டெல்லி உச்ச நீதிமன்றம் ஆகஸ்டு 12-ஆம் தேதி. பீகாரில் வாக்காளர் பட்டியலி லிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தரவேண்டும் எனவும், வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அவசியம் குறித்தும் பல்வேறு அமைப்புகள் ஒருபுறமும், தேர்தல் ஆணையம் மறுபுறமும் வாதங்களை வைத்துக் கொண்டிருக்க, மனு தாரர்களில் ஒருவரான யோகேந்திர ஜாதவ் நீதிபதிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சில பேரை நீதிமன்றத் தின் பார்வைக்குக் கொண்டுவர அனுமதி கேட்டார். நீதிமன்றமும் அனுமதிக்க 17 பேரைக் கொண்டுவந்து நிறுத்தினார்.
அவர்கள் வேறு யாரு மல்ல... பீகார் மாநிலத்தில் இறந்துபோனவர்கள் எனக் கூறப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டவர்கள். இதையடுத்து நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி அமர்வு மட்டுமல்ல, இதற்கெதிராக என்ன வாதிடப்போகிறோம் என தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர்களும் வாயடைத்துப் போய்விட்டனர்.
இந்திய மக்களையும், தேர்தல் ஆணையத் தையும் காங்கிரஸ் கட்சி தன் ஆறுமாத கால கடின உழைப்பால் தட்டியெழுப்பியிருக்கிறது. மத்திய பெங்களூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதேவபுரா தொகுதியில் மட்டும் 1,00,250 போலி வாக்குகளை அம்பலப்படுத்தியதன் மூலம் இந்திய மக்களை திகைப்பிலாழ்த்தியிருக்கிறார் ராகுல்.
இதையடுத்து, பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் 65,00,000 வாக்காளர்களை நீக்கியிருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. 65 லட்சம் பேரும் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்ற விவரத்தைக் கோர, பட்டியலிலிருந்து வாக்காளர்கள் நீக்கிய விவரத்தைத் தெரிவிக்கவேண்டுமென்ற விதி சட்டத்தில் இல்லை. எனவே மனுதாரர்கள் அப்படி உரிமை கோரமுடியாது என மறுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
இதற்கிடையில், வட இந்தியாவைச் சேர்ந்த டெய்னிக் பாஸ்கர் நாளிதழ், புதிய வாக்காளர் வரைவுப் பட்டியலில் 2,92,048 வாக்காளர்களின் வீட்டு எண் 0 என இருப்பதாக அதிர்ச்சிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் குளறுபடிக்கு இன்னொரு உதாரணம், பீகாரின் சிவான் தொகுதியில், ஒரு வாக்காளரின் வயது 124. அவர் பெயர் மின்தா தேவி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை உலக அளவில் 115 வயதுடையவரே உலகின் அதிக வயதான நபர் என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்க, தேர்தல் ஆணையமோ 124 வயது நபர் உயிருடன் இருப்பதாய் குறிப்பிட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது.
தேர்தல் ஆணையம் மீது ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உரத்த குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். “''பீகாரின் துணை முதலமைச்சரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான விஜய்குமார், லக்கி சாராய், பங்கிபூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார். 2 தொகுதிகளி லும் வெவ்வேறு வீட்டு முகவரி, வயதுடன் அடையாள அட்டை வைத்திருப்பதுடன், 2020 தேர்தலில் இரு வாக்குகளையும் அளித்துள் ளார். தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’''
மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பீகாரின் ஜமுய் மாவட்டத்திலுள்ள சவுதியா பஞ்சாயத்துக்குட்பட்ட ஆமின் கிராமத்தில் ஒரு வீட்டில் 230 வாக்காளர்கள் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப் பகுதியில் விசாரித்தபோது அந்த வீட்டில் 230 பேர் வசிக்கவில்லை என்பது அம்பலமாகியுள் ளது. அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள ஓப்ரா சட்டமன்றத் தொகுதியில் 6,637 வாக்காளர் களின் வீட்டு எண் 0, புல்வாரியில் 5,905 வாக் காளர்களின் வீட்டு எண் 0, போர்ப்ஸ்கஞ்சில் 4,155 வாக்காளர்களின் வீட்டு எண் 0, தர்பங்கா வில் 3,634 வாக்காளர்களின் வீட்டு எண் 0, கயா டவுனில் 3,561 வாக்காளர்களின் வீட்டு எண் 0 என பட்டியல் நீள்கிறது. அதாவது இவர்கள் அனைவருமே போலி வாக்காளர்கள் என்கின்ற னர் ஆர்.ஜே.டி. கூட்டணியினர்.
