளை விழுந்து கிடக்கற வீடியோ இருக்குல்ல, அப்ப விழுறதும் இருக்கணும்ல. அந்த வீடியோவை யாரு போட்டா?…
யாருக்கும் போட்டி யாகவோ, எந்த விசாரணைக்கும் இடையூறாகவோ நாங்க இதைப் பண்ணலை. பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர் கைதாகி நீதிமன்றப் பாதுகாப்புல இருக்காங்க. அந்தம்மா சொல்லும்போது, நாங்க சி.சி.டி.வி. புட்டேஜ் எல்லாத்தையும் போலீஸுக்கு கொடுத்துட்டோம்னு சொல்றாங்க.
சி.சி.டி.வி. புட்டேஜ்ல… இந்த புட்டேஜை மட்டும் வெட்டிக் கொடுக்காங்கனா, யாருக்காகக் கொடுக்கிறான். அதை நீங்க கட்டாயம் கண்டு புடிக்கணும். போலீஸ் இந்த வீடியோவை வெளியிடலைன்னு சொல்லிட்டாங்க… அப்ப யாரோ ஒருத்தன் இதை வெச்சுருக்கான். அவன்கிட்ட ஸ்ரீமதி கீழே விழுந்த புட்டேஜும் இருக்கணும்ல.
இப்படி தூக்கிட் டுப் போறாங்களே,… இது தடயத்தை மறைச்சதாகாதா. ஒரு விபத்து நடக்குதுன்னா, யாரும் கிட்ட போகமாட்டாங்க. ஒரு துணியை வெச்சு மூடிப் போட்டுடுவாங்க. போலீஸ் வந்து மார்க் பண்ணி, அதன்பிறகுதான் ஸ்ட்ரெச் சர்ல ஏத்தி வண்டிக்கு கொண்டு போவாங்க.
எந்த மார்க்கும் இல்லாம தூக்குறாங்களே, அது தடயத்தை மறைச்சதாகாதா, மக்களிடம் இவ்வளவு கேள்விகள் இருந்தது னால அந்தக் கேள்விகளை முன்வெச்சோம். பிரகாஷோட அம்மா சொன்னதை வெச்சுப் பார்க்கையில, அந்தப் பள்ளியை பொறுத்தவரையில பிள்ளை களை ஒரு ஜடமா பார்க்கிறாங்க. அவங்க காசு கொடுக்கிற ஒரு பொருளா பார்க்கிறாங்கங் கிறதைத்தான் மறுபடி மறுபடி சொல்ல வர்றோம்.
பள்ளி சம்பந்தமான விஷயங்களை நக்கீரன் ஏன் முன்னெடுக்குது?
2021-ல் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் பெட்டிஷன் நாங்க பைல் பண்ணிருக்கிறோம். இந்த ரிட் பெட்டிஷன் எண் 897/2021. இந்த மனுவோட விவரம் என்னன்னா, பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல் மற்றும் துன்புறுத்தல் குறித்து மாவட்டம் தோறும் ஒரு குழுவை ஏற்படுத் தக் கோருதல். மனுவை உச்சநீதி மன்றம் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், பள்ளியில் நடக்கும் பாலியல் விவகாரங்களை எப்படி தடுப்பதுன்னு அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 2022-ல் இந்த வழக்கு விசாரணை தொடரும்.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடிவரும் நக்கீரன், ஸ்ரீமதிக் காகவும் போராடும்.