அந்த நீலநிற டி-ஷர்ட்டில் இருந்த அம்பேத்கர் படமும், சூடுகொண்டப்பள்ளி என்ற எழுத்துகளும்தான் கொடூர சித்திரவதைகளுக்குப்பின் கொன்று-எரித்து அருவியில் வீசப்பட்டிருந்த சடலங்களை அடையாளம் காட்டியது. கண்டெடுத்த கர்நாடக போலீசார் அதிர்ந்து போயினர். கொல்லப்பட்டிருந்த இளைஞன் நந்தீஷும் இளம்பெண் சுவாதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தர்மபுரி இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர் வரிசையில் தமிழ்நாட்டில் தலையெடுக்கும் சாதிவெறிக்குப் பலியான மேலும் இரண்டு உயிர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சூடுகொண்டப்பள்ளி வெங்கடேஷபுரம் எனும் கிராமத்தில் மொத்தம் 59 குடும்பங்கள். 45 வீடுகள் வன்னியர் சமூகத்தினருடையது. 14 வீடுகள் பட்டியல்(எஸ்.சி.) சமூகத்தினருடையது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நாராயணப்பாவின் 25 வயது மகன் நந்தீஷ். பள்ளிப் படிப்புக்குப் பின், ஓசூரில் சிவா ஹார்டுவேர்சில் 8 வருடமாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியின் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த சீனிவாசனின் 20 வயது மகள் சுவாதி, கிருஷ்ணகிரியில் பி.காம் படித்து வந்தார். இருவரின் வீடும் ஒரே தெருவில் வெகு அருகில் இருந்தது. பேருந்தில் சுவாதி தனது கல்லூரிக்கும் நந்தீஷ் வேலைக்கும் போகவர, 4 ஆண்டுகளாக காதலை வளர்த்திருந்தனர்.
விஷயமறிந்த சுவாதியின் அப்பா, நந்தீஷின் வீட்டிற்கே சென்று கண்டித்திருக்கிறார். பிரச்சினை வேண்டாம் என நந்தீஷ் ஒதுங்கிச்செல்ல, அவர் வேலை செய்யும் கடைக்கே சென்று சுவாதி பேசியுள்ளார். மீண்டும் காதல் துளிர்க்க, இருவரும் பலமுறை யோசித்து, சுவாதியின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள். நந்தீஷ் அந்த கிராமத்தை விட்டே வெளியில் வந்து தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். அதனால், சுவாதி வீட்டிலும் பெரியளவில் சந்தேகம் வரவில்லை.
கல்லூரிப் படிப்பு முடிந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ல் நந்தீஷ்-சுவாதி இருவரும் சூளகிரி திம்மராயசுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். சூளகிரி பதிவு அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்தனர். கடந்த மூன்று மாதங்களாக ஓசூரில் தான் பணிபுரியும் சிவா ஹார்டுவேர் பக்கத்திலே லட்சுமி விலாஸ் பேங்க் கட்டடத்தின் மொட்டை மாடியில் உள்ள சின்ன ரூமில் நந்தீஷ் குடியிருந்து வந்தார். சுவாதியும் அவருடன் குடித்தனம் நடத்தினார். மகளைக் காணவில்லை என சுவாதி குடும்பத்தார் தேடிக் கொண்டிருந்தனர். சுவாதியின் மாமா ரொம்பவும் தீவிரமாக நந்தீஷைத் தேடினார். திருமணம் நடந்தது சூளகிரி என்பதால் அங்கு தங்கியிருப்பதுபோல நந்தீஷ் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருந்தார். இரவில் மட்டும் ஓசூர் மொட்டைமாடி வீட்டுக்கு செல்வார். நந்தீஷ் போன் செய்து தகவல் தெரிவித்த பிறகே, கதவைத் திறப்பார் சுவாதி. அந்தளவு கவனமாக இருந்தனர்.
