இந்தியாவெங்கும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை படுமோசமாக உள்ளது.
குஜராத்திலுள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் படுக்கை வசதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் நகரிலுள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், சிகிச்சைக்காக நோயாளிகளோடு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவமனைக்கு வெளியே வரிசைகட்டி நிற்கின்றன. மருத்துவமனை யின் படுக்கைகளில் மட்டுமல்லாது, வராண்டாக்களிலும் தரையில் படுத்தபடி சிகிச்சையெடுப்பதைப் பார்க்க முடிகிறது. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தீவிரப் பாதிப்பிலுள்ள கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கான மார்ச்சுவரி வாகனங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், குட்டி யானை போன்ற வாகனங்களில் எடுத்துச்செல்லும் அவலத்தைப் பார்க்க முடிகிறது.
கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் அவர்களைத் தகனம் செய்வதற்கான தகன மேடைக்கும் சிக்கல் எழுந்துள்ளது. சூரத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அங்குள்ள குரு ஷேத்திரா மற்றும் அஸ்வினி குமார் தகன மையங்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக செயல்பட்டுவருகின்றன. குரு ஷேத்திரா தகன மைதானத்தில், தினமும் சராசரியாக 20 உடல்கள்வரை எரியூட்டப் பட்டுவந்த நிலையில் தற்போது ஒரே நாளில் நூறு உடல்கள் வரை எரியூட்டவேண்டிய நிலை. அஸ்வினி குமார் தகன மையத்தில் தினமும் 30 உடல்கள்வரை எரியூட்டிய நிலையில், தற்போது 90 உடல்களுக்குமேல் எரியூட்டுகிறார்கள். இடைவிடாது எரியூட்டப்பட்டுவருவதால், இவற்றின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து, இரும்புத் தகடுகளும், சிம்னியும் உருகிவிட்ட சம்பவமும் நடந்துள்ளது. தகன மேடை பற்றாக்குறையால், இறந்தவர்களின் உடல்களோடு மணிக்கணக்காகக் காத்திருக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. வேறுவழியில்லாமல், பொதுவான காலி மைதானங்களில் உடல்களை எரியூட்டும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
'குஜராத் மாடல்' என்ற அலங்கார வார்த்தைமூலமாக, மோடியின் குஜராத்தைப் பாருங்கள்... அதன் வளர்ச்சியைப் பாருங்கள் என்று பல்வேறு செய்திகளைப் பரவச்செய்து அதன்மூலம் பிரதமரானவர்தான் மோடி. ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று காலத்தில், போதிய மருத்துவமனை வசதிகள் இல்லை, மருத்துவ மனையில் ஆக்சிஜன் சிலிண்டர், தடுப்பூசிகள், ஆம்புலன்ஸ்கள், படுக்கை வசதிகள் பற்றாக்குறை, தகன மேடைகளுக்குக்கூட பற்றாக்குறை என்ற செய்திகள் வரும்போதுதான் குஜராத் மாடல் என்பது ஓர் ஜோடிக்கப்பட்ட வார்த்தையென்பது தெரியவருகிறது.
-தெ.சு.கவுதமன்