Skip to main content

மாநகராட்சி மைதானங்களில் ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பு ஆட்டம்!

ரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விளையாட்டுத் திடல்களை மீட்க முடியாமல் திணறுகிறது சென்னை மாநகராட்சி. சொத்து வரி வசூலித்தல், கட்டிடங்களுக்கு அனுமதி உள்ளிட்ட சில இனங்களிலிருந்து மட்டுமே மாநகராட்சிக்கு வருவாய் கிடைப்பதால் எடப்பாடி அரசை போலவே நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது மாநகராட்சி.

dஇந்த நிலையில் மாநகராட்சியின் வருவாயைப் பெருக்குவதற்காக சென்னை முழுவதும் தங்களுக்குச் சொந்தமான 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் அரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கை முடிவை 2014-ல் எடுத்தது மாநகராட்சி நிர்வாகம். இதற்காக மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றிய நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் டெண்டர் விடப்பட்டது.

ஆனால், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் அரங்கங்களை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், கிளப் அசோசியேஷன்கள், சமூக விரோதிகள் என பலரும் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் மீட்க முடியாமல் தடுமாறுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், ""சென்னையில் உள்ள 45 மாநகராட்சி விளையாட்டுத் திடல்கள், 18 டென்னிஸ் அரங்கங்கள், 6 ஸ்கேட்டிங் ரிங் அரங்கங்கள், 11 பேட்மிட்டன் அரங்கங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது. இதன் மூலம் வருசத்துக்கு நேரடியாக 1 கோடி ரூபாயும், மறைமுகமாக 5 கோடி ரூபாயும் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். நேரடி வருவாயில் ஒவ்வொரு வருஷமும் 5 சதவீதம் உயர்த்தப்படும்.

தவிர, மாநகராட்சி மற்றும் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி, இலவச உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை டெண்டர் எடுத்த நிறுவனமே வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மின் கட்டணத்தையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். இத்தகைய நிபந்தனைகளுடன் தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

ஆனால், விளையாட்டு அரங்கங்களையும், மைதானங்களையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசியல்வாதிகளும் அசோசியேஷன்களும் பிரச்சனை செய்கிறார்கள். சென்னையின் ஆளும் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ. ஒருவர் விளையாட்டு மைதானத்தை இழுத்துப் பூட்டி சாவியை தனது வீட்டில் வைத்துக்கொண்டு தராமல் தகராறு செய்கிறார். நங்கநல்லூரை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர், பயிற்சியில் சேர்பவர்களுக்கான விண்ணப்பத்தை தனது வீட்டில் வைத்து விற்பனை செய்கிறார். தனது அனுமதியில்லாமல் யாரும் அரங்கத்தில் நுழையக்கூடாது என மிரட்டுகிறார் அந்த முன்னாள் கவுன்சிலர்.

முதல்வர் எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் பிடியில் மந்தைவெளி அரங்கம் சிக்கியிருக்கிறது. இதனை மீட்க அதிகாரிகள் முயற்சிக்கும்போது, முதல்வரின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார். அடையாறு காந்திநகர் கிளப்பும், இந்திராநகர் விளையாட்டுத் திடலும் பெரிய மனிதர்களின் பிடியில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு அரங்கமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இவற்றைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இதனால் மாநகராட்சிக்கு ஒருபைசா கூட வருவாய் இல்லை.
da
காந்தி நகர் கிளப்பில் கார்ப்பரேட் மெம்பர்ஷிப் பெற 10 லட்சம், மாத கட்டணம் 300 நிர்ணயித்துள்ளனர். ஷட்டில் பயிற்சி எடுக்க ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்கு 3000 ரூபாயும் வசூலிக்கின்றனர். இந்திராநகர் கிளப்பில் ஷட்டில் கோச்சுக்கு 3000, டென்னிஸ் கோச்சுக்கு 3000, கிரிக்கெட் கோச்சிங் 1500, டேபிள் டென்னிஸ் 1000 என வசூலிக்கின்றனர். இங்கு வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக 59,000 ரூபாயும், 3 ஆண்டுகளுக்கு 20,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இப்படி சென்னையிலுள்ள 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள், உள் அரங்கங்கள் அனைத்தையும் கணக்கிடும்போது, வருஷத்துக்கு பல கோடி ரூபாய் அரசியல்வாதிகளுக்கும், அசோசியேஷன்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் போய்ச் சேர்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஏழைகளுக்கு இந்த அரங்கங்கள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.

இதனை தடுத்து, குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் விளையாட்டு பயிற்சிகள் கிடைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கவும், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கவும்தான் தனியாரிடம் ஒப்படைத்துள்ளோம். ஆனால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தனியாரிடம் ஒப்படைக்க முடியாமல் தடுமாற வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோரும் பெரிய மனிதர்களாகவும், அரசியல் செல்வாக்குள்ளவர்களாகவும் இருப்பதால் நாங்கள் மிரட்டப்படுகிறோம்''’என்கிறார்கள் அழாத குறையாக.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரதாப்சிங், ""விளையாட்டு மைதானங்கள் தற்போது பெரிய மனிதர்கள் பிடியில் சிக்கியிருப்பது உண்மைதான். அவற்றை மீட்டு மாநகராட்சியே நடத்தலாமே! தனி நபர் லாபம் சம்பாதிக்க மாநகராட்சி மைதானங்களை எப்படி தாரை வார்க்கலாம்?'' என்கிறார்.

தனியாருக்கு விடப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண்மணி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், கட்டணமில்லாமல் இலவச பயிற்சி தரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்கள், உள் அரங்கங்களில் நாம் விசிட் அடித்தபோது, அங்கு இலவச பயிற்சி அளிக்கப்படவில்லை. ஏழைகள் உள்ளே நுழையவே அனுமதி கிடையாது என்பதும் ஜீரணிக்கமுடியாத நிஜமாக உள்ளது.

இதுகுறித்து கருத்தறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சை பலமுறை தொடர்புகொண்டும், அவரது லைன் பிசியாகவே இருந்தது.

விளையாட்டு மைதானங்களை மீட்க தொடர் முயற்சியில் இருக்கிறது மாநகராட்சி.

-இளையர்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்