அண்மையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். அவரைப் பார்க்கவேண்டும் என சுவாதி ஆசைப்பட்டார். சுவாதியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் துணி எடுப்பதற்காகவும் அந்த இரவில் வெளியே அழைத்து வந்தார் நந்தீஷ். துணைக்கு தம்பி சங்கரை செல்போனில் அழைக்க, அவர் வேறு வேலை இருந்ததால் வரவில்லை. கமல்ஹாசனைப் பார்த்துவிட்டு, ஏ.ஆர்.ஆர்.எஸ் துணிக்கடைக்குப் போகத் திட்டமிட்டிருந்தபோது, வலைவீசித் தேடிக்கொண்டிருந்த சுவாதியின் மாமா இருவரையும் பார்த்துவிட்டார். நயமாகப் பேசி, வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றார்.
வாகனம் பாதைமாறிச் செல்வதையும் உள்ளே இருப்பவர்கள் எக்குத்தப்பாகப் பேசுவதையும் உணர்ந்த நந்தீஷ், தான் வேலை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை ஓனர் சஞ்சய் பட்டேலுக்கு "அண்ணா கிட்னாப் அண்ணா... கனக்பூரா' என்று சுருக்கமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்துப் பதறிய சஞ்சய் பட்டேல், தன்னுடைய கடையில் வேலை செய்வோரின் வாட்சப் குரூப்புக்கு ஃபார்வேட் செய்துள்ளார்.
இந்த நிலையில் 11-11-18 நந்தீஷை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்கவந்த அதேநாளில் சுவாதி குடும்பத்தாரும் புகார் கொடுக்க வந்துள்ளனர். நந்தீஷ் குடும்பத்தினரை ஓசூர் காவல்நிலையத்தில் கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டியுள்ளனர். பையனும் பெண்ணும் எங்கே என்று உறவுகளும் ஊராரும் தேடிக்கொண்டிருந்த நிலையில்தான், நந்தீஷும், சுவாதியும் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்ரா கிராம நீர்வீழ்ச்சியில் பிணமாக மிதப்பதை அங்குள்ளோர் பார்த்துவிட்டு தகவல் கொடுக்க, இரண்டு உடல்களையும் கர்நாடக போலீஸ் மீட்டது.
கை-கால்களைக் கட்டி, கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்து, முகத்தினை தீயில் கருக்கி, நீர்வீழ்ச்சியில் வீசியுள்ளனர். கொல்லப்பட்டபோது சுவாதி கருவுற்றிருந்தார் என்கிறது முதல்கட்டத் தகவல். நந்தீஷ் அணிந்திருந்த அம்பேத்கர் படம் போட்ட நீலநிற டி-ஷர்ட்டும் அதில் இருந்த எழுத்துகளும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காட்ட, தொடர் விசாரணையில், இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் என அறிந்தது கர்நாடக காவல்துறை.
உடனடியாக அதனைக் கொலை வழக்காக பதிவுசெய்து, போஸ்ட்மார்ட்டம் செய்து, இருவர் குடும்பத்திடமும் கையொப்பம் போடச்சொல்லி அங்கேயே அவசரமாக எரித்துவிட்டனர். தமிழ்நாட்டிற்கு உடலை எடுத்துவந்தால் அது சாதிப் பதற்றத்தை உருவாக்கி, சட்டம்-ஒழுங்கு சிக்கலை உண்டாக்கும் என்ற தமிழக ஆட்சியாளர்களின் திட்டமிட்ட நடவடிக்கையே இது என்கிறார்கள். "கொலைக்கு காரணம்' என சுவாதியின் அப்பா, பெரியப்பா, மாமா ஆகியோர் தானாக முன்வந்து கைதானதாக கர்நாடக போலீஸ் சொல்கிறது.
பெண் குடும்பத்தினரின் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட அரசியல் பிரமுகர் மூலம், அவரது கட்சியின் மாநிலத் தலைமைக்குத் தகவல் தரப்பட்டு, அதன்பின் முதல்வர் வரை இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளது. நந்தீஷ்-சுவாதி கொலை வழக்கு தமிழ்நாட்டிற்குள் வராதபடி கர்நாடகத்திலேயே முடிக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட் கிருஷ்ணகிரி மாவட்ட அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதற வைக்கும் இந்த சாதி ஆணவ இரட்டைப் படுகொலை குறித்து ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோரிடம் கேட்டபோது, "வழக்கு இன்னும் எங்களிடம் வரவில்லை. கர்நாடக காவல்துறையே விசாரிக்கிறது' என்றனர். இதில், டி.எஸ்.பி. மீனாட்சி, "கொலையாளிகளை நாங்கள்தான் கைது செய்தோம்' என்றும், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், "அவர்களாகவே சரண்டராகி கைதானார்கள்' என்றும் ஏறுக்குமாறாகத் தெரிவித்தனர்.
