ஒரு நூற்றாண்டுக்கு நெருக்கமான தனது வயதில் மிகப்பெரிய பகுதியை சமூக நீதிக்காகவும், மாநில நலனுக்காகவும் செலவிட்ட தி.மு.க. தலைவர் கலைஞர் பிறந்தது திருக்குவளையில். வளர்ந்தது திருவாரூரில். இரண்டுமுறை திருவாரூர் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றவர். 2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
திருவாரூரில் புலிவலம் திக.தியாகராஜன், திருவாரூர் கு.தென்னன், கருணை எம்.ஜமால், வி.ஆர்.என்.நடராஜன் ஆகிய காலஞ்சென்ற நண்பர்கள். கழக உயர்நிலைப்பள்ளியில் (தற்போது வடபாதிமங்கலம் சோமசுந்தரம் மேல்நிலைப்பள்ளி) தன்னைச் சேர்த்துக்கொள்ள மறுத்தபோது, "கமலாலய குளத்தில் குதித்துவிடுவேன்' என சிறுவயதிலேயே போராட்டத்தை முன்னெடுத்த கலைஞரின் பல நினைவுகளை உள்ளடக்கியது திருவாரூர். கலைஞரின் மறைவு மற்றெந்த ஊர்களையும்விட மிகப்பெரிய இழப்பை இங்கு ஏற்படுத்திவிட்டது.
திருவாரூரில் நீண்டகாலமாக ஒன்றியச் செயலாளராக இருந்த ஆர்.பி.சுப்ரமணியன் கலைஞர் பற்றி பேசுகையில், ""திருவாரூர் வீதிகளை சீராக்கி ஐம்பது ஆண்டுகளாக ஓடாமல் கிடந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனமுறையில் ஓடவைத்தவர் கலைஞர். "ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி கிடக்கையிலே தேரோட்டம் உனக்கொரு கேடா தியாகேசா!’என கேட்டவரே இன்று தேரை ஓட்டலாமா' என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, “"உழவரெல்லாம் ஒருகாலத்தில் ஏங்கிக்கிடந்தாங்க... எங்க ஆட்சியில்தான் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்துவிட்டோமே'’எனக் கூறி வாயடைத்தவர் அவர். கலைஞர் எப்போது திருவாரூர் வந்தாலும் திருவிழா மனநிலைதான் மக்களுக்கு. விவசாயிகளையும், விவசாயக்கூலிகளையும் கொண்ட இந்தப்பகுதியில் நிலவுடைமையாளர்களின் கொடுமைகளுக்கு பஞ்சமில்லாத காலம். சாணிப்பால், சவுக்கடி என்றிருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் நிலம், நியாயமான கூலி, சம உரிமை எனக் கொண்டுவந்தவர் கலைஞர்.
தனி மாவட்டம், அதற்கான ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகள், மத்திய பல்கலைக்கழகம், புதிய பேருந்துநிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி, புதிய நகராட்சி அலுவலகம், சாலை விரிவாக்கம் என அவர் கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். அதனால்தான் மக்களும் அவரை இரண்டுமுறை மாபெரும் வெற்றிபெறச் செய்தனர். ஆனால், இரண்டுமுறையும் அவர் ஆட்சியில் இல்லாததால், ஆளும் அரசு திருவாரூரைக் கண்டுகொள்ளவில்லை. சுத்தமாகப் புறக்கணித்தது. இன்று தந்தையை இழந்த குழந்தைகளைப்போல வாடுகிறோம்''’என்கிறார் கலங்கியபடி.
கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணிச்செயலாளர் மாசிலாமணி, ""திருவாரூர் என்ற பெயர் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் கலைஞர். சாதாரண விவசாய மாவட்டத்தில் பிறந்து, இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர். சமூக சமத்துவத்திற்கான இலக்கை எட்டும் நேரத்தில் அவர் மறைந்திருப்பது பேரிழப்பு. விவசாயிகள் செய்துவந்த குடிமராமத்து நின்றபோது, அதற்கென நிதி ஒதுக்கி அந்தப் பணிகளை மேற்கொண்டவர் கலைஞர். ஆனால், இன்றோ குடிமராமத்து என்ற பெயரில் கோடிகோடியாகக் கொள்ளையடிக்கின்றனர். உழைப்பவனுக்கே நிலம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், காவிரி நடுவர் மன்றம் என அவரது ஆட்சியில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் செய்தவைகள் எண்ணற்றவை. போராட்டங்களுக்கு மதிப்பளித்து ஆட்சிசெய்தவர். அவர் சேர்த்த பெருமைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்''’என பெருமிதத்துடன் பேசிமுடித்தார்.
கலைஞர் மறைந்துவிட்ட செய்தியறிந்த அவரது சொந்தஊரான திருக்குவளை மக்கள், அவர் வீட்டின்முன்பு கூடி, சொந்த இழப்பாகக் கருதி கதறியழுதனர். அவர் வீட்டுவாசலில் பந்தலமைத்து, திருவுருவப்படம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். ""காடாகக் கிடந்த ஊர, டெல்லி சீம வரைக்கும் கொண்டுசேர்த்த ராசா, நீ கட்டிவச்ச மருத்துவமனையும், தாலுகா ஆபீசும், பல்கலைக்கழகமும் உன்பேர சொல்லுதய்யா''’என கூடியிருந்த சில பெண்கள் ஒப்பாரிப் பாடலாக பாடினர். பிறகு அங்குள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஊர்வலம் நடத்த, திருக்குவளைக்கு அடுத்துள்ள எட்டுக்குடிகோயிலில் இருந்து ஐந்து கிராம மக்கள், சொர்ணக்குடி, சத்தியமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பேரணியாக சென்றனர்.
திருவாரூரில் வீடுகள் முழுவதிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. முக்கிய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. கலைஞர் வந்தால் தங்கும் அவரது சகோதரி இல்லமிருக்கும் சன்னதிதெருவிலும், காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மையாரின் நினைவிடத்திலும், திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்திலும், கலைஞருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பல இடங்களிலும் அவரது படங்களை வைத்து மரியாதை செய்திருந்தனர். அவர் படித்த பள்ளியில் 2000 மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விஜயபுரம் பகுதியில் வர்த்தகர்களோடு சேர்ந்து, ஆட்டோ, லாரி ஓட்டுநர்களும், உரிமையாளர்களும், பொதுமக்களும் அமைதியாக பேரணி நடத்தினர். கூடூர், மாவூர் பொதுமக்களும் ஊர்வலமாக செல்ல, கீழ்வேளூர் அருகே உள்ள இலுப்பூர் கிராமத்தினர் சிலர் கலைஞருக்காக மொட்டையடித்துக் கொண்டனர். நாகை மாவட்ட மீனவர்கள் கலைஞருக்கு மரியாதை செலுத்தும்விதமாக கடலுக்கு செல்லவில்லை.
""திருவாரூர் வீதிகளை பாதங்களால் அளந்த நினைவுகளை, கமலாலய குளக்கரையில் அமர்ந்து அசைபோடுவார் கலைஞர். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'’’ என்ற கரகரத்த குரலைப்போல, அவரது நினைவுகள் என்றும் அன்பின் அதிர்வை ஏற்படுத்தும்'' என்கின்றனர் திருவாரூர் மக்கள்.
-க.செல்வகுமார்