தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்களும், இலங்கை கடற்படையினரும் தாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகிவருகிறது.
நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த சந்திரபாபுவுக்குச் சொந்தமான பைபர் படகில் 6 மீனவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே இரவு நேரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பைபர் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 8 பேர், நாகை மீனவர்களின் படகிற்குள் ஏறி தாங்கள் கொண்டுவந்த இரும்பு ராடுகளாலும், கத்திகளைக் கொண்டும் நாகை மீனவர்களை கடுமையாகத் தாக்கி அவர்களிடமிருந்த மொத்தப்பொருட்களையும் பறித்துச்சென்றனர்.
அதேநாளில் நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் சசிகுமார் உள்ளிட்ட 5 பேர் கோடியக் கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இரண்டு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் கொண்ட கூட்டம், நாகை மீனவர்களின் படகைச் சுற்றிவளைத்து மீனவர்களைத் தாக்கியதோடு, படகு எஞ்சின், ஜி.பி.எஸ். கருவி, வலை உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் பறித்துச்சென்றனர்.
கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த சிவசங்கர், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மீதமுள்ளவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலதண்டாயுதம், தனக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் காரைக்காலை சேர்ந்த 24 மீனவர்களுடன் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நான்கு விசைப்படகுகளில் வந்த 50-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள், காரைக்கால் மீனவர்களின் இரண்டு படகுகளை மறித்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலைவெறியோடு தாக்கியதோடு, இரண்டு விசைப்படகுகளையும் சிறைபிடித்து, காரைக்கால் மீனவர்களை அடித்து விரட்டிவிட்டு ஆந்திராவுக்கு கொண்டுசென்றனர்.
இந்நிலையில், "சிறை பிடிக்கப்பட்ட எங்களது விசைப்படகுகளை உடனடியாக மீட்டுத்தருவதோடு தாக்குதல் நடத்திய ஆந்திர மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என புதுச்சேரி அரசுக்கு காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் ஒருபுறமிருக்க, நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் வெளி மாவட்ட, வெளியூர் மீனவர்கள் வந்து மீன்பிடிக்கக் கூடாது என ஆறுகாட்டுதுறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானமான்மகாதேவி, மணியன் தீவு உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி பெண்கள், குழந்தைகளுடன் கடலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு மீனவர்கள் சிலரிடம் இதுபற்றி விசாரித்தோம். "இந்த பகுதி யிலுள்ள மீனவர்கள் சின்னச் சின்ன படகுகளை வைத்து மீன்பிடிக்கிறோம். வெளிமாவட்ட மீனவர்கள் வல்லம் எனப்படும் பெரிய படகுகள் கொண்டுவந்து நிறைய மீன்களைப் பிடித்து குறைவான விலைக்கு எங்களுக்குப் போட்டியாக விற்கின்றனர். நாங்கள் பிடித்துவரும் சொற்ப மீன்களை விற்பதில் சிரமம் ஏற்பட்டு வாழ்வா தாரமே பாதிக்கப்படுகிறது. அதோடு, கடலில் நாங்கள் விரிக்கும் சிறிய வலைகளையும் அறுத்து விடுகின்றனர். கோடியக்கரை பகுதியைச்சேர்ந்த சில மீனவர்களும், ஒருசில வியாபாரிகளும் தங்கள் சுயலாபத்திற்காக வெளிமாவட்ட மீனவர்கள் துணையுடன் எங்க வயிற்றில் அடிக்கிறாங்க'' என்கிறார்கள்.
வெளிமாவட்ட மீனவர்களோ, "கோடியக் கரை பகுதியில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி காலம். கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக கோடியக்கரை சீசனில் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராம நாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லிருந்து மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அக்டோபர், நவம்பர் மாதங்கள் வடகிழக்குப் பருவமழையும், வங்கக்கடலில் ஏற்படும் புயல் சீற்றங்களாலும், கடல் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து கோடியக்கரைக்கு அருகேயுள்ள பாக்சலசந்தி பகுதியைத் தாண்டி போய்வருவது முடியாத காரியம். கோடியக்கரையில் தங்கி இயற்கைத் துறைமுகமாக விளங்கும் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து பிழைக்கிறோம். இந்நடைமுறை கடந்த 75 வருடங்களாகவே இருக்கிறது. கொரோனா சமயத்தில் எங்களுக்கு தடைவிதித்தனர். அதனை இப்போதும் அப்படியே தொடர நினைக்கின்றனர்.
இந்த சீசனில் கோடியக்கரைக்கு சென்று தங்கி மீன்பிடித்தால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் பாதிப்பில்லாமல் இருக்கும். மற்ற பகுதியில் சீசன் வரும்போது இங்குள்ளவர்களும் போவது வழக்கமானதுதான். இப்ப புதுசா படகுகளை சிறை பிடித்து தாக்குதல் செய்யுறாங்க. இவங்களுக்கும் இலங்கை போன்ற வெளிநாட்டு மீனவர்களுக்கும் என்ன வித்தியாசம்?. இந்த விவகாரத்திற்கு பின்னால் மீன் ஏலப் பிரச்சனை இருக்கிறது. மீன் ஏலப் பிரச்சனைக்கு பின்னால் தி.மு.க. மாவட்ட பிரமுகருக்கு வேண்டிய உடன்பிறப்புக்களின் கைவரிசை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள்தான் சக மீனவர்களைத் தூண்டிவிட்டு பிரச்சனையைப் பெரிதாக்குறாங்க'' என்கிறார்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் கோடியக்கரை மீனவ கிராம தலைவர் அனந்த ராமனும், சக மீனவர்களும், வியாபாரிகளும் கூறுகையில், "வெளி மாவட்ட மீனவர்கள் சீசன் காலங்களில் 30 டன்னுக்கும் அதிகமாக பிடிப்பார்கள். இதன்மூலம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும்.. பணப் புழக்கத்தாலும், அதிகபேர் வந்து தங்கிச் செல்வதாலும் தனித் தீவாகவே இருக்கும் எங்கள் பகுதியில் வியாபாரங்களும் நன்றாக நடக்கும். 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதா ரம் செழிக்கிறது. இயற்கைச் சீற்றத்தை கடந்து பாதுகாப்பான இடம் என்பதால் சீசனுக்கு இங்குவந்து மீன்பிடித்து வாழ்கிறார்கள். அவர் களால் இந்தப் பகுதிக்கு வருவாய்தானேயொழிய பாதிப்பில்லை'' என்கிறார்கள்.
அரசுத் தரப்பில் இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இடைக்கால தீர்வு கண்டுள்ளனர்.