அதேபோல முஸ்லிம்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்திலிருந்துதான் அதிகளவில் வாக் காளர் நீக்கம் நடைபெற்றிருப்பதாகவும், 90 முதல் 100 வயதுக்குரியவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் ஆயிரக் கணக்கில் காணப்படுவதாகவும் புகார் கள் எழுந்துள்ளன. லாலுவின் மகனும் திகா சட்ட மன்றத் தொகுதியைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி செய்தியாளர் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சரிபார்த்து அதில் தன் பெயர் இடம்பெறாததைக் குறிப்பிட்டு, இது ஜனநாயகப் படுகொலை என குற்றம்சாட்டினார். பதிலுக்கு செய்தியாளர் சந்திப்பின்போது தேஜஸ்வி குறிப்பிட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் போலியானது என்றும், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்ப தாகவும் விளக்கமளித்தது தேர்தல் ஆணையம்.
கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1,56,91,500. பா.ஜ.க. பெற்ற ஓட்டுகள் 1,57,02,650. இரு கட்சிகளுக்கு ஓட்டு வித்தியாசம் வெறும் 0.03 சதவிகிதம். ஓட்டு எண்ணிக்கையில் சொன்னால் வெறும் 11,150 ஓட்டுகள்தான். ராகுல் சொன்ன முகவரி மாற்றம், போலி வாக்காளர்கள், படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்துவது, குறிப்பிட்ட கட்சியினருக்கு வாக்காளிப்பவர்களை பெருவாரி யாக நீக்குவது போன்றவை ஏன் பீகாரிலும் நடைபெற்றிருக்கக்கூடாது? பீகார் துணை முதல்வரே இரு தொகுதிகளில் ஓட்டளிக்கும்போது, கட்சியினர் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள் என ராஷ்டிரிய ஜனதா தளத்தினர் கேள்வி யெழுப்புகின்றனர்.
இது ஒருபக்கமென்றால், ஒடிஸாவிலும் பிஜு ஜனதா தளத்தினர் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் திட்டமிட்டு தோல்வியை நோக்கித் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஒடிஸாவில் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 147. ஆட்சியமைக்க 74 தொகுதி களில் வெற்றிபெற்றால் போதும். தேர்தலில் பிஜு ஜனதா தளம்தான் அதிகபட்ச சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதிக எண்ணிக்கையி லான வாக்குகளைப் பெற்றது. ஆனால் பா.ஜ.க.வின் வசம் ஆட்சிவந்தது. இது வினோதமாக இருக்கிறதல்லவா?
2024 சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் பெற்ற வாக்குகள் 1,01,02,454. அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 40.22%. பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 1,00,64,827. இக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 40.07% வாக்கு எண்ணிக்கையிலும், வாக்கு சதவிகிதத்திலும் அதிகம் பெற்றும் பிஜூ ஜனதா தளம், பா.ஜ.க.வைவிட 27 தொகுதிகள் குறைவாகப் பெற்றது. அதாவது பா.ஜ.க.வைவிட 37,627 வாக்குகள் ஒட்டுமொத்தமாக அதிகம்பெற்றும், தொகுதிகளை குறைவாக வென்றிருக்கிறது.
