திருப்பரங்குன்றம் தர்காவில் ஆடு, கோழி நேர்த்திக்கடனுக்கு எதிராகக் களமிறங்கிய இந்து முன்னணி, பா.ஜ.க.வினரின் அடுத்த பாய்ச்சல்தான் மதுரையில் முருக பக்த மாநாடு. கடந்த ஒரு மாதமாக "குன்றம்காக்க கோயில் காக்க!'“ என்ற அழைப்பிதழோடு ஒவ்வொரு குக்கிராமங்களிலும் மக்களைத் திரட்டி, ஜூன்-22-ல் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தினர்.

muruganmm

மதியம் மூன்று மணிக்கு கலைநிகழ்ச்சி களுடன் மாநாடு தொடங்கினாலும் மாநாடு நடந்த பகுதியைச் சுற்றி "தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் வேதம் ஓதவேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றத் தயாரா? முருகனின் ஆறுபடை வீடுகளிலும் தமிழ் அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றத் தயாரா?' என்ற போஸ்டர்கள் காணப்பட, கொஞ்சம் பதட்டமாயினர் பா.ஜ.க.வினர் இதுகுறித்து இந்து முன்னணியினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. போஸ்டர் ஒட்டிய தமிழர் தேசிய கழகம், மூவேந்தர் புலிப் படையைச் சேர்ந்தவர்கள் இதற்கெதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தினர் காவல்துறையினர். மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆதீன மடாதிபதிகள் வந்திருந்தனர். ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வருகைதந்திருந்தனர். மதுரை ஆதீனத்திற்கு அழைப்பிதழ்கொடுத்தும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா, செல்லூர்ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து "திருப்பரங்குன்றம் மலைமேலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி, திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் வகையில் குன்றம் குமரனுக்கே எனத் தீர்மானம், எந்த தேர்தலாக இருந்தாலும் இந்து வாக்குகள் ஒன்றாக இருக்கவேண்டும், மாதம்தோறும் எல்லோர் வீட்டிலும், கோவிலிலும் சஷ்டி நாளில் கந்தசஷ்டி கவசம் பாடவேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

அதன்பின் முன்னாள் பா.ஜ. தலைவர் பேசியபோது, "இரண்டு நாட்களுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அங்கு அவர் நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறை அழித்து விட்டு செல்ஃபி எடுக்கிறார். அவர் ஓட்டுப் பிச்சைக்காக நம்மிடம் வருவார்''’என திருமாவளவனை ஒருமையில் சாடினார். "2055-ல் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும்படி இஸ்லாமியர் மக்கள் தொகை உயர்ந்துகொண்டிருக்கிறது. 120 கோடியுள்ள நமது இந்துக்கள் மதம் மாறிவிடக் கூடாது. முருகனின் முதல் வீடு திருப்பரங்குன்றத்திற்கு பிரச்சினை செய்தால், சூரசம்ஹாரம் செய்துவிட்டு, திருத்தணிக்குச் சென்று விடுவோம்'' என்றார்.

அடுத்து பேசிய ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண், "தீயவர்களை வதம்செய்து அநீதியை அழித்தவர், உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானுக்காக இங்கு வந்துள்ளோம். முருகன் மாநாட்டை ஏன் குஜராத்தில், உ.பி.யில் நடத்தலாமே என சிலர் கேட்கிறார்கள். இந்த சிந்தனை ஆபத்தானது. முருகன் தமிழ்க் கடவுள் அதனால் தமிழ்நாட்டில் நடத்துகிறோம். எங்கள் மதத்திற்கு மரியாதை கொடுக்கா விட்டாலும் அவமரியாதை செய்யாதீர்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடுகொள்ளாது''” என்று மிரட்டல் விடுத்தார்.

murugan

Advertisment

ஆர்.எஸ்.எஸ். தலைவர் வன்னிராஜன் பேசுகையில் “"ஆனந்தமான நாள் இன்று. தமிழகத்தில், இந்து சமுதாய மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரக்கூடிய மாநாடு இந்த மாநாடு. இந்த மாநாட்டின் வெற்றி பெரிய எண்ணிக்கையில் திரண்டுள்ளதுதான். இடைக்காலத்தில் சமுதாயத்தில் சில குளறுபடி வந்தது, சமுதாயத்தில் மாற்றம்வேண்டும். இதே போன்று 6 நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள் ளோம்''’என ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த நகர்வுகளை கோடிகாட்டினார்.

அடுத்துப் பேசிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், “"மதுரை மண்ணில் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் வந்திருக்கிறது. இந்துக்களின் ஒற்றுமையைப் பார்த்து பரவசமடைகிறேன். நாம் நினைத்ததை அடைந்துவிடுவோம், வென்றுவிடுவோம்'' ’என்று முடித்துக்கொண்டார்.

இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்க தலைவர் ரங்கநாதனிடம் பேசியபோது, “"இந்த மாநாடு ஆன்மீக மாநாடு அல்ல, இது முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. இதில் ஆன்மீகம், தமிழ் மரபு, தமிழனுடைய கலாச்சாரம் அனைத்தையும் மீறியுள்ளார்கள். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இந்த மாநாடு நடந்துள்ளது''’என்றார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனோ, "முருக பக்தர் மாநாட்டில் அரசியல் சார்ந்தோ மற்ற மதங்களைப் பற்றியோ பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த மாநாடோ அனைத்தையும் மீறி நீதிமன்ற அவ மதிப்பு செய்துள்ளது. மாநாட்டில் திருப்பரங் குன்ற மலைத் தூணில் தீபம் ஏற்றப்படும் என்றொரு தீர்மானம். அந்த தூண் சிக்கந்தர் தர்காவின் அருகில் உள்ளது. திராவிட மாடல் அரசு இப்போதாவது சுதாரித்துக்கொள்ள வேண்டும். ஆடுமலை, பவன்கல்யாண், நயினார் நாகேந்திரன், மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வழக்கு தொடர விருக்கிறோம்'' என்றார்.

________________

பிரிவினை அரசியல்!

திருச்செந்தூர் சூர சம்ஹாரத்திற்கு பத்து லட்சம் பேர் கூடுவார் கள். திருவண்ணாமலை தீபத்திற்கு இருபது லட்சம் பேர் கூடுவார்கள். திருச்செந்தூரில் இருந்து திருத்தணி வரை உள்ள முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டுவந்திருக்கிறோம். அறுபடை வீடுகளுக்கும் நீங்கள் செலவு செய்து அலைவதை விட அறுபடை வீடும் ஒரே இடத்தில் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நூறு பேரை காசுக்கு வாங்கி மிகப்பெரிய அளவில் ஒரு சமூக வலைத்தள பிரச்சாரத்தை இந்து முன்னணியும், பா.ஜ.க.வும் கட்டவிழ்த்து விட்டதுதான் முருகன் மாநாட்டின் ஹைலைட். சமூக வலைத்தளங்கள் மூலம் செய்த எலக்ட்ரானிக் பிரச்சாரம் மற்றும் அறுபடை வீடுகளை செட் போட்டு மாநாட்டில் நிறுத்தியது அவர்களுக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.

எண்பதாயிரம் இருக்கைகள் போடப்பட்ட அந்த மாநாட்டில் திருச்செந்தூரிலும் திருவண்ணா மலையிலும் கூடிய பக்தர்கள் போல நாப்பதாயிரம் பெண்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். காலையிலேயே அழைத்து வரப்பட்ட அவர்கள் தரிசனம் முடிந்ததும் புறப்படத் தயாரானார்கள். மாலையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் இருக்க வேண்டும் என இந்து முன்னணியினர் பெண் களுக்கு கட்டளை இட்டனர். "சாமி பாக்க வந்தோம், சாமிய பாத்துட்டோம், நாங்க கிளம்பு றோம்''’என பல பெண்கள் இந்து முன்னணியினரிடம் சண்டை போட்டார்கள். அவர்களை கெஞ்சிக் கூத்தாடி அமரவைத்த இந்து முன்னணியினரை மீறி பெண்களில் ஒரு பெரும் பிரிவினர் கிளம்பிப் போய்விட்டார்கள். பெண்களில் பலருக்கும் உணவு விநியோகிக்கப்படவில்லை. பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், இந்து தர்மத்தின்படி எப்படி நகை அணிய வேண்டும் என இந்து முன்னணியினர் வைத்த பேனர்கள் பெண்களை முகம் சுழிக்க வைத்தது. கடுப்பில் இருந்த பெண்களும் ஆண்களும் மாலை மாநாட்டின் தொடக்கத்தி லேயே கலைந்து போக ஆரம்பித்தார்கள்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியது மக்களுக்குப் புரியவில்லை. இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கொங்கு பகுதியை சேர்ந்தவர். ஆடுமலைக்கு முக்கியத் துவம் கொடுத்தார். அத்துடன் அவர் மேடைக்கு வந்ததும் பா.ஜ.க. தொண்டர்கள் மதுரை மாவட்டத் தலைவர் சுரேந்தர் தலைமையில் வரவேற்று ஆரவாரம் செய்தனர். இந்த செட்டப்பை பார்த்து எரிச்ச லடைந்த நயினார் நாகேந்திரனை மேடையில் பேசவே காடேஸ்வரா சுப்ரமணியம் அனுமதிக்கவில்லை. சண்டை போட்ட பிறகுதான் நயினாரே பேசினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்து அமைப்புக்களின் பலத்தைக் காட்டவே இந்த மாநாடு நடந்தது. இதில் கூடும் கூட்டம் பா.ஜ.க.விற்கு அதிக சீட்டுக்களை பெற்றுத்தரும் என தமிழகம் முழுவதும் காசு கொடுத்து ஆள் திரட்டினார்கள். அப்படித் திரட்டியும் ஒரு லட்சத்தைத் தாண்ட அவர்களால் முடிய வில்லை. பதினைந்து நாட்கள் உழைப்பு, நீதிமன்றத்தில் போராட்டம் முருகன் மாநாட்டில் அரசியலே இல்லை என்ற அறிவிப்பு, முருகன் கோவில் வழிபாடு. சமூக வலைத்தளப் பிரச்சாரம் என தங்களுக்குத் தெரிந்த அத்தனை வித்தை களையும் செய்தனர். மொத்தத்தில், மதரீதியாக மக்களிடம் பிரி வினையை ஏற்படுத்த நடத்தப்பட்ட இந்த மாநாடு மக்களின் அதிருப்தியால் தோல்வியில் முடிந்திருக்கிறது.

-தாமோதரன் பிரகாஷ்