நெல்லை அருகே கல் குவாரியின் ராட்சதப் பாறைகள் 300 அடி உயரத்திலிருந்து பெயர்ந்து விழுந்ததால் இடிபாடுகளில் 6 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் திகிலைக் கிளப்பியுள்ளது. இதில் இருவர் மீட்கப்பட, இருவர் உயிரிழந்த நிலையில், இருவரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் முன்னீர் பள்ளம் காவல் லிமிட்டில் வருகிற பொன்னார்குடி கிராமத்தின் பின்பக்க முள்ளது அடைமிதிப்பான்குளம். இங்குள்ள குன்றின் கல் குவாரியை எடுத்திருப்பவர் சங்கரநாராயணன். கல் குவாரியின் பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து அதனை கிரஸர் மூலம் பல தடிமன்களில் ஜல்லிக் கற்கள் தயார் செய்வதுடன் எம் சாண்ட் தயாரிக்கவும் அனுப்பப்படுவ தால் அந்த குவாரியில் இரவு பகலாகத் தொழிலாளர்கள் பணியில் இருந்திருக்கிறார்கள்.
கடந்த 14-ஆம் தேதி இரவில் வழக்கம் போல் பாறை களைப் பிளப்பதற்காக கல் குவாரியின் அடிப்புறத்தில் பல இடங்களில் துளை யிட்டு கனமான அளவு வெடிவைத்துத் தகர்த் திருக்கிறார்கள். வெடி வைத்த பின்பு நள்ளிரவு 12 மணியளவில், சிதறிய பாறைக் கற்களை அள்ளி லாரிகளில் லோடு செய்கிற பணியில் மூன்று லாரி களும், மூன்று பெரிய ஹிட்டாச்சிகளும் ஈடு பட்டிருக்கின்றன. அந்நேரத்தில், 300 அடி உயரத்திலிருந்து பெரிய பாறை திடீரென்று பிளவுபட்டு சரிய, அதன் விசையில், கீழே பணியிலிருந்த ஹிட் டாச்சிகள் மற்றும் லாரிகள் தூக்கியடிக் கப்பட்டு, அவற்றின்மீது பெரும் பெரும் பாறைத்துண்டுகள் சரமாரியாக விழுந்து மூடின. கணநேரத்தில் நடந்த இந்த விபத்தில், மூன்று ஹிட்டாச்சிகளின் ஆபரேட்டர்கள், மூன்று லாரிகளின் டிரைவர்கள், முருகன், விஜய், செல்வம், மேலுமொரு முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 6 பேர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து, மாவட்ட எஸ்.பி.யான சரவணன், முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.
இரவில் மழை பெய்துகொண்டிருந்ததால் 300 அடி பள்ளத்துக்குள் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மிகவும் ஆழமாகத் தோண்டப்பட்டிருந்த அப்பகுதிக்குள் தொடர்ச்சியாகப் பாறைத் துண்டுகள் சரிந்து விழுந்தபடியிருந்ததால் தற்காலிகமாக மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டன. மறுநாள் காலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த, மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு, ஹெலிகாப் டரைப் பயன்படுத்தலாமென்ற யோசனையுடன், ராமேஸ்வரம் ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் படையினரை வரவழைத்து, பாறைக்குள் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தார். ஆனால் அது சாத்தியப்படாததால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர், தீயணைப்புப் படையினர் கல் குவாரி பள்ளத்துக்குள் ரோப் மூலம் இறங்கி, பாறை இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரை மீட்டு, மருத்துவச் சிகிச்சைக்காக திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அரக்கோணத்திலிருந்து ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் தொடர்முயற்சியால், பொக்லைன் இயந்திரத்தை வெட்டி, அதில் சிக்கியிருந்த ஓட்டுநரான செல்வத்தை மாலை 5.30 மணியளவில் மீட்டனர். மீட்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அதேபோல மற்றொரு முருகனின் உடலும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பாறை இடிபாடுகளுக்குள் ஆழத்தில் சிக்கியுள்ள ராஜேந்திரன், செல்வகுமாரை மீட்கும் பணி தொடர்வதாக திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
விதிமீறலாய் கல் குவாரி
கல் குவாரிக்கான விதிமுறைப்படி, ஒவ்வொரு 15 மீட்டர் ஆழத்திற்கும் பாதை போன்ற ரேம்ப் அமைக்கவேண்டும். அப்படி அமைக்கும்பட்சத்தில் திடீரென்று விழுகின்ற பாறை கள் அதன் மேல் விழுந்துவிடும். தொழிலாளர்களை விபத்தி லிருந்து பாதுகாக்கும். ஆனால் அப்படி அமைக்காமலேயே 300 அடிக்கும் கீழே போயிருக்கிறார்கள். குவாரிகளில் வாரத்திற்கு இத்தனை யூனிட் கற்கள்தான் தோண்டி எடுக்கப்படவேண்டும் என்று பெர்மிட் கொடுக்கிற மைன்ஸ் அதிகாரிகள், அது குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் இவ்விபத்து தடுக்கப்பட்டிருக்கலாம். அத்துடன், கல்குவாரி அமைந்துள்ள பகுதியின் துணை வட்டாட்சியர் முறையாக ஆய்வுசெய்திருந்தாலும்கூட இந்த கோர விபத்து தடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
விபரீதத்தை ஏற்படுத்திய வெடிமருந்து தொழில்நுட்பம்!
