தேர்தல் என்று வந்தாலே பிரச்சாரத்தில் பாகிஸ்தான் குறித்து பேசுவது மோடியின் வழக்கமாகிவிட்டது. கடந்த 2019 தேர்தலில் புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலி, பாகிஸ்தான் மீதான துல்லிய தாக்குதல், அபிநந்தன் பாகிஸ் தானில் சிக்கியது போன்ற பரபரப்புகளால் வெற்றியைக் கைப்பற்றிய மோடிக்கு, நடப்பு தேர்தலில் ராமர் கோவிலோ, ஆட்சியின் சாதனைகளோ கைகொடுக்காத சூழலில் மீண்டும் பாகிஸ்தான் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.
கடந்த மே 2ஆம் தேதி குஜராத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, "பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்'' என்று ராகுல் காந்தியை பாகிஸ்தானோடு இணைத்து பற்றவைத்தார். அதற்கேற்ப காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பாகிஸ்தான் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றில், "பாகிஸ்தானும் இறையாண்மை கொண்ட நாடு. அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிட மும் அணுகுண்டு உள்ளது.'' என்று பேசியிருந்ததை தோண்டி யெடுத்து பா.ஜ.க. வைரலாக்கியது. அந்த வீடியோவுக்கு பதிலளிப்பதுபோல் உத்தரப்பிரதேசத்தில் பேசிய அமித்ஷா, "அணுகுண்டுக்கு ராகுல் காந்தி வேண்டுமானால் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றதும் நாங்கள் நிச்சயம் மீட்போம்''” என்றார்.
கட்டாக்கில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்று இந்திய நாடாளுமன்றத்தின் தீர்மானம் இருக் கிறது'' என்று குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. அது நம்முடனே இருக்கும். அங்குள்ள நமது சகோதர சகோதரிகள் தாங்களாகவே இந்தியாவுடன் சேர்வதாகக் கோருவார்கள்'' என்றார்.
இப்படி கிளறிவிடப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீரின் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, "பாதுகாப்புத்துறை அமைச்சர் அவ்வாறு சொல்கிறாரென்றால் அவர் அதைச் செய்யட்டுமே... நாங்கள் யார் தடுக்கிறோம்? ஆனால், பாகிஸ்தானும் கையில் வளையல் அணிந்திருக்கவில்லை. அணுகுண்டு வைத்திருக்கிறார்கள்'' என்றார்.
இக்கருத்தைப் பிடித்துக்கொண்ட மோடி, பீகாரில் பிரச்சாரம் செய்யும்போது, "அணு ஆயுதம் வைத்துள்ள பாகிஸ் தானைக் கண்டு இண்டியா கூட்டணித் தலைவர்கள் அஞ்சு கின்றனர். பாகிஸ்தான் கைகளில் வளையல் அணியவில்லை எனில் நாம் அணிய வைப்போம். பாகிஸ்தானில் உணவுத் தட்டுப்பாடு இருப்பது தெரியும், வளையலுக்கும் தட்டுப்பாடு இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது'' என்று பேசினார். இந்தியாவின் பிரதமராக இருப்பவர், தேர்தல் பிரச்சாரத்துக்காக பாகிஸ்தான் குறித்து கிண்டலாகவும், சீண்டலாகவும் பேசியிருப்பதன்மூலம் மீண்டும் தேசபக்தி அரசியலால் வாக்குகளை அள்ளப்பார்க்கிறார் மோடி என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.