கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றுபவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (46). விழுப்புரம், என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்தவரான இவர், கடலூரில் பணியாற்றிவிட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 1-09-2021-ல் விருத்தாசலம் நகராட்சிப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். இவரை கடந்த 31-12-2021 அன்று ஒப்பந்ததாரர் மதியழகன் என்பவர் அடியாட்களுடன் சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பானது. இங்கு மட்டுமல்ல, ஜெயப்பிரகாஷ் நாராயணன் இதற்கு முன்பு 2018-ல் கடலூரில் பொறி யாளராக பணியாற்றிய போதும் அப்போது அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் கந்தன் என்பவர் செய்த வேலை தரமற்றதெனக் கூறியதால் கந்தனால் தாக்கப்பட்டார். இவர் பணியாற்றுகிற இடத்திலெல்லாம் இதுபோன்ற சர்ச் சைகள் வருவதற்கான காரணம் என்னவென்று அலசினோம்…
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virudhachalam_1.jpg)
ஜெயப்பிரகாஷ் விருத்தாசலம் நகராட்சியில் பணி யில் சேருவதற்கு முன்பாக நடைபெற்ற பல்வேறு பணிகள் குறித்து அளவுப் புத்தகங்களில் (M-Book) ஆய்வு செய்ததில், பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதை கண்டறிந்தார். நகராட்சி கடித எண் (103/2021 இ1. நாள் 2-8-2021), கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமுக்காகச் செலவிடப்பட்ட 6,93,000 ரூபாயில், ஒரு பிளாஸ்டிக் சேரின் ஒருநாள் வாடகை ரூபாய் 500 முதல் 800 வரை அனுமதிக்கப்பட்டிருந்தது
வயலூர் குப்பைக் கிடங்கில் ரூ.1,80,000 மதிப்பீட்டில் நடைபெற்ற பணியில், ஒரே நாளில் 163 மணி நேரம் ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கான ஒருநாள் வாடகை, ரூ.700-க்குப் பதிலாக 1099 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டதையும் கண்டறிந்தார். 2020-21 சிறப்புச் சாலைகள் திட்டத்தின்படி ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் தில்லை நகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சாலை மோசமாக அமைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த 2020-ல் கிருமிநாசினி தெளிப்பதற்காக வெறும் 75 ஆயிரம் ரூபாய்க்கு 3.50 லட்சம்வரை பட்டியல் தயாரித்து, போலியான பெயரில் முன்னாள் நகராட்சி பொறியாளர் பாண்டு பணம் பெற்றுள்ளார்.
இதேபோல் துர்கா நகர் பகுதியில் ரூ.9.45 லட்சத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பட்டியல் வந்தது. அதில் ஒரு பகுதி பணிகளுக்காக ரூபாய் 5 லட்சத்திற்கான பணம் ஒப்பந்ததாரர் மதியழகனுக்கு கடந்த 2-9-2021-ல் வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள 4.45 லட்சத்திற்கான தொகை வழங்குவதற்கு ஜெயப்பிரகாஷிடம் அனுமதிக்கு வந்தபோது அதில் நடைபெற்ற முறைகேடுகளைப் பார்த்து பில் தொகையில் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்தார் ஜெயப்பிரகாஷ்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virudhachalam1.jpg)
இந்த நிலையில், துர்கா நகரில் சாலைப் பணிக்காக ஒப்பந்ததாரர் மதியழகன் பொறியாளர் ஜெயப்பிரகாஷிடம் தனக்கான பில் தொகையை உடனே வழங்குமாறு வற்புறுத்தியும் ஜெயப் பிரகாஷ் உடன்படாததால், 22-12-2021 அன்று, அடியாட்கள் 3 பேரை அனுப்பி தகராறு செய்ய வைத்துள்ளார். அதனை தொடர்ந்து அச்சாலையை ஆய்வுசெய்து அதிலிருந்த குறைபாடுகளை அளவுப் புத்தகத்தில் பதிவிட்டதால், அவர் மீண்டும் 31-12-2021 அன்று அடியாட்களுடன் நகராட்சி அலுவலகம் சென்று ஜெயப்பிரகாஷைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி ஜெயப்பிரகாஷ் நாராயணன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் செய்ய... காவல்துறையோ, மதியழகனிடமும் ஒரு புகாரைப் ‘பெற்று, ஜெயப் பிரகாஷ் நாராயணன் மீதும் வழக்கு பதிந்தனர்.
இத்தாக்குதலுக்கு பின்னணியில் முன்னாள் நகராட்சிப் பொறியாளர் பாண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. "ஜெயப்பிரகாஷை வேறு ஊருக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் தான் வரவேண்டுமென்ற நோக்கத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பின்னாலிருந்து பாண்டு செயல்படுகிறார்' என்று குற்றம் சாட்டப்படுகிறது.
முன்னாள் நகராட்சி பொறியாளர் பாண்டு சுமார் ஏழரை ஆண்டுகாலம் விருத்தாச்சலத்தில் தொடர்ந்து நகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்தவர். ஏற்கனவே 2015-ல் விருத்தாசலத்தில் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டதில் பழைய ஆழ்குழாய் கிணறுகளையே கணக்கில் காட்டிய விவகாரத்தில், பொறியாளர் பாண்டு உட்பட ஒப்பந்ததாரர்கள் மீது ஊழல் தடுப்பு காவல் பிரிவு வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது கடந்த 4 மாத காலமாக நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றும் நிலை யில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் பெறப்பட்ட சாலைப் பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 ஆயிரம் மட்டுமே செலவாக, ரூ.2.65 லட்சத்திற்கு பட்டியலை முறை கேடாக வாங்கியுள்ளார். இதேபோல் நெல்லிக்குப் பம் நகராட்சியில் அனைத்து சாலைகளையும் ஜியோடாக் முறையில் உருவாக்கியதிலும் முறைகேடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய குற்றசாட்டுகள் குறித்து பொறி யாளர் பாண்டுவிடம் கேட்டதற்கு "கொரோனா காலத்தில் அவசர அவசியம் கருதி கொரோனா தடுப்புப் பணிகள் நடைபெற்றன. ஊரடங்கு காலத்தில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் செலவுகள் பார்க்கப்படவில்லை. எல்லாமே விதிமுறை, நடைமுறைகளின்படிதான் மேற்கொள்ளப்பட்டது. எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. விசாரணை வந்தால் உரிய விளக்கங்கள் அளிக்கப்படும்'' என்றார்.
மண்டல நகராட்சி இயக்குனர் சசிகலாவிடம் கேட்டதற்கு, "தற்போதுதான் பொறுப்பேற்றுள் ளேன். விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மக்களின் பணம், அதிகாரிகளால் முறைகேடாகச் செலவிடப்படுவதாலேயே தரமற்ற பணிகள் நடைபெறுவதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/virudhachalam-t.jpg)