ணைய தளங்களில் டிக்டாக் என்ற பெயரில், யூ-டியூபர்கள் சிலரின் மன்மத அத்துமீறல்கள் எல்லை மீறிப்போய் பலரையும் முகம்சுளிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த அந்தரங்கங்களையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலேயே அவர்களின் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

மறைவாக இருக்கவேண்டியதை, பொதுத்தளங்களில் கீழ்மையான பேசு பொருளாக்கி, வீதியில் கொண்டு வந்து கொட்டி, இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கும் வேலைகளையும் அவர்கள் சங்கடமில்லாமல் செய்துவருகின்றனர்.

இப்படி காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி இருக்கும் இரண்டு பெண்கள், தங்களுக்குள் மட்ட ரகமாக மோதி வருவதும் பலரையும் திகைக்க வைத்துவருகிறது.

u

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூ-டியூபரான சாதனா என்பவர், தன்னைப் பற்றியும், தனது குழந்தைகள், மற்றும் கணவர் பற்றியும், மதுரையைச் சேர்ந்த பிரபல யூ-டியூபர்களான சிக்கந்தரும், ’ரவுடி பேபி’சூர்யாவும் அவதூறாகப் பேசுவதாகவும், இது தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

புகார் கொடுத்த நச்சலூரைச் சேர்ந்த இந்த சாதனா, பல சமூக வலைத்தளங்களில் டிக்டாக் என்ற பெயரில், தன்னுடைய ஆபாசமான செயல்பாடுகள் மற்றும் ரவுடித்தனமான பேச்சுகள் மூலமாக, லட்சகணக்கான ரசிகர் பட்டாளத்தையே வைத்துக்கொண்டு, வித்தைகாட்டி வருகிறார். இவருக்கும் ரவுடி பேபி சூர்யாவுக்கும் டிக்டாக் மூலமாக சண்டை வருவது வழக்கமாம்.

இந்த நிலையில்தான் சாதனா, போலீஸ் வரை புகாரோடு போயிருக்கிறார். புகார் கொடுத்த சூட்டோடு செய்தியாளர்களிடம் பேசிய சாதனா, "சிக்கந்தர் என்ற சிக்காவும், ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமியும் எங்கள் குடும்பத்தைப் பற்றி அசிங்கமாவும், ஆபாசமாகவும் பேசி வருகின்றனர். தொடர்ந்து மீடியாக்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய புகாருக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார் காட்டமாக.

இவரது புகார் குறித்து சிக்கந்தரிடம் நாம் கேட்டபோது "என் வீடியோவில் வந்த ஒரு நபர், உங்க பையனுக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்கிறதா சொன்னீங்களே, சாதனாவின் பொண்ணை உங்க பையனுக்கு எடுக்கலாம்ல என்று கேட்டார். நான் அதற்கு, சாதனா என்னை போன்ற ஒரு யூ டியூபர் தானே. அவர் என்னுடைய தங்கை போல. எனவே நான் அங்கிருந்து பெண் எடுப்பதில் எந்தவிதத்திலும் தப்பில்லை என்று கூறினேன். இதனை அறிந்த சாதனா, அன்று இரவே வீடியோவில் என்னைத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு, தராதரம் குறித்து மிகவும் மோசமாகப் பேசி ஒரு வீடியோவும் போட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த சூர்யாவும், லைவ் வீடியோவில் போய், சிக்கந்தரின் வயதுக்காவது மரியாதை கொடுக்கறது இல்லியா? அவரை ஏன் இவ்வளவு ஆபாசமா பேசுகிறாய்? என்று கேள்வி கேட்டதோடு, சூர்யாவும் பதிலுக்கு சாதனாவைத் திட்டி வீடியோ போட்டார். இதன் பிறகுதான் கரூர் காவல் நிலையத்தில் எங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்''’ என்றார்.

இவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்தும், இவர்களின் ’யூ டியூப் சேவைகள்’ குறித்தும் அறிந்திருக்கும் சிலரோ... "இந்த யூ-டியூப் கும்பலே மோசமான கும்பல்தான். காசு கொடுத்தால் போதும், இவர்களின் நிர்வாண சந்தையில் விதவிதமான பெண்களை அப்பட்டமாகப் பார்க்கலாம். இவர்களைப் பற்றி பேசினால் கூட, நம்ம மரியாதை கரைஞ்சி போயிடும். இருந்தாலும் போலீஸ், இவங்கமேல நடவடிக்கை எடுக்கணும் என்பதற்காக சில விசயங்களைப் பகிர்ந்துக்கறோம். அந்த சாதனா மெம்பராக உள்ள மீடியாவில் இணைவதற்கு, அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யணும். அதற்கு மாதம் 299 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம். அதேபோல் கோல்டன் ஹாட் லைவ் குழுவில் சாதனாவை முழுசாப் பார்க்க மாதம் 1199 ரூபாய் பணம் கட்டி இணைய வேண்டுமாம். அதேபோல் வி.ஐ.பி. லைவ் பார்க்க, மாதம் 3999 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டுமாம். சில்வர் மெம்பராக இருந்தால் மாதம் 7999 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டுமாம். தனிப்பட்ட முறையில் தனியாக அந்த கண்றாவிகளைப் பார்க்க வேண்டும் என்றால் மாதம் 11,999 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டுமாம். இதில் தனிப்பட்ட முறையில் நாள்தோறும் ஆபாசப் பந்தி வைப்பார்களாம். இப்படி பணத்துக்காக உடம்பை வெளிச்சம் காட்டும் சாதனா, தன்னைப் பத்தி அவதூறு பேசறதா புகார் கொடுத்திருப்பது உலகமகா காமெடி. இப்படிப்பட்ட ஆபாசக் கும்பல்களை முழுசா மடக்கி, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, தமிழ்நாட்டின் மானம் காத்துலதான் பறக்கும்''’ என்றார்கள் ஆதங்கமாக.

இனியாவது இந்த ஆபாச டிக்டாக் கும்பல்களை காவல்துறை ஒடுக்குமா?

Advertisment