பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, கலைஞர் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதலில் வந்தது திருக்குவளைக்கும் திருவாரூக்கும் தான். திருவாரூரில் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின் பத்தாண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று கழக ஆட்சியை தமிழகத்தில் அமைத்திருக்கிறார். இரண்டாம் அலையில் நெஞ்சு நிமிர்த்தி நின்ற கொரோனாவை கட்டுப்படுத்திய பின், கலைஞரின் வழியில் திருவாரூக்கு வருகைதந்தார். முதல்வரான பின் தன் குடும்பத்தினருடன் மேற்கொண்ட முதல் பயணம் இது. தேர்தல் வெற்றிக்கான நன்றியறிவிப்பு பயணமாக மட்டும் அமையாமல், மக்களுடனான தொடர்பை உறுதிப்படுத்தும் பயணமாக அமைந்திருந்தது.
திருச்சியிலிருந்து திருவாரூருக்கு காரில் வந்தவர், திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் அங்கு செயல்பட்டு வந்த செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கொள்முதல் நிலைய அதிகாரிகளிடமும் சுமைதூக்கும் தொழிலாளர்களிடமும், "விவசாயிகளிடம் 40 ரூபாய் வாங்குறீங்களாமே, இனி அப்படி நடக்கக்கூடாது, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் மனம் நோகாதபடி நடந்து கொள்ளவேண்டும்''’என்றார். அங்கிருந்த தொழிலாளர்களோ "எங்களுக்கு சம்பளம் போதுமானதாக கொடுத்தால் விவசாயிகளிடம் கையேந்த மாட்டோம் அய்யா'' என கூற, நானும் "உங்களில் ஒருவன் தான், உங்களுக்கு நல்லது நடக்கும்'' எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.
மறைந்த இயற்கை வேளாண்மை ஆர்வலர் நெல் ஜெயராமனின் அண்ணன் மகனும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ராஜிவ் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இலுப்பைப்பூ சம்பா, கருப்பு கவுனி, துளசிவாசனை சீரக சம்பா, சேலம் சன்னா ஆகிய பாரம்பரிய நெல்லை கொடுத்து மரியாதை செய்தனர். அதோடு நெல் ஜெயராமன் பெயரில் விதை வங்கி உருவாக்கவேண்டும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். சத்துணவில் பாரம்பரிய அரிசியை வழங்கவேண்டும், பாரம்பரிய நெல்லை ஆவணப் படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் செல்லும் போது, காட்டூரிலுள்ள அவரது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்குச் சென்றார். அவரோடு துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா, பேரப்பிள்ளைகளுடன் மரியாதை செலுத்தினார். காட்டூரிலிருந்து திருவாரூர் செல்லும்போது, பவித்திரமாணிக்கத்தில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் கையில் புத்தகத்தோடு நிற்பதைக் கவனித்த முதல்வர் ஸ்டாலின் தனது காரை நிறுத்தச்சொல்லி அவர்களிடம் பேசினார். அப்போது அந்த மாணவர்கள் கலைஞர் உரையெழுதிய திருக்குறள் புத்தகத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசளித்தனர். இரவு, திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் வளர்ந்த வீட்டில் குடும்பத்துடன் தங்கினார் மு.க.ஸ்டாலின்.
மறுநாள் காலை ஏழாம் தேதி சன்னதி தெரு இல்லத்திலிருந்து நடைபயணமாக தெற்கு வீதி வரை நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து திருவாரூரில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் சென்றார். திடீரென வாகனத்தை நிறுத்தச் சொல்லி ஓடம்போக்கி ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்பு 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த தாய் சேய் நலப் பிரிவு மையத்தை திறந்து வைத்துவிட்டு, முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட காட்டூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் விமலா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
திருக்குவளைக்கு செல்லும் கலைஞரின் உற்ற நண்பர்களுள் ஒருவரும், முன்னாள் ஒன்றியச் செய லாளருமான புலிவலம் ஆர், பி, சுப்பிரமணியனை முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கட்சியின் மூத்த பிரமுகரான புலிவலம் சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்திருக்க, முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி இருவரும் நின்றவாறே அவரிடம் நலம் விசாரித்தனர். தந்தையின் நண்பருக்கும் அவரது வயதுக்கும் முதல்வர் அளித்த மரியாதை, உடன் வந்த அதிகாரிகளையே ஆச்சரியப்பட வைத்தது.
கலைஞர் திருவாரூர் வந்தால், அவருக்கு விரால் மீன்குழம்பு சாப்பாடு சுப்ரமணியன் வீட்டிலிருந்துதான் போகும், கடைசி வரை அது தொடர்ந்தது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் கலைஞர் வருகைக்காக திருவாரூர் ரயிலடியில் நின்றவர் ஆர்.பி.சுப்பிர மணியம். கலைஞரின் மகனும் பேரனும் அவர் முன் நின்றபடி நலம் விசாரித்தது, எங்களை கண்கலங்கச் செய்துவிட்டது, இதுக்குப் பேருதான் குடும்பப் பாச முள்ள கட்சி‘’ என்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள்.
அங்கிருந்து திருக்குவளை செல்லும் வழியில், பின்னவாசல் என்கிற கிராமத்தில் எஸ்.ஆர் சோப்ரா. எஸ், ரமா ஆகியோர் திருமண மண்டபத்தின் முன்பாக மணக்கோலத்தில் நின்றதைக் கவனித்தவர் காரை நிறுத்தச் சொல்லி அந்த இணையரின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு சென்றார்.
திருக்குவளையில் உள்ள குலதெய்வ கோயிலின் மரியாதைக்குப் பிறகு, கலைஞர் பிறந்த வீட்டிற்கு குடும்பத்தினருடனும் கட்சி நிர்வாகி களுடனும் தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடனும் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கிருந்த கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வை யாளர் பதிவேட்டில் ”முதல்வர், தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, ஓயாது பணியாற்றிய உழைப்பால் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நான் எடுத்துக்கொள்ளும் உறுதி, தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார் பதவி என்பது பொறுப்பு என்பார், ஆக பொறுப்போடு மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்'’ என்று எழுதி கையொப்பம் இட்டுவிட்டு கிளம்பினார்.
ஸ்டாலின் வருகை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த கால ஆட்சிகளில் முதல்வர் விசிட் என்றாலே முன்கூட்டியே இடங்கள் பிக்ஸ் பண்ணி அதற்கான பாதுகாப்பு, உள்ளிட்ட செட்டிங் இருக்கும், ஆனால் ஸ்டாலின் வருகையும் அவரது செயல்பாடுகளும் முற்றிலுமாக மாறியிருக்கு, பொதுமக்கள் எளிமையாக சந்திக்கிறாங்க, மனு கொடுக்கிறாங்க, மனு மீதான நடவடிக்கை இருப்பதனால்தான் மக்கள் மனுவோடு காத்திருக்காங்க, அதேபோல முதல்வரும் எந்தவித திட்டமிடலும் இல்லாம ரோட்டில் நிற்கும் மக்களை திடீர், திடீர்னு காரை நிறுத்தி சந்தித்து குறைகளைக் கேட்கிறார். எங்களுக்கு அச்சம் இருந்தாலும், மக்களுக்கான ஆட்சி மீண்டும் வந்துவிட்டது என்ற நம்பிக்கை உருவாகியிருப்பதை மறக்க முடியாது''” என்கிறார் கடமையுணர்வுடன்.