ணல் தட்டுப்பாடு அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்துவிட்டது. மக்களின் அவலத்தை தங்களின் லாபமாக்கிக்கொள்ளும் கொள்ளும் மணல் கடத்தல்காரர்கள் மணலைக் கடத்தி கொள்ளையடிக்கிறார்கள். தாராளமாக கமிஷன் கிடைப்பதால் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மணல் கொள்ளைக்கு துணைபோவது வாடிக்கையாகிவிட்டது.

மாட்டிக்கொண்ட லஞ்ச அதிகாரி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சாத்துக்கூடலைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக களிமண்ணைத் தோண்டியபோது, மணல் கிடைத்திருக்கிறது. இதனைக் காசாக்க யோசித்த செல்வத்தின் குறுக்குப்புத்தி, சட்டவிரோதமாக மணல் கடத்தும் முடிவுக்கு தள்ளியது. இதை அறிந்துகொண்ட உள்ளூர் பிரமுகர்கள் சிலர், "மணவாளநல்லூர் குவாரியில் மணல் கிடைக்கவில்லை, சாத்துக்கூடல் குவாரியில் மணல் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்'’என அரசாங்க ஒப்பந்ததாரரைப்போல அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

sand

Advertisment

"சாத்துக்கூடலில் மணல் குவாரியா?' என குழப்பமடைந்த அதிகாரிகள், செல்வத்தின் பின்னணியை விசாரித்து வட்டாட்சியர் ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்தனர். வசூல் மன்னரான ஸ்ரீதரன் தனது டிரைவர் கந்தசாமி மூலம் செல்வத்தைத் தொடர்புகொண்டு, "கடந்த ஒரு வருடமாக மணல் கடத்தியதற்காக ஐம்பது லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எங்களுக்குக் கொடுத்தால், ரெண்டு லட்சத்தோடு முடிந்துவிடும்'’என மிரட்டியுள்ளார். ரூ.60ஆயிரம் தருவதாக வழிக்குவந்த செல்வம் ரூ.20 ஆயிரத்தோடு நிறுத்திக்கொண்டார். இதனால், கடுப்பான ஸ்ரீதரனின் மிரட்டல் படலம் தொடர்ந்தது.

ஒருகட்டத்தில் முழுப்பணத்தையும் தந்துவிடுவதாக ஸ்ரீதரனிடம் கூறிய செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் தவறாமல் தகவலனுப்பினார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பொடி தடவிய பணக்கட்டைக் கொடுத்தனுப்ப, கடந்த 15-ஆம் தேதி முகாம் அலுவலகத்தில் பணம் கைமாறும்போது ஸ்ரீதரன்-கந்தசாமியை சுற்றிவளைத்து கைதுசெய்து சிறைக்கு அனுப்பினர்.

Advertisment

எருமனூர் வி.ஏ.ஓ.வு.க்கு மெமோ கொடுத்த விவகாரத்தில், ஸ்ரீதரனுக்கு எதிராக வி.ஏ.ஓ.க்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள்தான் ஸ்ரீதரனைத் திட்டமிட்டு சிக்கவைத்துள்ளனர் என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தினர் சொல்கின்றனர். அவர்களிடம் ஸ்ரீதரனைப் பற்றி விசாரித்தபோது, ""இந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கடலூர்-விருத்தாசலத்தில் வட்டாட்சியராக பொறுப்பேற்றவர் ஸ்ரீதரன். நெய்வேலி உலைமண், பாலக்கொல்லை பகுதிகளில் கூழாங்கல், ஆலடி-கோட்டேரி பகுதிகளில் கிராவல் என எந்த வண்டியில் கனிமவளம் கொண்டுசென்றாலும் கையும் களவுமாக பிடித்து ஐம்பதாயிரம்வரை கமிஷனைப் பெற்றுக்கொள்வார். கோட்டாட்சியராக சந்தோஷினி சந்திரா பொறுப்பேற்றதும் காட்டிய கெடுபிடியால் ஸ்ரீதரின் வருவாய் குறைந்தது. அதைச் சரிசெய்ய ஆர்.டி.ஓ.வின் உதவியாளராக இருந்து ஓட்டுநராக மாறிய வீரவேலுடன் கூட்டணியமைத்து ரெய்டு நடக்கும் ஸ்பாட்டைத் தெரிந்துகொண்டு உடன்செல்வார். அங்கு சிக்குபவர்களை மிரட்டி மாமூலைக் கறப்பதும், சிக்கும் மணலில் பாதிக்கும் அதிகமாக பொதுப்பணித்துறைக்கு அனுப்பாமல் காசாக்குவதுமாக இருப்பார்.

