தேர்தலுக்காக, வாக்கு ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் கொஞ்சம் முன்பின்னாக நடந்துகொள் வது வழக்கம்தான். ஆனால் பிரதமர் மோடியோ பீகார் தேர்தல் பிரச்சாரத்தில், “"கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்கள் குறித்து தொடர்ந்து அவதூறு செய்கின்றனர். தமிழகத்தில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை தி.மு.க. துன்புறுத்துகிறது. பீகார் மக்களை அவமதித்த காங்கிரஸ் தலைவர்களை பரப்புரை செய்வதற்காக ஆர்.ஜே.டி. அழைத்துள்ளது''’ எனத் தரம்தாழ்ந்த பிரச்சாரத்தில் இறங்கியிருப்பது இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது.
2023-ல் கோவை, திருப்பூர் நகரங்களில் பீகார் மக்கள் தாக்கப் படுவதாக சில காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்யாது "டெய்னிக் பாஸ்கர்' உள்ளிட்ட நாளிதழ்களும் இந்தச் செய்தியைப் பதிவிட நாடே பரபரப்பானது. பின்பு பீகாரிலிருந்து ஒரு குழுவினர் வந்து தமிழகத்தைப் பார்வையிட்டு விட்டு அந்தச் செய்தி வதந்தியே என்பதை உறுதிசெய்தனர். தற்போது பீகார் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் நிலையில், பழைய புண்ணைக் கிளறிவிடுவதுபோல், தென்மாநிலத்தவர் கள், வடமாநிலத் தொழிலாளர்களை குறிப்பாக தமிழர்கள் துன்புறுத்துவதுபோல் மோடி பேசியிருப்பது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, "பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, இத்தகைய பேச்சுக்களால் தன்னுடைய மாண்பை இழந்துவிடக்கூடாது மோடி. ஒடிசா, பீகார் என எங்கு சென்றாலும் பா.ஜ.க.வினர் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்காக தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்''’எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி, “"வட மாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்பு அரசியல் செய்வதே பா.ஜ.க.வின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலில் இதையேதான் செய்தனர். கொரோனா பெருந் தொற்றின்போது ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்களுக்கு தங்களை நடக்கவிட்டு கொடுமைப் படுத்தியது யாரென்பது அவர்களுக்குத் தெரியும், அக்காலத்தில் தமிழ்நாடு தங்களுக்கு எப்படி உதவியது என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ் பவனில் வசித்துவருகிறார்'' ’என குத்தலாக விமர்சனம் செய்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/modi1-2025-11-04-11-59-51.jpg)
தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகையோ, "வாக்கு வங்கிக்காக உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார் மோடி. உச்சபட்ச பதவியிலிருக்கும் மோடியின் பேச்சு வேதனையை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. வேலையில்லாமலிருக்கும் பீகார் மக்கள் தமிழகத்துக்கு வந்து வேலை பார்த்து உழைப் புக்கேற்ற ஊதியம் பெற்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர்''’என்கிறார்.
சி.பி.எம். கட்சியின் தமிழக மாநிலச் செயலாளரான பெ.சண்முகமோ நெத்தியடியாக, “"பிரதமர் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பீகார் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்படி கூறுவது பிரதமர் செய்யக் கூடிய வேலையா இது? இனப் பகைமையை உருவாக்கும் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பீகார் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிலும் சோற்றிலும் மண்ணள்ளிப் போடுவதை அந்தத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்''’என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “"2014-ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின், வட மாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடி யேற்றம் தமிழ்நாட்டில் வேகமாக நடை பெற்றுவருகிறது. பிரதமர் மோடி கூறிய இந்த பொய்யான, பிரிவினையை ஊக்கு விக்கும் பேச்சை தமிழக வாழ் வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது''” என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், “"தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப் பரப்புரை இனவெறிப் பாகுபாட்டின் உச்சம். தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி. தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்புரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின்போது தமிழர்களைத் திருடர்கள் என்றும், ஒடிசாவைத் தமிழன் ஆளலாமா? என்றும் இனவெறுப்பை விதைத்த பிரதமர் மோடி, அதன் நீட்சியாக தற்போது தமி ழர்களை வன்முறையாளர்களாக, கட்டமைப்பது, தமிழினத்தை இழிவுபடுத்தும் கொடுஞ்செய லாகும்''’என காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதையடுத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பலரும் தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. இங்கு யாரும் கடுமையாக நடந்துகொள்வதில்லை. பரஸ்பரம் இரு தரப்பிலும் நன்மதிப்பே நிலவுகிறது என தங்கள் கருத்தை வெளிப்படுத்திவருகின்றனர். தமி ழகத்தில் ஒடிசா மாநிலத்தவருக்கு அடுத்த படியாக அதிகளவில் வேலைபார்ப்பது பீகார் மாநிலத்தவர்தான். தமிழக தொழிலாளர் நலத் துறை கணக்கீடு 2,47,016 பீகார் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கிறது.
சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் தனஞ்செய் திவாரி- ரீனாகுமாரி தம்பதி, தமிழகத்தில் 15 பதினைந்து ஆண்டுகளாக வசித்துவருகிறார்கள். வெல்டிங் தொழில் மூலம் சம்பாதிக்கும் தனஞ்செய் திவாரி, "நீண்டகால மாக இங்கு வசித்துவருகிறோம். எந்தப் பிரச்சனையும் இல்லை. சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பிருந்தால் நாங்கள் இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை''’என்கின்றார். இவர்களின் மகளான ஜியாகுமாரி நடந்துமுடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஈரோட்டில் ஜவுளிக்கடையொன்றில் வேலைசெய்யும் பீகார் தொழிலாளர் ஒருவர், "நான் வந்து இருபது வருஷமாச்சு. சம்பளம் எல்லாம் ஒழுங்கா கொடுத்திடறாங்க. நான் சந்தோஷமாதான் இருக்கேன். இங்க எந்த பிரச் சனையும் இல்லை. பீகாரில் விவசாய வேலைவாய்ப்புகள்தான் அதிகமிருக்கும். தமிழகத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகம். சம்பளமும் அதிகம்''’என்கிறார்.
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஒரு பீகார் மாநில ஊழியர், "தமிழ்நாட்டில் 20,000 சம்பளம் தருகிறார்கள் என்றால் அங்கே பத்தாயிரம்தான் தருவார்கள். இங்கே எந்த பிரச்சனையும் இல்லை. நோ பிராப்ளம்''’என்கிறார்
சரி, பீகார் தேர்தலில் ஏன் தமிழகத்தைக் குறிவைத்து பிரதமர் மோடி பேசவேண்டும்?
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்தியா கூட்டணியிலுள்ள ஆர்.ஜே.டி. கட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸையும் அதன் கூட்டணியிலுள்ள கட்சிகளையும் மட்டம் தட்டுவதற்காகவே மோடி இதனைப் பேசியிருக்கிறார்.
மேலும், இந்தத் தேர்தலில் பா.ஜ.க. -ஒருங்கிணைந்த ஜனதா தளத்துக்கு எதிராக பீகார் மக்களின் அதிருப்தி அதிகமாக இருக்கிறது என்பதை பா.ஜ.க தெரிந்துகொண்டி ருக்கிறது. பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க. உண்டு என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அதிருப்தி வாக்காளர்களை பெருமளவில் நீக்கிவிட்டால் பா.ஜ.க. வெற்றிக்கு இடைஞ்சல் இருக்காது என்ற யோசனையின் வெளிப்பாடே அது.
ஆனால் எதிர்க்கட்சிகள், உச்சநீதிமன்றம் போய் அந்த முயற்சியில் பெருமளவு வாக்காளர் நீக்கத்தைத் தடுத்துவிட்டன. எனவே வாக் காளர்களின் பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையை மடைமாற்றுவதற்காக வழக்கமான பிரிவினை அரசியலை மோடி கையிலெடுத்துள்ளார். முஸ்லிம் களைக் கையிலெடுத்து பிரிவினை அரசியல் பேசும் பா.ஜ.க., இந்தமுறை மாறுதலாக தமிழர்களைச் சீண்டி யிருக்கிறது.
பா.ஜ.க. தமிழர்களைச் சீண்டுவது இது இரண்டாவது முறை. ஒடிசா தேர்தலின்போது, ஒடிசா மக்களை ஒரு தமிழன் ஆட்சிசெய்ய வேண்டுமா? ஒடிசா ஜெகந்நாதர் கோவிலின் கருவூல செல்வம் தமிழகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என பிரிவினை அரசியல் பேசி அங்கே ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதே வியூகம் பீகாரிலும் செல்லுபடியாகுமா? என்ற முயற்சிதான் மோடியின் தேர்தல் பிரச்சார பேச்சு என்கிறார்கள்.
"தேர்தல் வெற்றி -தோல்விக்கப் பால், மக்களை ஒன்றிணைப்பவர்தான் தலைவராக இருக்கமுடியும். ஆனால் குஜராத்திலிருந்தே மதத்துவேஷம், சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களைப் பேசி ஆட்சிக்கு வரு வதையே ஒரு பாணியாக வைத்திருக் கிறார் மோடி. ஒரு நாட்டின் பிரதமராக மாறியபிறகாவது அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்கவேண்டும்.
இந்தத் தேர்தலில் மோடியின் பேச்சுக்கு பலன் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்தியப் பிரதமர்களை அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் காலம் வரிசைப்படுத்தும்போது, அவரது மதத்துவேஷம், ஒரு மாநிலத்தவரை இன்னொரு மாநிலத்தவருக்கு எதிராக நிறுத்தும் போக்கு ஆகியவற்றால் ஆகக் கடைசியிடமே மோடிக்குக் கிடைக்கும்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/modi-2025-11-04-11-59-39.jpg)