நம்மிடம் பேசிய நந்தீஷ் அம்மா திம்மக்காவும் அப்பா நாராயணப்பாவும், ""எங்க மகனை அடித்துக் கொன்றுவிட்டனர். இப்படி பறிகொடுக்கவா வளர்த்தோம்? எங்களை கர்நாடக போலீஸ் கூட்டிட்டுப் போனாங்க. "உங்க பையன் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யணும் கையெழுத்து போடுங்க'ன்னு கேட்டாங்க, போட்டேன். அவங்களே எரிச்சிட்டாங்கப்பா. போச்சி... எல்லாம்போச்சே...'' என்று பேசமுடியாமல் மனம்நொந்து அழுதனர்.
கர்நாடக போலீசார் தற்போது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் ஃ.ஆ. 05 ஆ.ஆ. 4929 என்ற வாகனமும் மாண்டியாவில் பிடிபட்டுள்ளது. இந்துத்வா அமைப்பின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள அந்த வாகனத்தை ஓட்டியவர் பா.ம.க.வைச் சேர்ந்த சாமிநாதன் என்கிறது காவல்துறை. விசாரணையில் தமிழகத்தின் ஒத்துழைப்பு அதிக அளவில் தேவைப்படும். எனினும், இதனைக் கிளறினால் தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் வரும் என்பதால் ஆதாரங்களை மறைப்பதில் இங்குள்ள அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது.
சாதி வெறி இன்னும் எத்தனை உயிர்களைத் தின்று பசி அடங்குமோ?
-அ.அருண்பாண்டியன்
_________________
ஒருங்கிணையும் அமைப்புகள்!
சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ்-சுவாதி தம்பதிக்கு நியாயம் கேட்டு ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் உடுமலை கௌசல்யா உள்ளிட்ட பலர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதிய ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 8 அமைப்புகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
போராட்டம் குறித்துப் பேசிய பா.ரஞ்சித், ""தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாகத்தான் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் காட்டுவதாக உள்ளது.“காவிரி, ஜல்லிக்கட்டு என்றால் தமிழர்கள் ஒன்றிணைகிறார்கள். பட்டியல்சமூக மக்கள் தள்ளி நிற்பதில்லை. ஆனால், சாதி ரீதியாக பட்டியலின மக்கள் கொல்லப்படும்போது மற்றவர்கள் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது'' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ""திட்டமிட்டே செய்யப்பட்ட கொலை. இதில் அ.தி.மு.க. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தொடர்பு இருக்கு. கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட இன்னும் மூன்றுபேர் இருக்கிறார்கள். அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதனை சாதி ஆணவப் படுகொலை என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும், இதைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றிட வேண்டும். நந்தீஷ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், அரசு வேலை வழங்கிட வேண்டும்'' என்றார்.
சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ""இந்தக் கொலைகளின் பின்னால் ஒரு சாதி வெறி அணி திரட்டல் இருக்கிறது. சாதி சம்பந்தப்பட்ட அத்தனைபேரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். தூக்குத்தண்டனை வழங்கினால்கூட தப்பில்லை என்று நினைக்கிறேன்'' என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், ""இந்தப் படுகொலைகளின் பின்னணியில் ஒரு அஜெண்டா உள்ளது. இதனைத் திட்டமிட்டபடி செய்ய வைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.'' என்று குற்றம்சாட்டினார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருக்கும் எல்.முருகன், ""இது வரையிலான பாலியல் கொடூரம், ஆணவக் கொலை தொடர்பான எத்தனை வழக்கில் நீதி கிடைத்துள்ளது? ஒன்றுமேயில்லை'' என்றார் காட்டமாக.
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக பட்டியலின அமைப்பினரும் சமூக நீதியை நிலைநாட்ட நினைக்கும் முற்போக்கு சக்திகளும் ஒன்றாக அணிதிரள்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் என்பதே இவர்களின் முதன்மை கோரிக்கை.