மாதம் மூவாயிரம் மாமூல் வெட்டும் மணல் லாரிகளின் லிஸ்ட்டை எப்போதும் கையிலேயே வைத்திருக்கும் ஸ்ரீதரன், ரெய்டு நடக்கும் தகவல் கிடைத்தால் உடனடியாக சென்று அந்த லாரிகளை மட்டும் அனுப்பிவிடுவார். அந்த கண்துடைப்புக்கும் தனி கவனிப்பு இருக்கும். அலுவலகத்தைவிட முகாம் அலுவலகத்தில் அதிகநேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டவர் ஸ்ரீதரன். காரணம், அதுதான் பேரம் பேசுவதற்கு சரியான இடமாம். மணல்கடத்தல் தகவல் வந்தால் அலுவலகத்தில் இருப்பதைப்போல் காட்டிக்கொள்வதற்காக அலுவலகக் காரை விட்டுவிட்டு, சொந்தக்காரில்தான் கிளம்புவார். இப்படித்தான் ஒருநாள் மணல் கடத்திவந்த லாரிகளை மடக்கியபோது, அது அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களுடையது என்று தெரியவந்திருக்கிறது. விடாப்பிடியாக மாமூல் கேட்டபோது, கோட்டையிலிருந்தே அழைப்புவந்து அதட்டியதும், ஸ்ரீதரன் தலைதெறிக்க ஓடியிருக்கிறார்''’என்றனர்.

sand

ஸ்ரீதரனை மாட்டிவிட்ட செல்வம், வி.ஏ.ஓ. ராஜலெட்சுமி என்பவரின் உதவியுடன் போலிச்சான்றிதழ் பெற்று முப்பதாண்டுகளாக கறம்பாகக் கிடக்கும் நிலத்தில் நெல் சாகுபடி செய்வதாக மூன்றாண்டுகளாக வங்கிக்கடன் பெற்றிருக்கிறார். அதேபோல், ராஜலெட்சுமி உதவியுடனேயே அந்த நிலத்தில் மணல்கடத்தும் வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் கொடுக்கூரைச் சேர்ந்த கணபதி என்கிற விவசாயி தனது கால்காணி நிலத்தில் மணலெடுத்து விற்றதற்காக, இதே வட்டாட்சியர் அண்ட் கோ ரூ.31 லட்சம் அபராதம் விதித்த கொடுமையும் நடந்திருக்கிறது.

எஸ்.பி. கண்ணில் மண் அள்ளிப்போடும் காக்கிகள்!

கடலூரில் இப்படியென்றால் அதிரடியான அதிகாரி இருந்தும் நாகை மாவட்டத்தில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்டமுடியவில்லை. மாவட்ட எஸ்.பி.யாக விஜயக்குமார் பொறுப்பேற்றது முதல் மணல் கடத்தல், கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். தினமும் நான்கு வாகனங்களுக்குக் குறையாமல் பிடிபட்டாலும் பல்வேறு ரூட்டுகளில் மணல் கடத்தல் நடந்தபடியே இருக்கிறது.

sandகொள்ளிடம் ஆற்றின் கழிமுகப்பகுதியில் தண்ணீர் கிடந்தாலும் படகுகள் மூலம் ஆற்றின் நடுவிலிருக்கும் மணல் திட்டுகளில் இருந்து மணலைக் கடத்தி, கரையோரம் குவித்து லாரிகளில் கடத்துகின்றனர். இதையறிந்த எஸ்.பி. சிறப்பு தனிப்படை காவல் உதவிஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸாரை கண்காணிக்க உத்தரவிட்டார். தகவல்படி ஸ்பாட்டுக்கு சென்ற தனிப்படை, மூன்று படகுகளில் மணல் கடத்திக்கொண்டிருந்தவர்களைச் சுற்றிவளைத்தது. ஆனால், நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்கிற இளைஞரும், மூன்று நாட்டுப்படகுகளும் மட்டுமே சிக்கின.

இதுபற்றி அப்பகுதி மக்கள் பேசுகையில், ""நைட்டு எஞ்சின் வச்ச ஃபைபர் படகுகள்ல மணல்கடத்தல் நடப்பது கொள்ளிடம் ஆனைக்காரன்சத்திரம் போலீசாருக்கு நல்லாவே தெரியும். படகுக்கு இவ்வளவு ரேட்டுனு பேசி அனுமதிக்கிறாங்க. ஸ்டேசனுக்கு மேற்கால இருக்கும் பகுதிகள்ல டிராக்டருக்கு ரூ.10ஆயிரம் வாங்கிட்டு நைட்டு முழுக்க மணல் அள்ள அனுமதிக்கிறாங்க. வந்த புதுசுல ஸ்ட்ரிக்டா இருந்த இன்ஸ். முனிசேகர் இப்போ காசுக்கு மயங்கிட்டாரு''’என்றனர்.

