கொடநாடு கொலை -கொள்ளை வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டிக் கொண்டி ருக்கும் நிலையில், மர்ம விபத்தில் இறந்த டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலை நீலகிரி எஸ்.பி. ஆசிஷ்ராவத் விசாரித்து இருக்கிறார்.
எனது தம்பி கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை. எனது தம்பி கனகராஜ் அப்போதைய மா.செ. சரவணன் மூலம் ஜெ.வுக்கு டிரைவராக போனார். நல்ல பெயர் எடுத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி பறிபோனது. அதற்கு காரணம் கனகராஜ்தான் என கோபம் கொண்டார் பழனிச்சாமி.
நாங்கள் உறவினர்கள்தான். கட்சியில் பழனிச்சாமி என்னை வளர விடவில்லை. எடப்பாடி தொகுதியில் எனக்கு அ.தி.மு.க.வில் நிற்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பழனிச்சாமிதான் அடுத்தமுறை நீ நில் என்று சொல்லிவிட்டார். நான் சங்ககிரி தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்டினேன்.
எனக்கு என் தம்பி கனகராஜ் உறுதுணையாக இருந்ததால் என் தம்பியை என்னிடமிருந்து பிரித்தார் பழனிச்சாமி. எங்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தையே இல்லாமல் செய்தார்.
திடீர் என முதல்வராகும் வாய்ப்பு கிடைத்ததும் என்னை கட்சியில் இருந்தே நீக்கினார். அப்போது ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம், தங்கமணி உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.க் கள் அளவுக்கு மீறி சம்பாதித்ததை ஒப்புக் கொண்டு அம்மாவிடம் எழுதிக் கொடுத்த ஆவணங்களோடு, வீடியோக்களும் கொடநாட்டிற்குள் இருந்தது.
அதை எடுத் தால்... எல்லோருடைய குடுமியையும் தன் கையில் சிக்கும் அதை வைத்து எல்லோரையும் பணிய வைத்துவிடலாம் என்று பழனிச்சாமி போட்ட கணக்கில்தான் எனது தம்பி கனகராஜ் மாட்டிக்கொண்டான். பழனிச்சாமிக்கு உதவியாக செயல்பட்டிருக்கிறான். கொள்ளை அடிக்கப் போனவர்கள் கொலை செய்யும் நோக்கத்தோடு போகவில்லை. எதிர்பாராத விதமாகத்தான் வாட்ச்மேன் ஓம் பகதூரை கொலை செய்துவிட்டார்கள்.
இந்த கொலை நடக்காமல் இருந்திருந்தால் இந்த விஷயம் வெளிப் பட்டிருக்காது. கனகராஜ் உயிரோடு இருந்திருப்பான். ஆனால் எதிர்பாராதது நடந்துவிட்டது எனக் கருதிய எடப்பாடி பழனிசாமி தரப்பு, காரியம் முடிந்ததும் எங்கே தங்கள் மேட்டர் வெளியே தெரிந்து விடுமோ என்று நினைத்துதான் கனகராஜை இயற்கை மரணம் என்கிற பெயரில் விபத்துக் குள்ளாக்கிவிட்டனர். நான் இதை அரசியல் லாபத்துக்காக சொல்லவில்லை . இருநூறு சதவிகிதம் உண்மையாகத்தான் சொல்கிறேன் .
இப்போது கூட அடையாளம் தெரியாத நபர்கள் என் காரின் பின்னாலும், டூ வீலர் பின்னாலும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். எனக்கும் எந்த நேரத்திலும் இயற்கையான செயற்கை மரணம் வரலாம் என்பதை தெரிந்தேதான் நான் என் தம்பியின் கொலை வழக்கு பின்னால் உண்மையை ஏந்தி ஓடிக்கொண்டிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமிதான் கொடநாடு விவகாரங்களின் பின்னணியில் இருக்கிறார். இதை எப்போதும் சொல்வேன்'' என்றிருக்கிறார் கனகராஜின் அண்ணன் தனபால்.
சயானிடம் நடத்திய விசாரணை அறிக்கையையும், தனபாலிடம் நடத்திய விசாரணை அறிக்கையையும் போலீசார் 27-ந் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்கள். அன்று கொடநாடு எஸ்டேட் மேல் கெட்டிப்பட்டிருக்கும் சந்தேகப் பனி உருக ஆரம்பிக்கலாம் என்கிறார்கள் வழக்கை அறிந்தவர்கள்.