ஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் (என்.ஆர்.சி.) இடம்பெறாத அந்த 40 லட்சம் பேரின் தலையெழுத்து என்னவாகும் என்பது வருகிற ஜூலை 31-ல் தெரிந்துவிடும். இதற்குமேல், காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், அதுதான் தீர்ப்பு நாள். அதற்குள் அஸ்ஸாமை தேர்தல் வேட்டைக்காடாக பயன்படுத்திவிட்டது மோடி அரசு.

2018, ஜூலை 30-ல் வெளியான என்.ஆர்.சி.யின் வரைவுப் பட்டியலில், அஸ்ஸாமில் மொத்தமுள்ள 3.29 கோடி மக்களில் 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத 40,70,707 பேரில் இதுவரை 37,59,630 பேர் தற்போது வரை நீக்கப்பட்டு, 2,48,077 பேர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் என்.ஆர்.சி. பெறுவார்கள் என்பது சந்தேகம் என்றாலும், பெறாமல் போகிறவர்களின் நிலைதான் கவலைக்கிடமானது. ஒருவேளை இந்தியக் குடிமக்களாகவே இருந்தாலும், போதுமான ஆவணங்களைக் காட்டாமல் போகும்பட்சத்தில் அவர்களும் குடிபெயர்ந்தவர்களாகவே கணக்கில் கொள்ளப்படுவார்கள்.

ass

இப்படி நிராகரிக்கப்பட்டவர்கள் இனிமேல் அமைக்கப்படும் தீர்ப்பாயங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கும். அதுவும் பொய்த்துப்போனால் இனிமேல் கட்ட இருக்கும் தடுப்புக்காவல் முகாம்களில் இருப்பதைத் தவிர வேறுவழியில்லை. கவுகாத்தியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமன் வதூத், “"குடிபெயர்ந்த ஒருவரை அவரின் பிறந்த இடம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாடுகடத்த முடியும். ஒருவேளை போதுமான ஆவணங்கள் இல்லாத காரணங்களால் இந்தியக் குடிமக்களே குடிபெயர்ந்தவர்களாக கருதப்பட்டால், அவர்களுக்கு செல்ல வழியே கிடையாது. காலம்முழுக்க தடுப்புக்காவல் முகாம்களில் கழிக்கவேண்டியதுதான்'’என்று நிலைமையின் தீவிரத்தை விவரிக்கிறார்.

உதாரணத்திற்கு 2015-ல் குடிபெயர்ந்தவர்களாக அறிவிக்கப்பட்ட 46 ஆயிரம் பேரில், நால்வர் மட்டுமே நாடுகடத்தப்பட்டனர். 2ஆயிரம் பேர் தடுப்புக்காவலில் இருக்கும் நிலையில், மீதமுள்ள 44 ஆயிரம் பேரின் நிலையை அரசே தற்போதும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற குழப்பங்களைத் தடுக்க ஓய்வுபெற்ற அதிகாரிகள், காவல்துறை மேலதிகாரிகள் கொடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிலும் அரசு அக்கறை செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுகிறது.

சென்ற மாதம் அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வந்த் நகர் மாவட்டத்தில் சவுகத் அலி என்கிற இஸ்லாமியர் மாட்டிறைச்சி விற்றதற்காக கொடூரமாகத் தாக்கப்பட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. சவுகத் அலியைச் சுற்றியிருந்தவர்கள், "நீ என்ன வங்காளதேசத்துக் காரனா? என்.ஆர்.சி.யில் உன் பெயர் இடம் பெற்றிருக்கிறதா?'’என ஆக்ரோஷமாக கேட்டதோடு நிறுத்தாமல், அவர் வாயில் பன்றி இறைச்சியைத் திணித்து இஸ்லாமிய மதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இங்குதான் மாட்டிறைச்சி, இறை நம்பிக்கை, குடியுரிமை ஆகிய விஷயங்களை ஒற்றைப் புள்ளியில் நிறுத்தி பா.ஜ.க. தன் அரசியலில் வெற்றி கண்டிருக்கிறது.

தற்போதைய சூழலில் என்.ஆர்.சி. தொடர்பாக இரண்டு பிரச்சனைகளை முக்கியமானதாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று - மூன்று ஆண்டுகளாக மிகப்பெரிய பொருட்செலவில் அதிகாரிகள் அபரிமிதமான உழைப்பைக் கொட்டி பணியை நிறைவு செய்திருக்கின்றனர். ஆனால், அதற்குள் வங்காளதேசத்திலிருந்து வரும் இந்துக்களை வரவேற்கலாம் என்ற பா.ஜ.க. அரசின் முடிவு ஒட்டுமொத்த என்.ஆர்.சி. பணிகளையும் வீணடித்துவிட்டது. அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால், “"வங்காளதேச இந்துக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அதனால் அஸ்ஸாம் மக்களின் அடையாளத்திற்கு பாதிப்பு ஏற்படாது'’என்று ஏற்கனவே பேசியிருந்தார். அதேசமயம், இஸ்லாமியர்களை, “ஊடுருவியர்கள், கரையான்கள், நம் வேலையைத் தின்பவர்கள்''’என்று பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

modi

இரண்டு -அஸ்ஸாமின் நிலப்பரப்பில் வரலாற்றுரீதியில் எழுந்திருக்கும் இந்த சட்டவிரோத குடியமர்த்தலுக்கு எதிரான மனநிலையை, தேசப் பாதுகாப்பு என்கிற பெயரில் மற்ற மாநிலங்களுக்கு கடத்த எண்ணும் பா.ஜ.க.வின் குரூர புத்தி. மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் இதனை எதிர்க்கின்றனர். ஒருவேளை என்.ஆர்.சி. மற்ற மாநிலங்களுக்கு பரவினால், சவுகத் அலிக்கு நேர்ந்ததுபோல, தேவையற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது.

இது ஒருபுறமிருக்க, இந்திய வனங்களுக்கான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து, காலங்காலமாக வனங்களில் வசித்துவரும் பழங்குடிகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது மோடி அரசு

எந்தக் காரணமுமின்றி பழங்குடிகளை வனத்துறையினர் சுட்டுக் கொல்லலாம். பழங்குடிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை தடுக்க மற்றும் நீக்க வனத்துறைக்கு உரிமை. பழங்குடிகளின் விருப்பமில்லாமலே அவர்களை வெளியேற்றுவது. பழங்குடிகளை கூட்டமாகத் தண்டிப்பது. காடு வளர்ப்பு என்ற பெயரில் வனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. இந்திய வனங்களுக்கான சட்டமே, “இந்தப் பகுதிகள் காலனியாதிக்க அல்லது சுதந்திரத்திற்கு முந்தைய வரலாற்று அநீதிக் காலத்தில் இந்தப் பகுதிகள் கையகப்படுத்தப் பட்டிருந்தன’’ என்று சொல்லும் நிலையில், அதை இரட்டிப்பாக்கும் முயற்சியே இது என்று பழங்குடிகள் உரிமைக்காக குரலெழுப்புபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாட்டு மக்களின் இந்தியத் தன்மையை குடியுரிமை பெயரில் சோதிப்பதும், காலங்காலமாக வனங்களில் வாழும் மக்களை ஒடுக்க முனைவதும் அப்பட்டமான சர்வாதிகாரம் இன்றி வேறில்லை.

-ச.ப.மதிவாணன்