நீதிமன்றங்கள் எவ்வளவுதான் கண்டிப்புக் காட்டினாலும் தமிழகத்தில் மணல் மாஃபியாக்களின் கொட்டம் கொஞ்சமும் அடங்கியது மாதிரி தெரிய வில்லை, அரசு அதிகாரிகளின் ஆட்டமும் குறையவில்லை. மத்திய அரசின் "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 12 நகரங்களில் பணிகள் நடந்துவருகின்றன. "இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு தாது மணலைப் பயன்படுத்தக்கூடாது' என்பது விதிமுறை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sandmafias2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sandmafias.jpg)
ஆனால் மணல் மாஃபியாக்களின் கைவரிசையை இதில் காட்டுவது மாதிரி காட்டி, தாது மணலை தங்குதடையின்றி கடத்தி, கலெக்ஷனில் தூள்பறத்தி வருகின்றனர். இப்படி நெல்லை "ஸ்மார்ட் சிட்டி' கட்டுமானப் பணிகளுக்காக கல்லிடைக்குறிச்சி மணல் குவாரிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மணல் லோடுகள் கடத்தப்படுவதை 2020, அக்.31-நவ.04 தேதியிட்ட நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந்தோம். இந்த மணல் கடத்தல் விவகாரம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் விசாரணையில் இருப்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
நமது செய்தியின் தாக்கத்தால் போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளின் மட்டத்தில் ஆக்ஷன்கள் வேகமெடுத்தன, கடத்தலின் முக்கியப் புள்ளிகளும் தப்பினார்கள். ஆனாலும் நெல்லை மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறையின் ஆர்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கனிமவளத் துறையின் உதவி இயக்குனர் சஃபீயா தூத்துக்குடிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, அதன்பின் அவர் மெடிக்கல் லீவு போட்டு விட்டுப் போய் எஸ்கேப்பாகிவிட்டார்.
இந்த நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் பிடி மேலும் இறுகியதால், வேறு வழியில்லாமல் அதிகாரிகளும் வேகம் காட்ட வேண்டியதாயிற்று. இதன்படி மணல் மாஃபியாவான வினோத்தைச் சுற்றி வளைத்தது போலீஸ். அவரிடமிருந்து மணல் பெர்மிட்டுகளில் ஒட்டப்படும் 207 ஹாலோகிராம் ஒரிஜினல் முத்திரைகள், சஃபீயாவின் கையெழுத்திட்ட நிரப்பப் படாத பெர்மிட்டுகள், (இவை சஃபீயாவின் கணவரான ஆர்.ஐ. முகமது சமீர் மூலம் வினோத்திற்கு கைமாறியுள்ளன) 67 ஆயிரம் ரொக்கம் (கைப்பற்றிய உண்மையான தொகை கோடிகளில் இருக்கும் என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது) ஆகியவற்றைக் கைப்பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது போலீஸ்.
இதற்கடுத்து முகமது சமீர், ரமேஷ், குபேரசுந்தர் ஆகியோரைத் தேடி வலைவிரித்த போது மூவரும் எஸ்கேப்பாகி விட்டனர். நிலவரம் இப்படிப் போய்க் கொண்டிருந்தபோது தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பயன்படுத்தப்படும் மணல், கட்டுமானத்திற்கு ஏற்றதல்ல என திட்டத்தின் சேர்மனும் நெல்லையின் அப்போதைய கலெக்டருமான ஷில்பா, மாநகராட்சி கமிஷனர் கண்ணன் ஆகியோர் சர்டிபிகேட் கொடுத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sandmafias3.jpg)
இந்த சர்டிபிகேட்தான் மாஃபியாக்களுக்கும் ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது. இதை வைத்தே 8554 லோடு மணலை கடத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்த சர்டிபிகேட்டில் சந்தேகமடைந்த மதுரை உயர்நீதிமன்றம், புவியியல் ஆராய்ச்சிப் பொறியாளரான கலைவாணன் தலைமையிலான குழுவை ஸ்மார்ட் சிட்டி கட்டுமான மணலின் தரத்தை ஆய்வு செய்ய நியமித்தது. அந்தக் குழுவினர் ஆய்வு செய்ததில் 10% களிமண், 85% தரமான மணல், மீதி 5% தாது மணல் எனத் தெரியவந்தது.
இதனால் அதிகாரிகள்தரப்பு அலற ஆரம்பித்தது. ஏனெனில் "தாதுமணலை தனியார்களோ, அரசு அதிகாரிகளோ ஏலம்விடவும் ஏற்றுமதி செய்யவும் அனுமதி கிடையாது' என மத்திய அரசின் விதிமுறை உள்ளது. இந்த விதிமுறைகளை மீறி "ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணிகளில் தாது மணல் எப்படி கலந்தது என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும், பெரிய வில்லங்கத்தை கொண்டு வந்துவிடும்' என அதிகாரிகள் கதிகலங்கினார்கள்.
நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் மெகா மணல் திருட்டு குறித்து, தாதுமணல் கடத்தலுக்கு எதிரான போராளியான குமரேசன் நம்மிடம் பேசும்போது, “""தாசில்தார் தலைமையிலான தாலுகா கமிட்டியும் கலெக்டர் தலைமையிலான மண்டலக் கமிட்டியும் மாதம் இருமுறை கூடி, மணல் கடத்தல் தொடர்பான புகார்கள், வழக்குகள் குறித்து விசாரிக்க வேண்டும்' என்பது விதிமுறை. ஆனால் இங்கே இதுவரை எந்தக் கமிட்டியும் கூடவில்லை, எதையும் கண்டுகொள்ளவில்லை.
இதனால்தான் மத்திய அரசின் கடுமையான சட்டவிதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தாதுமணலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளை யடித்திருக்கிறார்கள். தாதுமணல் கடத்தல் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் என்னையும் ஒரு பிரதிவாதியாகச் சேர்க்க மனு செய்துள்ளேன். கடத்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது''’’ என்றார் மிகவிரிவாக.
வழக்கின் வேகம் கூடுவதையறிந்து பதறிய சஃபீயா, அவரது கணவர் முகமது சமீர் ஆகியோர் கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் அருகில் உள்ள பாறசாலை ரிசார்ட்டுகளில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, தமிழக போலீஸ் படை அங்கே போவதற்குள் இருவரும் எஸ்கேப்பாகியுள்ளனர். அதற்கு முன்பாகவே கேரள போலீசிடம் முகமது சமீர் சிக்கிய தகவல் கிடைத்து, தமிழக போலீஸ் அங்கு போவதற்குள்ளாகவே விடு விக்கப்பட்டுள்ளார் முகமது சமீர். விடுவிக்கப்படுவதற்கு முன்பு மணல் கடத்தலில் உதவியாக இருந்த தமிழக அதிகாரிகளின் பட்டியலையும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாராம் சமீர். மற்ற இரு குற்றவாளிகளான ரமேஷ், குபேரசுந்தர் ஆகியோர் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இதுகுறித்து நெல்லை எஸ்.பி. மணிவண்ணனிடம் நாம் கேட்டபோது... ""அவர்கள் கேரள போலீசிடம் பிடிபடவில்லை, இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் என்னென்ன திருகுஜாலங்களெல்லாம் நடக்கப்போகிறதோ?
- மணிகண்டன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/sandmafias-t.jpg)