டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடர்ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளச் செல்லும் இளம் வீராங்கனை ரேவதி, மதுரை, சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
ஒலிம்பிக்கில் சாதனை படைக்க இருக்கும் இந்த வீராங்கனையின் வாழ்க்கை மிகவும் துன்பகரமானது. இவர் சிறுவயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்தவர். வருமானத்துக்கே சிரமப்படும் ஏழ்மையான குடும்பத்தில், மிகுந்த மனக்கஷ்டம், பணக்கஷ்டத்துக்கு இடையே இவரை வளர்த்து ஆளாக்கியவர், பாட்டி வீரம்மாள். தான் வளர்த்த பேத்தி, ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள மகிழ்ச்சியான தருணத்தில் பாட்டி வீரம்மாளைச் சந்தித்தோம். ”
"என் மகன்வழிப் பேத்தி ரேவதி. அவ அப்பா, ரேவதி 4-வது படிக்கும்போது குடிச்சே குடல் வெந்து செத்துப்போயிட்டார். அடுத்து அவ அம்மா மூளைகாய்ச்சலில் இறந்துவிட்டாள். இந்த கரிசல்காட்டுல கூலி வேலை செய்துகொண்டு என் கூடவே வயக்காட்டுக்கு வந்தவளை, அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டால், "சத்துணவு சாப்பாடாவது கிடைக்கும்'னு ஒண்ணாவது சேர்த்துவிட்டேன். ரேவதி எட்டாவது படிக்கும்போது "ஓட்டப்பந்தயத்தில் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள் பாட்டி, அதுல சேர்ந்து ஓடி பரிசு வாங்கணும் பாட்டி'ன்னு சொன்னாள். "ஏன்டா பொம்பளப் பிள்ளைக்கு விளையாட்டெல்லாம்?'' என்றேன். "போ பாட்டி... கட்டாயம் கலந்துக்குவேன்'' என்றாள். பின்பு சம்மதித்த நான், என் பேத்தியின் வீரத்தைப் பாராட்டி தைரியப்படுத்தினேன். அந்த போட்டியில முதலாவதா ஓடிவந்து பரிசு வாங்கினாள். அன்றிலிருந்து பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் தொடர்ந்து கலந்துக்கிட்டாள்.
எங்க வீட்டில் முதன் முதலில் கலைஞர் டி.வி. வந்தது. அவள் பள்ளிவிட்டு வந்தாலே விளையாட்டுச் சேனலத் தான் எப்பவும் பார்த்துக்கிட்டே இருப்பா. ஏண்டி, பி.டி.உஷா மாதிரி ஓடி தங்கப் பதக்கம் வாங்குவேன்னு சொல்றீயே, பெரிய பெரிய வெள்ளைக்காரிக கூடல்லாம் சரிக்குச்சமமா ஓட முடியுமான்னு கேட்பேன். அதுக்கு அவ, "நா வீரத்தமிழச்சி... நாம வெள்ளக்காரிக்கு கொறஞ்சா போயிட்டோம்ப்பா. ஒருநாள் அந்த வெள்ளக் காரிகளயெல்லாம் ஜெயிச்சி முத ஆளா தங்கப்பதக்கம் வாங்குறத நீ டி.வி.யில பார்ப்ப பாரு'ன்னு சொல்லுவா. படிப்புலயும் அவ கெட்டிக்காரி. அத்தனை கஷ்டத்துலயும், பேத்தியோட ஆசைக்காக கல்லூரியிலயும் சேர்த்துவிட்டேன். கல்லூரிப் போட்டி ஒண்ணுல இன்னொரு பிள்ளைகிட்ட ஷூ இரவல் வாங்கி மாட்டிக்கிட்டு ஓடி முதலாவதா வந்ததப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன், அவளோட திறமையைப் பார்த்து, அவளோட ஓட்டப்பந்தயத்துக்கான செலவு அனைத்தையும் பொறுப்பேத்துக்கறேன்னு சொல்லிட்டாரு. தினமும் காலைலயும் மாலைலயும் ஓட்டப்பந்தயப் பயிற்சி கொடுத்தார்.
இப்படி இருக்கப்பத் தான் ஒருநாள் என் பேத்தி எனக்கு போன் போட்டு, "பாட்டி நீ அடிக்கடி சொல்லுவியே பி.டி.உஷா மாதிரி என் பேத்தி இந்தியா வுக்காக ஓடி தங்கப்பதக்கம் வாங்கணும், அதை என் கண்ணால பாக்கணும்னு, அது இப்ப நடக்கப் போகுது... வெள்ளக்காரிகளோட போட்டி போட்டு ஓடுறதுக்காக ஒலிம்பிக் போட்டிக்கு உன் பேத்தியை தேர்ந்தெடுத்திருக்காங்க. நம்ம நாட்டுக்காக ஓடப்போறேன்னு எனக்குத்தான் முதலில் போன் பண்ணி சொன்னா. எனக்கு தலைகாலு புரியல. ஊரெல்லாம் டமாரம் அடிச்சிட்டேன் சந்தோசம் தாங்க முடியலப்பா. என் பேத்தி ஓடுறத நேர்ல பார்க்கணும்போல இருக்குப்பா'' என்று கண்கலங்கிச் சொன்னார் பாட்டி வீரம்மாள்.
ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன் நம்மிடம், "2015-ல் மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் பயிற்சியாளராக இருந்தபோது இந்த பொண்ணு வெறுங்காலில் மிக வேகமாக ஓடியதைப் பார்த்து அசந்து போனேன். அவரைப் பற்றி விசாரிக்கிறப்ப, ஒரு குக்கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்து விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வாகி இங்கு பயிற்சி எடுக்கிறார் என்று தெரிந்து, அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு சின்ன குடிசை வீட்டில்தான் தனது பாட்டியுடன் இருந்தார். பாட்டி, உங்க பேத்தி மிகவும் திறமையாக இருக்கிறார். தைரியமாக பயிற்சிக்கு அனுப்புங்க. ஒரு நாள் உங்களுக்கும் இந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பாள் என்றேன்.
ஒவ்வொரு முறையும் பேத்தி பயிற்சிக்கு வரும்போதெல்லாம் கூடவே பாட்டியும் வருவாங்க. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேசிய அளவில் கலந்துகொண்டு மூன்று பதக்கங்களை பெற்றார். இது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. அடுத்தடுத்து தேசிய அளவில் பங்குகொண்டு பதக்கங்களைப் பெற்றவர்... தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், தடகளப் போட்டிகள் ஜூலை 31-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவு பெறுகின்றன. அதில் கலந்துகொள்ள "மதுரை' ரேவதி வீரமணி தேர்வாகியிருப்பது மிகுந்த சந்தோசத்தையும் புதிய நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. கடைக்கோடியில் இருந்தாலும் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பது நிதர்சனம் ஆகியுள்ளது. ரேவதி வீரமணி, இந்தியாவிற்கே நற்பெயரைப் பெற்றுத் தருவார் என நம்பிக்கை உள்ளது'' என்றார்.
ரேவதியுடன் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் ஆகிய தமிழக தடகள நட்சத்திரங்களும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்திருக்கிறது.