மே 50-ம் தேதி, தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டியின் சண்முகசிகாமணி நகர்ப் பகுதியில், கொரோனா நிவாரணத் தொகையை, அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மேடையேறிய 11 வயது சிறுமி, தன் கடிதத்துடன் 1,970 ரூபாயையும் சேர்த்து அவரிடம் கொடுத்திருக்கிறார். கடிதத்தைப் படித்ததும் கண்கலங்கிவிட்டார் கனிமொழி.

"என்னோட பேர் ரிதனா. நான் 5 முடித்து 6-வது வகுப்பு போகப்போறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. என்னோட அப்பாவின் வைத்தியச் செலவிற்காக நான் சேமித்து வைத்த பாக்கெட் மணிதான் இது. அப்பா வைத்திய வசதி கிடைக்காமல் இறந்துபோனார். என்னைப்போல கொரோனாவால அப்பாக்களை இழந்து எந்த ஒரு பிள்ளையும் தவிக்கக் கூடாது. அதனால் கொரோனா நோய்த் தடுப்புப்பணியில இந்தப் பணத்தைச் சேர்த்துடுங்க'' என்றிருந்தது.

d

அச்சிறுமியின் படிப்பு மற்றும் குடும்பச்சூழலை விசாரித்தார் கனிமொழி. "உன்னுடைய படிப்புச் செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு உன் பணத்தையும் சேர்த்திடுறேன்'' என்று தட்டிக்கொடுத்து உறுதியளித்தார்.

Advertisment

நிதியுதவி அளித்த சிறுமி ரிதனா, கோவில் பட்டி ராஜீவ் நகர் பகுதியில் வசித்துவந்த நாகராஜ்-அமுதா தம்பதியரின் ஒரே மகள். தந்தை பி.காம். பட்டதாரி. தாய் அமுதா எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கல்லூரி ஒன்றின் விரிவுரை யாளர் பணியிலிருந்தவர். திருமணத்திற்குப் பின்பு மகளையும் வீட்டு வேலைகளையும் கவனிக்கும்பொருட்டு தன் கல்லூரி வேலை யை விட்டிருக்கிறார். அதேசமயம் கணவருக்கு பெங்களூரூவில் நிறுவனம் ஒன்றின் மேலாளர் பணி கிடைக்க, குடும்பத்துடன் அங்கே இடம்பெயர்ந் திருக்கிறார்கள்.

பெங்களூரில் ரிதனா மெட்ரிக் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றுகொண்டிருந்த நேரத்தில் அவளின் அப்பா அன்றாடம் கொடுக்கும் பாக்கெட் மணியைச் செலவழிக்காமல் சேமித்து வைத்திருக்கிறாள். அப்படிச் சேமித்த பணத்திலிருந்து அவ்வப்போது மற்றவர்களுக்கு உதவுவது அவளது வாடிக்கையாகவே இருந்திருக்கிறது. பெங்களூரில் படித்தபோது மதிய உணவை பள்ளிக்கு எடுத்துச்செல்வது வழக்கம். அவளோடு படித்த சக மாணவிகளில் சிலர், மதிய உணவின்றி தவிப்பதைக்கண்டு, தன் உணவை அவர்களோடு பகிர்ந்ததோடு, தனது சேமிப்பான 8,540 ரூபாயிலிருந்து, பெற்றோர் ஒப்புதலோடு, அவர்களுக்கு பிஸ்கட், ரொட்டி என்று வாங்கிக்கொடுத்து பசிப்பிணி போக்கியிருக்கிறாள். இப்படி இயல்பாகவே இரக்க குணமும், மனிதநேயமும் அவளோடு இருந்திருக்கிறது.

kani

Advertisment

இச்சூழலில், ரிதனாவின் தந்தை நாகராஜை ரத்த உறைவு நோய் தாக்கியிருக்கிறது. 2020 பிப்ரவரி ஆரம்பத்தில் அவரை பெங்களூரின் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார் மனைவி அமுதா. வீட்டின் மொத்த சேமிப்பும் காலியாகியும், நோயைக் குணப்படுத்த இயலவில்லை. "அப்பா, நீங்க கொடுத்த பாக்கெட் மணிய உங்க வைத்தியச் செலவுக்கு வச்சுக்குங்க'' என்று சொன்ன மகளிடம், "வேண்டாம்மா... அது உனக்கானது வைச்சுக்கோ'' என யதார்த்தமாகச் சொன்ன தந்தை நாகராஜ், 2020 பிப்ரவரி 10-ல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். கணவனை இழந்ததையடுத்து கோவில்பட்டி திரும்பிய தாய் அமுதா, அன்றாடம் கொத்தனார் வேலை பார்த்துப் பிழைப்பை நகர்த்துகிற தன் தந்தையின் ஆதரவில் தற்போதிருக்கிறார். இத்தகைய இக்கட்டான சூழலில்தான் தனது சேமிப்பில் மற்றவர்களுக்கு உதவியதுபோக மிச்சமிருந்த 1,970 ரூபாயையும் கொரோனா நிதிக்காக அளித்துள்ளாள் சிறுமி.

கணவரை இழந்து பிள்ளையை எப்படி வளர்ப்பதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்... "எங்க பொண்ணு நிவாரண நிதிக்கு தன்னோட சேமிப்பைக் கொடுத்திருக்கிறாள். குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைன்னு ஸ்டாலின் அய்யா சொல்லியிருக்காங்க. அப்படி எனக்கு வேலை கிடைத்தால் குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்'' என்று தழுதழுத்த குரலில் கூறினார் ரிதனாவின் தாய் அமுதா.

முதல்அலை அளவுக்குக்கூட இரக்கம் காட்டாமல், இளைஞர்கள்-குழந்தைகள் வரை பரவுகிறது கொடூரக் கொரோனாவின் இரண்டாவது அலை. இந்தச் சூழலிலும் மதுரையைச் சேர்ந்த சிறுவன் தன் சேமிப்பை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறான். கோவில்பட்டி சிறுமி கனிமொழியிடம் நிதி தந்திருக்கிறாள். இன்னும் பல குழந்தைகள் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.