பிப்ரவரி 14-ல் சென்னைக்கு வந்த மோடி, ""தேவேந்திரகுல வேளாளரில் அடங்கிய ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என உறுதிகூறுகிறேன். அதுகுறித்த மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும். நீங்கள் தேவேந்திரர்… நான் நரேந்திரர்''’ என்று சொல்லி கைதட்டு வாங்கினார். அறிவிப்பு வெளியான வேகத்துக்கு மற்ற நடவடிக்கைகள் இல்லையென அந்த சமுதாயத்தின் மத்தியிலிருந்து அதிருப்திக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
இதுகுறித்து புதிய தமிழக தலைவர் கிருஷ்ணசாமியோ, ""இந்த பெயர் மாற்றம் மட்டும் போதாது. பட்டியலினத்திலிருந்து எங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டுவந்து அதில் உள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதையும் சேர்த்து நிறைவேற்றவேண்டும் என்று அந்த நிகழ்விலேயே மோடியிடம் சொல்லிவிட்டு வந்தேன். இதுவரை அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கிறதா என்று தெரியவில்லை.
எங்களை தாழ்த்தப்பட்ட பிரிவான பட்டியல் இனத்தில் சேர்த்ததால் பெரும் பான்மை மக்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது. வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. எனவே பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால் போதாது. பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றவேண்டும். அதை இந்த ஆளும் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் செய்யவில்லை. இதைச் செய்தால்தான் ஆதரவு தருவதை பரிசீலிக்க முடியும்'' என்று தெரிவித்துள் ளார். ஜான்பாண்டியனின் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதுதான். இது எந்தளவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும், அந்த சமூதாயத்தின் மற்ற தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றறிய அவர்களின் கருத்தைக் கேட்டோம்....
முதலில் தமிழர் தேசியக் கழகத்தின் தலைவர் வையவனிடம் பேசினோம். ""உயர் சாதி பிராமணர்களுக்கான பொருளாதார அடிப்படையிலான 10% உள் ஒதுக்கீட்டு மசோதாவை மட்டும் இரண்டே நாட்களில் பரிசீலித்து உடனே நடைமுறைப்படுத்திய மோடி, நீங்க தேவேந்திரர் நான் நரேந்திரர் என்று வாயிலேயே வடை சுடுகிறாரே தவிர நிஜத்தில் வேகம் இல்லை. மத்தியில் இந்த பெயர் மாற்றத்திற் கான அரசாணையைக்கூட பாராளுமன்றத்தில் முழுமையாகச் செய்யவே இல்லை. அப்புறம் எப்படி பட்டியலினத்திலிருந்து எங்களை எடுப்பார்கள். இவர்கள் இப்போது இல்லை எப்ப வுமே செய்யமாட்டார்கள். ஏனென்றால் சாதிப் படிநிலையை ஆதரிப்பது ஆர்.எஸ்.எஸ். வருணாசிரம சித்தாந்தத்திற்கு எதிராக ஒரு துரும்பையும் எடுத்துப் போடமாட்டார்கள்.
பட்டியலின வெளியேற்றத்துடன் உள்ஒதுக்கீடு தரவில்லையென்றால் எங்கள் சமுதாயத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமிழகத்தில் 100 தொகுதிகளைத் தேர்ந் தெடுத்து, ’’தேவேந்திர வேளாளர்கள் ஓட்டு வேறு ஆளுக்கு இல்லை’’ என்று கோஷத்தை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம்
தமிழகத்தில் 85 லட்சம் தேவேந்திரகுல வேளாளர்கள் உள்ளனர். தூத்துகுடி முதல் பாண்டிச்சேரி வரை தமிழகம் முழுவதும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார் கள் தேவேந்திரகுல வேளாளர்கள். ஆளும் தரப்பு தேர்தலுக் காகவே இந்த விசயத்தை கையிலெடுத்து வெறும் பெயர் மாற்றத்தை மட்டும் அறித்துவிட்டு ஓட்டுக்களை வாங்கப் பார்க்கிறது. நாங்கள் ஏமாறமாட்டோம்.
தி.மு.க.கூட இந்த விசயத்தில் மௌனம் சாதிக்கிறது. ஆட்சிக்கு வந்தால் உங்களது கோரிக்கையை மீண்டும் பரிசீலிப்போம் என்று உறுதிகொடுக்க மறுப்பது வேதனை யானது. காலம் காலமாக காங்கிரஸ், தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்ட கூட்டம் நாங்கள். பா.ஜ.க. எங்கள் தோள்மீது கை போட்டு ஏமாற்றப்பார்க்கிறது. சமூக நீதி பேசும் தி.மு.க.வோ எங்களை அரவணைக்க மறுக்கிறது ஏன்?'' என்றார்.
மள்ளர் நாடு மாநில செயல்தலைவர் சோலை பழனி வேல்ராஜனோ, ""இது தேர்தலுக்கான அறிவிப்பாகவே எங்களுக்குப் படுகிறது. பட்டியலின வெளியேற்றமே எங்கள் நோக்கம். எம் மக்களை தேர்தலுக்காக ஏமாற்றுவதற்கே இந்த அறிவிப்பென நன்றாகத் தெரிகிறது. இந்த தேர்தலில் இதனை கட்டாயம் அனைவருக்கும் புரியவைப்போம். கிருஷ்ணசாமியும் ஜான்பாண்டியனும் மட்டுமே எங்கள் தலைவர்களல்ல. எங்கள் சமுதாயத்திற்காக அனைத்து இயக்கங்களும் ஒட்டுமொத்த சமூகமும் இந்த முறை தேர்தல் புறக்கணிப்பு செய்யவோ அல்லது அனைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து தேர்தலில் நிற்கவும் தயாராக இருக்கிறோம். இனியும் எங்களை ஏமாற்றமுடியாது'' என்றார் உஷ்ணமாக.
மூவேந்தர் புலிப்படையின் தலைவர் பாஸ்கரன், “""இதே கோரிக்கைக்காக 1996-ல் கலைஞர் ஜனார்த்தனன் கமிஷன் அமைத்தார். அது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டது. பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், வாதிரியான் அனைத்தையும் ஒன்றாக்கி தேவேந் திரகுலவேளாளர் என்ற நிலைக்கு வந்துள்ளோம். மனுதர்ம வர்ணாசிரம கோட் பாட்டிற்கு எதிராக பா.ஜ.க.வால் எதுவும் செய்யமுடியாது. கிருஷ்ணசாமி போன்றோர் தங்களது சுயநலனுக்காக அங்கே மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அம்பேத்கரின் மத வெளியேற்றத் தைப்போல அனைத்து தேவேந்திர சமுதாய மக்களும் மதத்தை விட்டு வெளியேறுகிறோம். இல்லையென்றால் எங்களை தீண்டத் தகாதவர்களாக வைத்திருக்கும் பட்டியலினத்திலிருந்து வெளியேற்று என்று ஒரு பெரும் போராட்டத்தைக் கையிலெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. பா.ஜ.க.வின் வேசம் வெகு விரைவில் அனைவருக்கும் புரிய வரும்'' என்றார்.