தமிழகத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடியேற்றங்கள்தான் அதிகரிக்கிறது எனப் பார்த்தால், அவர்கள் துணிந்து குற்றச்செயலில் இறங்குவதும் அதிகரித்து வருகிறது. சீர்காழியில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் வீடுபுகுந்து இரண்டு நபரை கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தையே படபடக்க வைத்திருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசிப்பவர் தன்ராஜ் சவுத்ரி. ஐம்பது வயதான இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஆஷா வயது 45. இவர்களின் மகன் அகில், மருமகள் நிகில் ஆகிய நான்குபேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். தன்ராஜ் சவுத்ரி தருமங்குளத்தில் நகைக்கடை வைத்துக்கொண்டு மொத்த நகை வியாபாரமும் செய்துவந்துள்ளார். இவரோடு வியாபாரரீதியாக வெளி மாநிலத்தவர்களே அதிகம் நெருக்கத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி காலை 6:30 மணிவாக்கில் மூன்றுபேர் தன்ராஜின் கதவைத் தட்டி, ஹிந்தியில் அழைத்துள்ளனர். நகை தொடர்பாக யாரோ வந்திருப்பதாக நினைத்த தன்ராஜின் மனைவி ஆஷா கதவைத் திறந்துள்ளார், மறைந்திருந்த வர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஆஷாவின் கழுத்தை அறுத்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்து தன்ராஜின் மகன் அகிலையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
தன்ராஜையும் மருமகள் நிகிலையும் கத்தியால் குத்தி நிலைகுலையச் செய்த கொள்ளையர்கள், எந்தவித அச்சமும் இல்லாமல் வீட்டில் நுழைந்து படுக்கையறை, பூஜை அறை, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த பதினாறு கிலோ தங்க நகைகளை சுருட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்த தோடு, ஹார்டு டிஸ்க் கையும் எடுத்துக் கொண்டு வீட்டில் நிறுத்தி வைத்தி ருந்த தன்ராஜ் காரில் திருடிய நகைகளை அள் ளிப் போட்டுக் கொண்டு நான்கு பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
தன்ராஜும், மருமகளும் உயி ருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில் கொலை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மூவரையும் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து தனிப்பிரிவு காவல்துறையினரிடமே விசாரித்தோம், ""அடகுக்கடை வியாபாரம் மற்றும் மொத்த நகை வியாபாரம் செய்துவந்திருக்கிறார் தன்ராஜ். திருட வந்த மூன்று கொள்ளையர்களும் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதோடு தன்ராஜ் சவுத்ரி குடும்பத்தை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். தன்ராஜ் எப்போது நகை வாங்குகிறார், விற்கிறார், வெளியே செல்கிறார், காலையில் எப்பொழுது எழுந்து வெளியில் வருகின்றனர் என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்திருக்கின்றனர்.
முதலில் ஆஷாவையும், அகிலையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, மற்ற இருவரிடமும் கத்தி யைக் காட்டி "நகை, பணம் எங்கு இருக்கு சாவி எங்க இருக்கு' என கேட்டிருக்கின்றனர், மறுத்ததால் வயிற்றில் குத்திவிட்டு, அங்கிருந்த நகை, பணம், சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்க்கையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு, வீட்டில் நின்ற தன்ராஜின் காரி லேயே பைபாஸ் சாலை வழியாக தப்பியுள்ளனர். மேமாத்தூர் வரை சென்றவர்கள், இனி அந்த காரில் சென்றால் செக்போஸ்ட்டில் சிக்கிவிடுவோம் என காரை பைபாஸில் விட்டுவிட்டு வயல்காட்டு வழியாகச் சென்றுள்ளனர்.
எருக்கூர் பகுதிக்குச் சென்றதும், "ஹிந்திக்காரர்கள் எதுக்கு வயல்வழியா வர்றானுங்க' என அங்கிருந்தவர்கள் அவர்களிடம் கேட்க... கொள்ளையர்களோ கையில் வைத் திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பயந்து போன பொதுமக்கள், போலீசுக்கு அளித்த தகவலையடுத்து, காவல்துறையினர் குற்றவாளிகளை வளைத்துப் பிடித்ததோடு தப்ப முயன்ற ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மற்ற இருவரையும் வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத் தில் விசாரித்துவருகிறோம்'' என்கிறார்.
காவலர்களில் சிலரோ, ""எருக்கூர் பகுதி பொதுமக்களே மூன்று கொள்ளையர்களையும் வளைத்துப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இரண்டு கொலை கொள்ளையால் முகம் சிவந்த மயிலாடுதுறை எஸ்.பி. வெளி மாநில கொள்ளையர்களுக்கு அச்சத்தை உண்டாக்க ஒருவனை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள உத்தரவிட்டார்'' என குட்டை உடைக்கின்றனர்.
வழக்கறிஞரும், சமூகஆர்வலருமான சங்கமித்திரன், ""தமிழகத்திலேயே மயிலாடுதுறை, சீர்காழியில்தான் கந்துவட்டிக்காரர்களின் கூடாரமே இருக்கிறது. வட மாநிலத்தவர்களுக்காக சங்கம், கோயில், தெருப்பெயரே உண்டாக்கியுள்ளனர். அதோடு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிக இடங்களையும் வீடுகளையும் கடைகளையும் வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு வேலைக்காக வெளி மாநில இளைஞர்களையே கொண்டு வந்து வைத்துள்ளனர். ஒருகட்டத்தில் தமிழர்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் வேலையில்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்த சீர்காழி வர்த்தக சங்கத்தினர் "இனிவரும் காலங்களில் வெளி மாநிலத் தவர்களுக்கு இடமோ கடையோ கொடுக்கக் கூடாது, வெளி மாநிலத்தவர் களால் குற்றச் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது' என ஆறுமாதத்திற்கு முன்பு நோட்டீஸ் அடித்து வினியோகம் செய்து, போராட்டம் நடத்தினர்.
அவர்கள் சொன்னது போலவே வெளி மாநிலத்தவர்கள் இன்று பட்டப் பகலில் கொலைசெய்து கொள்ளையடித் துள்ளனர். சிக்கியிருக்கும் 3 பேரைத் தவிர இன்னும் எத்தனைபேர் குற்ற எண் ணங்களுடன் திரிகின்றனர் என்பதுதான் பிரச்சனை. காவல்துறை எல்லா வகையிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார்.
சட்டத்தை தனி மனிதரோ காக்கிகளோ கையில் எடுப்பது கவலையளிக்கும் நிலையில்... புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் போலீஸ் நடத்திய என்கவுண்ட்டர், வடமாநில கொள்ளை யர்களை மட்டுமின்றி உள்ளூர் தாதாக்களையும் மிரள வைத்துள்ளது.