தமிழகத்தில் என்னதான் தடை விதித்தாலும், நட வடிக்கை எடுத்தாலும், குட்கா, பான் மசாலா போன்ற போதை வஸ்துக்களின் விற்பனையும் பயன்பாடும் சட்டவிரோத மாக, மாமூலாக நடக்கின்றன.
சிவகாசியில் பெட்டிக் கடைகள் பலவற்றிலும் மறைத்துவைத்து குட்கா பாக்கெட்டுகளை விற்றுவரும் நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், லதா என்பவர் நடத்திய பெட்டிக் கடையில், ரூ.312 மதிப்புள்ள 27 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
கணவனால் கைவிடப் பட்ட நிலையில், மகளை வளர்ப்பதற்கும், குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்கும் ஒரே வாழ்வாதாரமாக இருந்த லதாவுடைய பெட்டிக்கடை மூடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் - சிவகாசியில் கைதுசெய்யப்பட்ட லதா, திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். வெளியில் கடன் வாங்கி பல ஆயிரங்களைச் செலவழித்து, ஆறு நாட்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த லதா, யாருடனும் பேசாமல், சரிவர சாப்பிடாமல், பெட்டிக்கடையையும் திறக்காமல், தொடர்ந்து மவுனம் காத்த நிலையில், அவருடைய சகோதரி லட்சுமி அழைத்ததன்பேரில் சென்றோம்.
நிலக்கோட்டை மகளிர் சிறையில், முழுவதுமாக ஆடைகள் களையப்பட்ட நிலையில் நடத்தப்பட்ட 20 நிமிட நிர்வாணச் சோதனையால், லதா மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்ததை அறியமுடிந்தது. விசாரணைக் கைதியாக இருந்தபோது, அச்சிறையில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை லதாவும், பார்வையாளராகச் சென்றபோது அடைந்த வேதனைகளை லட்சுமியும், நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
நிலக்கோட்டை மகளிர் சிறையில் என்ன நடந்ததாம்?
மாலை வேளைகளில் சிறையின் பெண் காவலர்களுக்கு, பிடரியிலிருந்து தோள்பட்டை வரையிலும் பிடித்துவிட ஒருவர், கால்களைப் பிடித்துவிட ஒருவரென, ஒரே நேரத்தில் இரு பெண் கைதிகள், ஒவ்வொரு காவலருக்கும் மசாஜ் செய்வது, பேன் பார்ப்பது, பெண் காவலர்களின் வீடுகளில் இருந்து எடுத்துவரப்படும் அழுக்குத் துணிகளைத் துவைத்துக் கொடுப்பது எனப் பெண் கைதிகள் அடிமைகளாகவே நடத்தப்பட்டுள்ளனர்.
கைதிகளைப் பார்க்கவரும் பார்வையாளர்களின் கையில் கேன் ஒன்றைக் கொடுத்து, சற்று தொலைவிலுள்ள அய்யங்கார் பேக்கரியில் கேன் நிறைய டீ, 10 வடை, 20 முட்டை பப்ஸ், 3 ப்ரெட் பாக்கெட் வாங்கிவர அனுப்புவது, அரை கிலோ டீ தூள், 2 கிலோ சீனி, கொசுவர்த்திச் சுருள், குட்-நைட் லிக்விட், ரூ.500 மதிப்பிலான 2 தரமான போர்வைகள், 6 குளியல் சோப், 6 டிடர்ஜென்ட் சோப், பெரிய சைஸ் டூத் பேஸ்ட், எண்ணெய் பாட்டில், சீப்பு எனப் பட்டியலிட்டு வாங்கச் சொல்லி, அவற்றை கைதிகளுக்குக் கொடுக்காமல், தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதெல்லாம் வாடிக்கையாக நடந்துவருகிறது. அரசுக் கணக்கில் வாங்கும் காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்குப் பயன்படுத்தாமல், தங்களின் சொந்த உபயோகத்துக்கு கொண்டுசெல்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. டீ செலவுக்கென்று, பார்வையாளர்களை மிரட்டி ரூ.2000 வரை பறிக்கும் கொடுமையும் நடக்கிறது.