இதெல்லாம் கணக்கா?… சில தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கலாம். வெற்றி- தோல்வியை மட் டும் கணக்கிடும்போது தொகுதிகள் குறைந்திருக்க லாம் என ஒருவர் வாதிட லாம். விஷயம் அத்தோடு முடிந்துவிடவில்லை, தேர் தல் முடிந்ததும் பி.ஜே.டி. கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் சில அடிப்படையான கேள்விகளை எழுப் பினார். அதற்கான விடைகள் இன்று வரை தேர்தல் ஆணையத்தால் முறையாக அளிக் கப்படவில்லை. அவை என்னவென்று நாம் இப்போது பார்க்க லாம்.
வழக்கமாக ஒடிசா தேர்தல்களில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்குமான வித்தியாசம் 0.5% முதல் 1.5%தான் இருக்கும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்குமான வித்தியாசம் கன்னாபின்னா வென இருந்தது. சில தொகுதிகளில் 15 சதவிகிதம், சில தொகுதிகளில் 20% என ஏற்றத்தாழ்வாக இருந்தது. வாக்குப்பதிவு முடிந்த அன்று மாலை அறிவித்த வாக்குப்பதிவு சதவிகிதத்துக்கும் அன்று இரவு 11.45 மணிக்கு அறிவிக்கப்பட்ட சதவிகிதத்துக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.
குறிப்பாக 3 சதவிகிதம், 4 சதவிகிதம் எல்லாம் வாக்குகள் அதிகரித்தன. 1 லட்சம் வாக்குகள் பதி வான ஒரு தொகுதியில் 3 சதவிகித வாக்கு அதி கரிப்பு என்பது 3000 வாக்குகள் அதிகரிப்பதாகும். இந்த வாக்குப்பதிவு சதவிகித அதிகரிப்பு குறித்து நவீன் பட்நாயக் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து முறையான பதில்கள் வரவில்லை.
ஒடிசாவின் முதல்வராக இருக்கும் மோகன் சரண், கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவன்று மாலையில் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவிகிதத்துக்கும், இரு தினங்கள் கழித்து தேர்தல் ஆணையம் இறுதி வாக்குப் பதிவு சதவிகிதமாக அறிவித்ததற்குமான வித்தியாசம் 30.64% ஆக, மோகன் சரண் திட்ட மிட்டு வெற்றிபெறச் செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டுகின்றனர் பி.ஜே.டி.யினர். பி.ஜே. டி.யின் வெற்றி திட்ட மிட்டு முடக்கப்பட் டுள்ளது என்கின்றனர்.
அப்படியே கேரளா பக்கம் பார்வையைத் திருப்புவோம். இப் போது தேர்தல் முறை கேடு விவகாரத்தில் சுரேஷ்கோபி பெயரும் உருளத்தொடங்கியுள்ளது. நடிகர் சுரேஷ்கோபியின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. தேர்தலுக்காக, திருச்சூர் வீட்டுக்கு தன் ஓட்டை மாற்றியது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் ஓட்டுக்களையும் மாற்றியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அந்த 11 பேரும் திருச்சூரில் வந்து தங்கியிருந்து ஓட்டளித்துவிட்டு கிளம்பிச்சென்றுவிட்டனர். கேரளாவின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது. கேரளா வில் முதன்முறையாக பா.ஜ.க. வென்ற மக்களவைத் தொகுதி திருச்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிர தேசத்தின் வாரணாசி தொகுதியில் வாக்கு எண் ணிக்கையின்போது மோடி வெகுநேரம் பின்னடை வில் இருந்தார் என்பதை நாம் மறந்திருக்கமுடி யாது. பின் வாரணாசி தொகுதி நிலவரம் குறித்த தகவல்கள் சரிவர வரவில்லை. திடீரென மாலைப் பொழுதில் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் உஜ்வல்குமார் என்பவர், மோடி வாரணாசி தொகுதியில் தோல்வியுற்றார் எனவும், அவரை வெற்றிபெற வைக்க வாக்குகளை ஏற்பாடு செய்ததாகவும் பேசியது பரவலான கவனத்தைப் பெற்றது. ஆக, தில்லுமுல்லு ஓட்டில்தான் மோடி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் புகார் வாரணாசியையும் விட்டுவைக்கவில்லை. வாரணாசி