தாராபுரத்தில் எல்.முருகன் ஆதரவாளர்கள் ஜட்டியோடு துரத்தியடிக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும், முருகனுக்கும் இடையேயான அதிகார மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரதமர் மோடியின் மனதின் குரல் எனப்படும் "மன் கி பாத்' 100வது நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் ஒளிபரப்பிட பா.ஜ.க. மேலிடம் கட்டளையிட்டதால் அந்நிகழ்ச்சியை பா.ஜ.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட பிரச்சார அணியின் ஏற்பாட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் பெரிய திரை கட்டி நிகழ்ச்சியை, அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒளிபரப்பினர். "மாவட்ட நிர்வாகிகளான தலைவர், செயலாளர் உள்ளிட்ட நாங்கள் இருக்கும்போது யாரைக் கேட்டு ஒளிபரப்பினாய்? தன்னிச்சையாய் ஒளிபரப்ப அதிகாரம் கொடுத்தது யார்?'' என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தரப்பு அதட்டியிருக்கிறது. இதில் வாக்குவாதம் முற்றி, முருகனின் ஆதரவாளரான மாவட்ட தலைவர் மங்களம் ரவியின் வேஷ்டி அவிழ்க்கப்பட்டு, ஜட்டியோடு ஓட... ஓட உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட வீடியோ பா.ஜ.க.வின் தேசியத்தலைமை வரை வைரலாகியிருக்கிறது.
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் முருகன் தோற்றார். எனினும் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதே வேளையில் 2021, ஜூலை 8 அன்று, தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாவட்டந்தோறும் புதிதாக நிர்வாகிகளை நியமிக்கையில், தான் தோற்ற தொகுதியில் தனக்கான மரியாதை வேண்டுமென தலைமை யிடம் போராடியிருக்கின்றார் மத்திய இணையமைச்ச ரான முருகன். அண்ணாமலை விடாப்பிடியாக மறுத்த நிலையில், தன்னுடைய மேலிடச் செல்வாக்கின் மூலம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக, தன்னுடைய ஆதரவாளரான அ.தி.மு.க.வின் மங்களம் ரவியை கொண்டு வந்தார் முருகன். அன்றிலிருந்து திருப்பூர் தெற்கு மாவட் டத்தில் அண்ணாமலையா? முருகனா? என்கிற அதிகார மோதலில், மாவட்டத் தலைவர் மங்களம் ரவியின் நிகழ்ச்சியை அண்ணாமலை ஆதரவாளர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர்'' என்கிறார் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி.
தன்னைப் புறக்கணிப்பதற்கு காரணமானவர்களென, பட்டியல் அணி சித்தார்த்தன் வேலுச்சாமி, ஓ.பி.சி. அணி சிவலிங்கம், ஊடகப்பிரிவு கதிரவன், அரசுத் தொடர்பு பிரிவு கார்த்திகேய ராஜ், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு சங்கரகோபால், தொழில் பிரிவு லோகேஷ் குமார், பிரச்சார பிரிவு சின்ராஜ், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் கார்த்திகேயன் ஞானமூர்த்தி, பிறமொழி பிரிவு மித்திலேஷ் குப்தா மற்றும் விருந்தோம்பல் பிரிவு ராஜேஷ் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை கடந்த 14-03-2023 அன்று கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் மங்களம் ரவி. மாவட்ட பொருளாளரான கொங்கு ரமேஷை மாவட்ட துணைத்தலைவராக பதவி இறக்கம் செய்திருந்தார். ஆனால், கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமோ, அனைத்து நடவடிக்கையையும் நீக்கினார்.
தாராபுரம் பகுதி பா.ஜ.க. கிளை நிர்வாகி ஒருவரோ, "நீக்கப்பட்ட அனைவரும் பத்து தலை டீம் எனத் தங்களைத் தாங்களே குறிப்பிட்டுக்கொண்டு மங்களம் ரவி கைலாசா பாரில் மாமூல் கேட்டு அடிவாங்கியது, மணல் கொள்ளை, நிலமோசடிகளில் ஈடுபட்டது, மற்றும் ம.தி.மு.க. கட்சியினருடன் சுற்றுலா சென்றதையெல்லாம் ஆதாரப்பூர்வமாக தலைமைக்கு போட்டுக்கொடுத்து வந்தனர். இது மங்களம் ரவிக்கு மிகுந்த தலைவலியை உருவாக்கியது.
இந்நிலையில் தாராபுரத்தை சேர்ந்த குணசேகரன் எனும் கட்சி நிர்வாகி மன் கி பாத் நிகழ்ச்சியை, கொங்கு ரமேஷின் ஹோட்டலில் ஒளிபரப்பு செய்து மங்கள ரவிக்கு வயிற்றெரிச்சலை உருவாக் கினர். ஞாயிறன்று இரவு 8 மணி அளவில் 10 நபர்களும் உருட்டுக்கட்டைகளுடன் கொங்கு ரமேஷின் ஹோட்டலுக்கு வந்த மங்களம் ரவி வம்பிழுக்க, அண்ணாமலை ஆதரவாளர்களோ இவர்களைத் துரத்தித் துரத்தி அடித்தனர். இதில் அண்ணாமலை ஆதரவாளர்களுடன் இணைந்துகொண்டது இந்து மக்கள் கட்சியின் ஈஸ்வரன் டீம். (இவர் மங்களம் ரவியால் கட்சியை விட்டு வெளியேறி இந்து மக்கள் கட்சியில் இணைந்துகொண்டது தனிக்கதை). இத்தாக்குதலில் மங்களம் ரவி ஜட்டியோடு ஓடியபோது, இந்து மக்கள் கட்சியின் பெண் நிர்வாகி ஆயிஷா, உருட்டுக்கட்டையை எடுத்து அவரது கணவர் சாகுல்அமீதிடம் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது'' என்றார்.
ராத்திரியானால் போதும் பத்து தலை டீம், மங்களம் ரவிக்கு போன் போட்டு காதுகூசும் அளவிற்கு காய்ச்சி எடுப்பது வழக்கமாம். சம்பவ தினத்தன்று பத்து தலை டீம் அங்கிருப்பதை கேள்விப்பட்டு வந்தபொழுது, இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸிற்கு தகவல் கூறியது மங்களம் ரவி டீம். "அவரை நாங்க திட்டுவது உண்மை என்றால், போன் காலை ரிக்கார்டு செய்து போலீஸில் புகார் கொடுத்திருக்கலாமே? எதற்கு உருட்டுக்கட்டையோடு எங்களைத் தாக்க வர வேண்டும்?'' என்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். இதற்காக என்ன கதை வைத்திருக்கிறார்கள் அண்ணாமலையும், முருகனும்?