கள விசாரணை மேற்கொள்ள, நிலக்கோட்டை மகளிர் சிறையின் கதவுகளைத் தட்டினோம். நமக்கு கிடைத்த தகவல்களை முன்வைத்தபோது, "நீங்க கேள்விப்பட்ட எல்லாமே பொய்...'” என்று முதலில் மறுத்துவிட்டே பேச ஆரம்பித்தார் சிறைக் கண்காணிப்பாளர் கல்பனா. “"கைதிகள் சிறைக்குள் வரும்போது சோதனை நடத்த வேண்டுமென்பது, சட்டத்திலேயே இருக்கிறது''’என்றவரிடம், "நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தவேண்டுமென்று சிறைக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதா?'' என்று இடைமறித்துக் கேட்டோம். "அப்படியெதுவும் இல்லை. அதேநேரத்தில், ‘பெண் கைதிகளை, பெண் துணை கண்காணிப்பாளர், மேட்ரான், உதவி மேட்ரான் அல்லது பெண் வார்டர் மட்டுமே, தனிப்பட்ட முறையில், எந்த ஆண் அதிகாரி முன்னிலையிலும் இல்லாமல் சோதனை நடத்தவேண்டும்''’என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
"பெண் கைதிகளின் ஆடைகளைக் களைய வற்புறுத்தி, முழு நிர்வாணக் கோலத்தில் அவர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் சோதனை நடத்தும்போது, மூன்று தடவை உட்கார்ந்து எழச்சொல்வதும், ஒரு சுற்று சுற்றச்சொல்வதும், தமிழகச் சிறைகளில் ஒரு நடைமுறையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது'' என்று சிறை கண்காணிப்பாளர் கல்பனா கூற, சிறைக்காவலர் முத்துலட்சுமி குறுக் கிட்டு, "அந்த நேரத்தில் யாரையும் கொடுமைப்படுத்துறது இல்ல...''” என்று விவரிக்க ஆரம்பித்தார்.
"ரெகார்ட் எழுதணும்ல... கைதிகளை நியூடாக்கிறதுக்கு காரணமே, அவங்க உடம்புல காயங் கள் இருந்தா நோட் பண்ணுறதுக் குத்தான். பொதுவா, போலீஸ் அடிக்கிறது பெட்டக்ஸ்லதான். ட்ரெஸ் போட்டிருந்தா, அந்தக் காயங்களை எப்படி பார்க்க முடியும்? கைதிகளை கூட்டிட்டு வர்ற போலீஸ்காரங்க, அவங்ககிட்ட முன்கூட்டியே சொல்லிருவாங்க. ஜெயில்ல செக் பண்ணும்போது, போலீஸ் அடிச்சதா சொல்லவே சொல்லாதீங்க. கேட்டா, பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டோம்னு சொல் லுங்கன்னு பயமுறுத்தியிருப்பாங்க. கைதிகளுக்கு தெரியாமலேயே காயம் பட்டிருக்கும். அதையெல்லாம் நாங்கதானே சரிபார்க்கணும். திருநெல்வேலிலகூட ஒரு டெத் நடந்துச்சுல்ல. அப்ப என்ன ஆச்சு?
ஜெயில்ல அட்மிஷன் ஆபீசர், கைதி அடிபட்டதை எழுதாம விட்டுட்டாங்க. அப்படின்னா.. ஜெயில்ல வச்சு நீங்கதான் அடிச்சு கொன்னுட்டீங்கன்னு கொண்டு வந்துட்டாங்க. அதுக்கெல்லாம் இடம் கொடுக்காமத்தான், நாங்க ஃபுல்லா செர்ச் பண்ணுறோம். அடி எதுவும் பட்டிருக்கா? அலர்ஜி மாதிரி உடம்புல எதுவும் இருக்கா? ஆபரேசன் எதுவும் பண்ணிருக்காங்களா? இதையெல்லாம் பார்க்கணும். மற்றபடி, கைதிகளைத் துன்புறுத்துற எண்ணம் துளியும் எங்களுக்கு இல்ல.