யில் ஒரே வீட்டில் 43 பேர் தங்கியிருப்பதாகக் கூறி, அதில் தந்தை என ராம்கமல்தாஸ் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற 42 பேரில் 13 பேர் ஒரே வருடத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற பதிவு முகநூலில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. அதற்கு ஒரு பேக்ட் செக் செய்யும் தளம், ராம்கமல் தாஸ் தந்தையல்ல குரு என்றும், அது ஒரு மடம் என்றும், அவர்கள் ராம்கமல்தாஸின் சீடர்கள் என்றும் விளக்கமளித்திருந்தது. இதற்கு முந்தைய தேர்தல்களில் ராம்கமல்தாஸ் 150 சீடர்களுக்கு குருவாக இருந்தார். அப்போது அவர் 150 சீடர்களுக்கு தந்தை என்றும் கூடுதல் விளக்கம் தரப்பட்டிருந்தது.. ஆனால், அதிலும் சந்தேகம் எழுகிறது. மடத்தில் உள்ளவர்களுக்கு தேர்தலில் என்ன வேலை? மடத்தில் குரு நிரந்தரமாகவே இருக்கப்போகிறவர். அவருக்கு வாக்கு என்றால் சரி, வந்து சில ஆண்டுகளில் சென்றுவிடப்போகிற சிஷ்யர்களுக்கு எதற்கு ஓட்டு? வாரணாசியின் எத்தனை மடங்கள் தேர்தலில் வாக்களித்தன? என்ற கேள்வியெழுகிறது.
கடைசியாக ஒரு போனஸ் தகவல். 2024 மக்களவைத் தேர்தல் முடிந்ததும் தேர்தல்களுக்கான மக்கள் ஆணையம் என்ற அமைப்பு தேர்தல் முடிவுகளை அலசி ஒரு அறிக்கையளித்தது. அதில் கான்பூர் ஐ.ஐ.டி.யின் முன்னாள் இயக்கு நர் ஹரிஷ் கார்னிக், ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், முக்கிய முன்னாள் அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டிருந்தனர்.
அதன் முடிவு இதுதான். 7 தவணைகளில் நடத்தப்பட்ட 2024 தேர்தலில், வாக்குப் பதிவு முடிந்ததும் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக் கைக்கும், வாக்கெண்ணிக்கை முடிந்த வுடன் அறிவிக்கப்பட்ட வாக்கு எண் ணிக்கைக்குமான வித்தியாசம், 4.65 கோடி. அதாவது, மக்களவைத் தேர்த லிலே கள்ள ஆட்டம் நடந்திருக்கிறது என்பதுதான் அந்த அறிக்கையின் பொருள்! தன் மீதான புகார் மழைக்கு தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
______________
களைகட்டிய ஈரோடு
அறிவுத் திருவிழா!
தோழர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் இயங்கும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஒவ்வொராண் டும் புத்தகத் திருவிழா நடத்துகிறது. இது 21-வது ஆண்டு. ஆகஸ்ட் 1 முதல் 12ந் தேதி வரை 12 நாட்கள் அறிவுத் திருவிழாவாக ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெற்றது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் தமிழகத்தின் அறிவார்ந்த ஆளுமைகள் பங்கேற்ற இலக்கிய நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 240 அரங்குகளில் 150க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் பங்குபெற்றிருந்தனர். ஏறக்குறைய 6 கோடி ரூபாய் வரை புத்தக விற்பனை நடைபெற்று சாதனைபுரிந்துள்ளது.
தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு புத்தகத் திருவிழா பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள் ளது. ஒவ்வொரு ஆண்டு புத்தகத் திருவிழாவுக்காக தோழர் ஸ்டாலின் குணசேகரனும் அவரது அமைப்பினரும் வருடம் முழுக்க உழைக்கிறார்கள். இளைஞர்கள், மாணவ -மாணவியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தொழிலதி பர்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு பொது மக்களையும் புத்தக அரங்கத்திற்கு அழைத்துவருவதில் அவரது பாணியே தனி. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் திருவிழாவுக்கு வந்து சென்றுள்ளார்கள்.
-ஜீவாதங்கவேல்