தாய், மகள் இரட்டைப் படுகொலையில், 24 மணி நேரத்தில் கொலையாளிகள் மூவரை கைது செய்து கெத்துக்காட்டியுள்ளது கிருஷ்ணகிரி காவல்துறை. கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூர் அருகேயுள்ள யாசின் நகர் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள், மகள் சுசிதா, மகன் பெரியசாமியுடன் வசித்து வந்துள்ளார். கணவர் சுரேஷ் 2018ஆம் ஆண்டு இறந்து விட்டார். விவசாயம் போக, வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பது இவரது வழக்கம். இந்த நிலையில் தான் கடந்த 26ஆம் தேதி இவரும் இவரது மகளும் படுகொலை செய்யப்பட்டனர்.
"சாயந்திரம் 5 மணிக்கு வீட்டிற்கு போய்ப் பார்க்கும்போது சோபாவில் எல்லம்மாளும், தரையில் அவ மகள் சுசிதாவும் கழுத்தறுக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பதட்டத்தில் கூச்சலிட்டேன். ஊர்க்காரங்க ஓடிவந்து பார்த்தாங்க.. போலீஸும் வந்தது. அப்பத்தான் தெரிஞ்சது இரண்டு பேருக்கும் உசுரு இல்லைன்னு'' என அழுதவாறு புலம்பினார் கொலையுண்ட எல்லம்மாளின் தம்பி மனைவி கிரிஜா.
சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், எஸ்.பி. தங்கதுரை, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் நேரில் சம்பவ இடத்திற்கு சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணைக்காக மோப்ப நாய், கை ரேகை நிபுணர்கள், தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கொலையுண்ட எல்லம்மாள் செல்போனை வைத்து கடந்த சில மாதங்களில், அவரிடம் பேசியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டும், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தியது தாலுகா போலீஸ். விசாரணை மேலும் நகராமல் நிற்க, மாவட்ட எஸ்.பி. தங்கதுரை அறிவுரையின் பேரில் மாவட்ட காவல் நிலையங்களிலுள்ள அனைத்து டைரக்ட் எஸ்.ஐ.க்களும் சம்பவ இடத்திற்கு இரவோடு இரவாக வரவழைக் கப்பட்டனர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இது இப்படியிருக்க, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாத காவல்துறையை கண்டித்து 27ஆம் தேதி மாலையில், உயிரிழந்த எல்லம்மாள், சுசிதா ஆகியோரின் சடலங்களை ஆர்.பூசாரிப்பட்டி கூட்ரோடு சாலையில் வைத்து, உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளையில் எல்லம்மாள் மற்றும் சுசிதா ஆகியோரை கொலை செய்தவர்கள் இவர்களென, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த குரும்பப்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார், சத்தியரசு மற்றும் காவேரிப்பட்டிணம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் ஹரிஷ் ஆகியோரை கைது செய்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, "கொலையுண்ட எல்லம்மாளிடமிருந்து ரூபாய் 10,000 வட்டிக்கு பணம் வாங்கி, அதைக் கட்ட முடியாததால் எல்லம்மாளுக்கும் சத்தியரசுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. மேலும் எல்லம்மாளிடம் அதிகப்படியான நகை மற்றும் பணம் இருப்பது தெரிந்துகொண்டு அதை கொள்ளையடிக்கும் நோக்கத்திலும், மூவரும் திட்டமிட்டு எல்லம்மாளை கொலை செய்துள்ளனர். அப்போது சத்தம்கேட்டு வந்த எல்லம்மாளின் மகள் சுசிதாவையும் கொலை செய்துவிட்டு எல்லம்மாள் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 10 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது''" என்றது.
"இந்த இரட்டைப் படுகொலையில் துவக்கத்தில் திணறல் இருந்தது. எங்கள் அருகிலேயே இருந்து, விசாரணையின் போக்கை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான் குற்றவாளி நவீன்குமார். எல்லம்மாளின் பக்கத்துவீட்டுப் பெண்ணை மணந்தவன், மாமியார் வீட்டிலேயே இருந்ததால் சந்தேகம் வரவில்லை. சி.சி.டி.வி.யில் இவனுடைய நண்பன் சத்தியரசு, வேன் டிரைவர் ஹரீஷ் ஆகியோருடன் எல்லம்மாள் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. ஆனால் திரும்பவே இல்லை. இதுகுறித்து அவனிடம் விசாரித்தபோது பதிலில்லை. அவனது நண்பர்களைத் தூக்கவும் சத்தியரசு தனது ஆர்.சி.புக்கை அடகுவைத்து எல்லம்மாளிடம் 10 வட்டிக்கு 10,000 கடன் வாங்கி, அதை சரியாகத் திருப்பிக்கட்டாததால் கோபமடைந்த எல்லம்மாள், ஜாமீன் போட்ட நவீன்குமாரை திட்டித்தீர்த்ததில், ஹரீஷை துணைக்கு அழைத்து எல்லம்மாளை கொலை செய்ய வீட்டிற்கு வந்துள்ளனர்.
மதிய வேளையில் ஷோபாவிலேயே வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். கொலையை சிறுமி சுசிதா பார்த்த நிலையில் அவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு.. அங்கிருந்த நகை, ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வழியாக வெளியேறியுள்ளனர். பின்னர் காவேரிப்பட்டிணம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துவிட்டு ஆடைகளை மாற்றிக்கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். மறுநாள், உதயம் பண்ட் லிமிடெட் என்ற அடகுக்கடைக்கு சென்று கொள்ளையடித்த 4 சவரன் செயினை மட்டும் அடகுவைத்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளனர். சி.சி.டி.வி. காட்சி தான் கொலைக்குற்றவாளிகளை அடையாளம் காட்டியது'' என்றார் தனிப்படை அதிகாரி ஒருவர். 24 மணி நேரத்திலேயே கொலைக்குற்றவாளிகளை கண்டறிந்த தனிப்படையை பாராட்டியுள்ளார் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை.
-வேகா
படங்கள்:சத்யா