அப்புறம் இன்னொண்ணும் இருக்கு. செல்போனை பிறப்புறுப்புல மறைச்சு கொண்டு வருவாங்க. ரெண்டு காலையும் ஒடுக்கியே வச்சிருப்பாங்க. பிளேடு, சிம்கார்டும்கூட அப்படித்தான். காதுமடல்ல.. நாக்குக்கு அடில, தலைமுடிக்குள்ள. சிலபேரு டிரெஸ்ஸுக்குள்ள வச்சிருப்பாங்க. ரெகுலரா கஞ்சா கேஸு, திருட்டு கேஸு கைதிங்க வருவாங்க. அவங்கள்ல சிலருக்கு போதையில்லாம இருக்க முடியாது. இன்னருக் குள்ள... பிறப்புறுப்புல பொட்டலத்த வச்சிருப் பாங்க. ஏன்னா, அவங்களுக்கு தொழிலே அதுதான். அதனால உட்கார்ந்து எந்திரிக்கச் சொல்லுவோம். அப்ப புஷ் பண்ணும்போது, அதுவா விழுந்திரும். ஒரு சிலர்தான், அந்த மாதிரி எதுவும் மறைச்சு எடுத்துட்டு வர்றதில்ல. அதுக்காக, எல்லாரையும் நம்ப முடியாதுல்ல''’என்று பேசிக்கொண்டே போனார்.
சிறைக் கண்காணிப்பாளர் கல்பனா பக்கம் திரும்பி, "ஸ்கேனர் போன்ற நவீன தொழில் நுட்பத்தை சோதனை நடத்துவதற்கு சிறைகளில் ஏன் பயன்படுத்துவதில்லை?''’என கேட் டோம்.
"அந்த மாதிரி உபகரணங்கள் மத்திய சிறைகளில் உண்டு. இதுபோன்ற கிளைச் சிறைகளில் இல்லை. ஸ்கேனர்னா கம்ப்யூட்டர்ல ரெக்கார்டாகி ‘சேவ்’ ஆயிரும். அப்புறம், அதுவே பெரிய பிரச்சினை ஆயிரும்''’என்றவர், "இனி பார்வையாளர்கள் யாரை யும் டீ வாங்கச் சொல்லமாட் டோம்''’என்று முதலில் மறுத்த விஷயத்தில் ‘உண்மை’ பேசினார். "இனிமேல் தவறு எதுவும் நடக்காது...''’என்று ஒத்துக்கொள்ளவும் செய்தார்.
முன்பு ஒருதடவை சேலம் மகளிர் சிறையில், தன்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டியதாக, சிறை அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த பெண் கைதி மைதிலி, சேலையை அவிழ்த்து வீசி பரபரப்பு ஏற்படுத்தியதெல்லாம் நடந்திருக்கிறது.
லதா குறித்து வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியனிடம் பேசியபோது, “"முதல் தடவையாக, அதுவும் விசாரணைக் கைதியாக சிறைக்குள் நுழைந்த ஒரு பெண்ணை நிர்வாண சோதனை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். சோதனை நடத்துவதற்கு கையடக்க மெட்டல் டிடெக்டர், டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர், எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கேனர் எனப் பல கருவிகள் உள்ளன. விமான நிலையங்களில், பயணிகளின் உடலில் மறைத்து வைத்திருப்பதைக் கண்டு பிடிப்பதற்கு பேக்ஸ்கேட்டர் எக்ஸ்ரே ஸ்கேனர், மில்லிமீட்டர் வேவ் ஸ்கேனர் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் எத்தனையோ இருக்கும்போது, தமிழகத்தில் சில சிறைகளில், சோதனை என்ற பெயரில் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது''’என்றவர், "கணவன் -மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவின்போதுகூட, நமது நாட்டுப் பெண்களில் பலரும், தங்களை முழுவதுமாக நிர்வாணப்படுத்துவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மானத்தைக் காத்துக்கொள்வது, பெண்களுக்கே உரிய பிரத்யேக இயல்பாக இருக்கும்போது, கைதியாக இருந்தாலும் பெண்தானே என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்''’என்றார்.
தமிழகத்திலுள்ள மாவட்ட சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் சி.சி.டி.வி. கூட பொருத்தப்படாத நிலையில், அதிநவீன ஸ்கேனர் வசதி ஏற்படுத்தி, சோதனையின்போது நிர்வாணப்படுத்தும் மனித உரிமை மீறலைத் தடுப்பதெல்லாம் நடக்குமா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு சிறைத் துறைதான் விடை காண வேண்டும்.
-ராம்கி, அண்ணல்