விதிப்படி குவாரிகள் பகலில் மட்டுமே இயங்கவேண்டும். ஆனால் இந்தக் குவாரியில் பகலில் 45 பேர்கள், விதியை மீறி இரவில் 15 தொழிலாளர்கள் என்று ரெகுலராகப் பணியிலிருப் பார்கள். கல் குவாரியின் பாறைகளைப் பிளக்க முன்பெல்லாம் சிங்கிள் டிரில்லிங்மெஷின் மூலம் பாறைகளில் 5 இடங்களில் துளை போட்டு டெட்டனேட்டர் அடைக்கப்பட்டு வெடிக்கச் செய்வார்கள். தற்போதைய தொழில் முன்னேற்றம் காரணமாகவும், வியாபார நோக்கிலும் ஒரே டயனமைட்டில் பல லோடு கற்கள் கிடைக்கும் படியாக வெடிவைத்துப் பிளக்கிறார்கள்.
அதற்காக கம்ப்ரஷர் டிரில்லிங்கைப் பயன்படுத்தி 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழமாகத் துளை போட்டு டெட்டனேட்டர்களை அடைத்து, இணைத்து, பின்பு அனைத்தையும் ஒரே சமயத்தில் வெடிக்கச்செய்வார்கள். அப்படிப் பிளக்கும்போது நிலநடுக்கம்போல அதிர்வு ஏற்பட்டு கற்களின் குவியல் பெயர்ந்துவிழும். இந்த முறையில் குவாரியில் வெடிக்கும் பயங்கர வெடியின் தாக்கம் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கும் மேல் அதிர்வுகளைக் கிளப்பும் சக்திகொண்டவை.
ஆய்வில் மெத்தனம்!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நெல்லைக்கு மாறுதலாகி வந்த உயரதிகாரி, இந்தக் கல்குவாரிக்கு ஆய்வுக்குப் போயிருக்கிறார். "விதிப்படி 150 அடிக்கு கீழே தோண்டக்கூடாது. 300 அடிக்கும் மேலே தோண்டப்பட்டிருக்கு' என்று கேள்வி எழுப்பியவரை சரிக்கட்ட வேண்டிய வகையில் சரிக்கட்டியிருக்கிறார்களாம். திரும்பிய அந்த அதிகாரி, தன் உயரதிகாரி கேட்டும் ஆய்வுபற்றிய அறிக்கை யினை சமர்ப்பிக்கவில்லையாம்.
மேலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் குவாரிகள் அமைந் திருக்கும் ஏரியாவின் வருவாய்த் துறை, கனிம வளத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்ற விதியிருக்கிறது.
இதுகுறித்து நாம் மாவட்டக் கலெக்டரான விஷ்ணுவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “"மைன்ஸ் டிபார்ட்மெண்ட்டின் அதிகாரிகள், அதன் டைரக்டர் இருக்கின்றார்கள். அவர்களும் ஆய்வுசெய்வார்கள். அதுகுறித்து ரிவ்யூ மீட்டிங்கும் நடத்தப்படுகிறது''’என்றார். முறையாக விசாரணை நடந்தால் பல அதிகாரிகளுக்கு இடைஞ்சல்கள் வரலாம்.
சமயோசிதமான மீட்புப் பணியின் காரணமாக முருகன், விஜய், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அடுத்த 17 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட செல்வம் படுகாயம் காரணமாக சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிற வழியில் மரணமடைந்திருக்கிறார்.
விபத்து நடந்த நெல்லை குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப் பட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சையிலிருக்கும் இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக 1 லட்சம் வீதம் நிவாரணம் அறிவித்திருக்கிறார். மீட்புப் பணிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்து ரூ.1 லட்சம் நிதியை வழங்கி ஆறுதல் கூறினர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி.யும் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றவர்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். விபத்தில் இறந்த இருவரின் குடும்பத்துக் கும் தமிழக அரசின் சார்பில் தலா 10 லட்ச ரூபாயும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 5 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டன.
இந்த கோர விபத்துக்குப் பிறகாவது, முறை கேடாகச் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் முறைப் படுத்தப்படுமா என்பதே நம்முன் நிற்கும் கேள்வி.