ணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினரும்,  மேலும் சில பழங்குடியின        இனக் குழுவினரும்  பேரணி, போராட்டம் என இறங்கியதில், கடந்த 2023, மே மாதத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அதிலிருந்து தொடர்ச்சி யாகத் தற்போது வரை தொடரும் வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வீடுகள், கடைகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு மாநிலமே போர்க்கள மானது. 70 ஆயிரம் பேருக்கு மேல் அகதிகளாக அம்மாநிலத்தை விட்டே வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு, முகாம்களில் தங்கினர். இனக்குழுக்களுக்கிடையிலான மோதலில், காவல் நிலையங்களிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் களவாடப்பட்டு, அவற்றின் மூலம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கலவரத்தால் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக நிம்மதியற்ற சூழலையே மணிப்பூர் மக்கள் அனுபவித்துவருகிறார்கள்.

Advertisment

மெய்தி குழு இளைஞர்களின் வன்முறையால் குக்கி இனப்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, இழுத்துவரப்பட்ட வீடியோ பரவி நாடெங்கும் கொந்தளிப்பானது. இவ்வளவுக்கு பிறகும் மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில்கூட வாய்திறக்க மறுத்தார் பிரதமர். எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி, மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்லிவந்த நிலையில், பிரதமர் மட்டும் மணிப்பூருக்கு செல்லாமல் புறக்கணித்துவந்தது கடும் விமர்சனத்தை எழுப்பியது. இதற்கிடையே பா.ஜ.க. முதல்வர் பைரோன் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, அங்கே ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இப்படியான சூழலில், மணிப்பூரில் வன்முறை வெடித்து, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நெருங்கும் நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு சென்றார். மணிப்பூரில் சுராசந்த்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில், 1,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது. இந்த வன்முறை நமது முன்னோர்களுக்கும் நமது எதிர்கால சந்ததியினருக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வரு கிறது. எனவே, நாம் ஒன்றாக மணிப்பூரை அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். மணிப்பூரின் அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும். 

modi-in-manipur1

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்தியாவின் பாதுகாப்பிலும் மணிப்பூரின் பங்களிப்பிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். இந்திய தேசிய ராணுவம் முதன்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய மணிப்பூர் நிலம் இது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மணிப்பூரை இந்தியாவின் சுதந்திரத்திற்கான நுழைவாயில் என்று அழைத்தார். இந்த நிலம் பல துணிச்சலான மனிதர்களைக் கொடுத்துள்ளது'' என்று பேசினார். சுராசந்த்பூரில், முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். 

Advertisment

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மோடி வருகையையொட்டி, வன்முறையாளர்கள் என அடையாளம் காட்டப்பட்ட இளைஞர்கள் பலர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கோரியும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆங்காங்கே வன்முறை வெடித்தன.

சுராசந்த்பூர் மாவட்டத்தில், பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்கக்கூடிய இடத்துக்கு அருகிலுள்ள பியாசன்முன், போங்மோல் பகுதிகளில், மோடி வருகைக்கு முதல் நாளன்று, மோடியை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், கொடிகள், விளம்பரப் பதாகைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் நடந்ததில், இரவில் அப்பகுதி போலீசாரின் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப்பட்டது. மேலும், பைலியன் பஜார் பகுதியிலும் வன்முறை ஏற்பட்டது. பிரதமர் மோடி வருகை தரும் பகுதி களைச் சுற்றி, ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. அதேபோல், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியினத்தை சேர்ந்த 6 அமைப்புகளின் ஒருங்கிணைப் புக்குழு சார்பாக, பிரதமர் வருகையின்போது மணிப்பூரில் பந்த் அறிவிக்கப்பட்டது. 

இதேபோல், மணிப்பூர் காங்கிரஸ் சார்பாக, இம்பாலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்               தின் முன்பாக, பிரதமர்  மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "பா.ஜ.க. ஆட்சியால் மணிப்பூர் எரிந்தது!', 2 ஆண்டுகளாக பிரதமர் ஏன் வரவில்லை?' என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் பதாகைகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். இந்நிலையில், மாநில பா.ஜ.க.வின் அடிமட்டத் தலைமையை தேசிய தலைமை மதிக்கவில்லை எனக் கூறி, பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகி    கள் 13 பேர் பதவிகளை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். 

Advertisment

ஆக... பெரும் பர பரப்புக்கிடையே பிரதமரின் மணிப்பூர் பயணம் நடந்து முடிந்தது.