ஆறு, குளம், நிலத்தடி என மணலை திட்டமிட்டு கொள்ளையடித்தவர்களின் பார்வை இப்போது கடற்கரை மணல் பக்கம் திரும்பியிருக்கிறது. அதைக் களவாடி நிலத்தடி மணலுடன் கலப்படம் செய்து நாகை முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை மணல் கொள்ளையடிப்பதாக அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு சென்ற கனிமவளத்துறை அதிகாரி பிரியா, உயிரைப் பணயம் வைத்து காவல்துறையினர் வரும்வரை மறித்ததால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை விசாரணையில், "லோக்கல் காக்கிகள், ரெவென்யு அதிகாரிகளுக்குக் கப்பம் கட்டிவிட்டுத் திருடுகிறோம். கலப்பட மணலைத்தான் விற்றுவருகிறோம்'’என்பதை ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக நாகை காக்கி ஒருவரிடம் கேட்டபோது, ""எடப்பாடி ஆட்சியில்தான் மணல் கடத்தல் தலைவிரித்து ஆடுகிறது. குடிமராமத்து பெயரில் குளங்களிலும், விளைநிலங்களிலும் சூறையாடப்படுகின்றன. மணல்கடத்தல் பற்றிய அனைத்து புள்ளிவிவரங்களும் போலீஸ், ஆர்.டி.ஓ., கனிமவளத்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாகையில் இன்றைய நிலவரப்படி ஐந்தாயிரம் லோடுக்கு மேல் மணலை மலைபோலக் குவித்து வைத்துள்ளனர். இந்த இடங்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும், போலீஸோ, உளவுப்பிரிவு காக்கிகளோ எஸ்.பி.யிடம் சொல்வதில்லை. லாரி, டிராக்டர், டாட்டா ஏஸ், மாட்டுவண்டி, டூவீலர், படகுகள், பள்ளிவாகனங்கள் என பலவிதங்களில் மணலைக் கடத்துகிறார்கள். எஸ்.பி. நேர்மையாக இருந்து என்ன பயன்? கீழ்மட்ட காக்கிகளின் கைகள் கறை படிந்திருக்கிறதே''’என்கிறார் வேதனையுடன்.

நாகை மாவட்ட எஸ்.பி. விஜயக்குமார், ""நான் வந்த நாள்முதல் மணல் திருட்டு மட்டுமின்றி, கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபாட்டில்கள் என அனைத்துவிதமான கடத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறேன். நாகையை குற்றமற்ற மாவட்டமாக மாற்றும் நோக்கில் குற்றப்பின்னணி கொண்டவர்களை குண்டாசில் கைது செய்துவருகிறோம்''’என்றார்.

sand

தினமும் 4 கோடிக்கு மணல் திருட்டு!

கரூர்-குளித்தலை மணல்தட்டையில் அனுமதியின்றி இயங்கிவந்த மணல்குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் மணல்குவாரிகளை தமிழக அரசே நடத்துகிறது. குளித்தலை மணல்தட்டை அருகே மணல்குவாரி அமைக்கும்போது பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், அனுமதியின்றி மணல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இதைக் கண்டித்து வெடித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி, சிறைசென்று திருச்சி மகளிர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பெண் தோழர்கள் ராஜேஸ்வரி, மதுபாலாவிடம் பேசியபோது, ""மணப்பாறை கூட்டுக்குடிநீர்த் திட்டம் 430 மீட்டர் தூரத்தில் இருப்பதால், மணல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி சட்டவிரோதமானது, செல்லுபடியாகாது என மதுரை உயர்நீதிமன்றம் அமைத்த ஆணையர் குழு நேரடியாக பார்வையிட்டு செப். 11, 2017-ல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், குளித்தலை ராஜேந்திரன் மணல் கிடங்கிற்கு அனுமதி கொடுக்கவில்லை எனவும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

எனவே, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அக். 09-ல் கலெக்டரிடம் நேரடியாக புகார் அளித்தோம். அதன்பிறகு, எங்களைச் சந்திப்பதைக்கூட அவர் தவிர்த்துவிட்டார். பலகோடி மதிப்புள்ள சமூகச் சொத்து சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி, அக். 12-ல் மணல்குவாரியை நோக்கிச் சென்றபோது வழிமறித்த காவல்துறையினர், எதுவும் பேசாமல் எங்களை கைது செய்தனர். இந்தக் குவாரியில் முதல்வரின் நேரடி கவனத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் உத்தரவுப்படி தினந்தோறும் 4 கோடி மதிப்புள்ள மணல் திருடப்படுகிறது. இதைத் தடுக்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றனர் ஆவேசத்துடன்.

ஜாமீனில் வெளிவந்தவர்களை வரவேற்ற தோழர் முகிலன் நம்மிடம், ""சமூக சொத்தை பாதுகாக்கக் கோரி போராடிய 14 தோழர்களை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் (143, 341, 353) கைதுசெய்து சிறையில் அடைத்த நடவடிக்கை அறமானதும், நீதியானதும் அல்ல. உடனடியாக அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களின் தவறான நோக்கத்திற்கு அதிகாரிகள் துணைபோவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். தன்னை, பணிசெய்யவிடாமல் தடுத்ததாக பொய்ப் புகார் கொடுத்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் குவாரியும் மூடப்படவேண்டும்''’என வலியுறுத்தினார்.

அதிகாரம் தவறான இடத்தில் குவிந்தால் ஒட்டுமொத்த சமூகமும் கொள்ளைக்கு ஆளாகும். அதில் ஒரு பகுதிதான் இந்த மணல் கொள்ளை.

-ஜெ.டி.ஆர்., செல்வக்குமார், சுந்தரபாண்டியன்