அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து தடாலடி நடவடிக்கைகளை எடுத்து, உலக அளவில் பேசுபொருளாகத் தொடர்கிறார். தற்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்து, இந்தியாவோடு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளார்.
இந்தியா மீது ட்ரம்பின் கோபத்துக்கு என்னதான் காரணம்? பல்வேறு காரணங் கள் இருந்தபோதும், அமெரிக்க தரப்பில் சொல் லப்படுவதென்னவோ, ரஷ்யா -உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும்விதமாக அமெரிக்காவும், ஐரோப் பிய நாடுகளும் ரஷ்யா விலிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்துவ தாக அறிவித்தன. அப்படி யான சூழலில், ரஷ்யாவில் உற்பத்தியாகி தேக்க மடைந்த பெட்ரோலிய கச்சா எண்ணெயை பெரு மளவு இந்தியா வாங்கி யது. குறிப்பாக, ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கிய கச்சா எண் ணெயை, இந்தியாவில் சுத்திகரித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்து பெருத்த லாப மீட்டின.
இன்னும் சொல்லப் போனால், இந்த விற்பனை யில் இந்திய மக்களுக்கு எவ்விதத்திலும் பல னில்லை. ஏற்றுமதியில் லாபமீட்டுவதை மட் டுமே குறியாக வைத் திருந்தது ரிலையன்ஸ் நிறுவனம். இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெட்ரோலை வாங்குவதால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தும் பலனில் லாமல் போனதால் கடுப் பான அமெரிக்கா, இந்தியாவின் மீது வர்த் தகப் போரைத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்த ட்ரம்ப், அதனை இரு மடங்காக்கி, வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 50% வரி வசூலிக்கப்படுமென்று அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியத் தொழில்முனைவோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து பெருமளவு பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்கியதில் இந்தியாவைவிட சீனாதான் முன்னிலை வகிக்கிறது. அப்படியிருக் கும்போது அமெரிக்காவுடன் நட்பு பாராட்டிவரும் இந்தியா மீது மட்டும் ஏன் ட்ரம்புக்கு இவ்வளவு வன்மம்?
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அமெரிக்க நாணயமான டாலர்தான் உலகை ஆள வேண்டும். உலக வர்த்தகமனைத்தும் டாலர் மூலமாகத்தான் நடக்கவேண்டுமென்று சர்வாதிகாரத்தனத்துடன் எதிர்பார்க்கிறது. தற்போதைய சூழலில், உலக வர்த்தகத்தில் 50% அளவுக்கு அமெரிக்க டாலரில்தான் வர்த்தகம் நடைபெறுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராகத்தான் ஐரோப்பிய நாடுகள் யூரோவை அறிமுகப்படுத்தின. யூரோவுக் கும் டாலருக்குமான போட்டி நீண்ட காலமாகத் தொடரும் நிலையில்... இந்தியா அங்கம்வகிக்கும் ப்ரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பும், அமெரிக்காவின் சர்வாதிகாரத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது. இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா சீனா, தென்அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான், எகிப்து, இந்தோனேஷியா, யு.ஏ.இ., எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டுமென்றும், தங்கள் சொந்த நாணயத்தையே பயன்படுத்த வேண்டுமென்றும் ஆலோசித்தன.
இதைக் கேட்டதுமே கோபத்தில் கொந் தளித்த ட்ரம்ப், "ப்ரிக்ஸ் நாடுகள் அனைத்துக்கு 100% வரி விதிப்பேன்' என்று பரபரப்பைக் கிளப்பினார். மேலும், "டாலரைப் புறக்கணித்தால் இந்த நாடுகளோடு அமெரிக்கா வர்த்தகத்தை துண்டித்துக் கொள்ளும்' என்றும் எச்சரித்தார். இத்தனைக்கும், ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் முடிவை இந்தியா முழுமையாக ஆதரிக்கவுமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவை பகைத்துக்கொள்ள வேண்டாமென்ற நிலைப்பாட் டில்தான் இருக்கிறது.
அதேபோல், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக் கும் இடைப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில்தான் பெரும்பாலும் அமெரிக்கா இருக்கும். சமீபத்தில் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் போர் சில நாட்களிலேயே சட்டென முடிவுக்கு வந்ததன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்த போரை நான்தான் தடுத்து நிறுத்தினேன். நான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். நீங்கள் போரை தொடர்ந்தால் உங்களோடு இனி வர்த்தகம் செய்ய மாட்டோ மென்று மிரட்டியதால்தான் உடனடியாக இரு வரும் வழிக்கு வந்தார்கள்' என, ஒருமுறையல்ல, இருமுறையல்ல... 24 முறை ட்ரம்ப் சொல்லிவிட் டார். ஆனால் இந்தியத் தரப்பிலோ, அமெரிக்கா வின் தலையீடு இல்லையென்று மறைமுகமாக மறுக்கப்பட்டது. இதுவும் ட்ரம்புக்கு இந்தியா மீது கோபத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், அமெரிக்காவின் எதிர்ப்பு நாடான சீனாவோடு இணக்கமான போக்கை கடைப்பிடிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லைப் பிரச்சனைகள் பெரிதாக இருக்கும் சூழலில்... சீனாவோடு இணக்கமாக இருந்து, பேச்சு வார்த்தை மூலமாக அனைத்தையும் சரிசெய்யும் நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கோடு பிரதமர் மோடி சந்திக்க முடி வெடுத்தார். சந்திப்பின்போது, இந்தியாவிலிருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை, கைலாஷ் மான சரோவர் யாத்திரை உள் ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக் கப்படவுள்ளன. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவுக்கு மோடி செல்வ தாக அறிவிப்பு வந்ததுமே ட்ரம்ப் கடுப்பானார். ஆக, ரஷ்யாவிட மிருந்து பெட்ரோல் வாங்கியதுதான் காரணமென்று அமெ ரிக்கா கூறினாலும், அதுமட்டுமே காரணமில்லையென்று தெரிகிறது.
ட்ரம்ப் விதித்துள்ள 50% வரி, இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பை ஏற்படுத்துமென்று பிரபல பொருளாதார நிபுணரும், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவரு மான பேராசிரியர் நாகநாதனிடம் கேட்டோம்.
"அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50% வரி விதித் திருப்பதால் இந்தியாவிலுள்ள ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, மின்னணு, தோல் உற்பத்தி உள்ளிட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். இந்தியாவிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும். இந்நிறுவனங்கள்தான் இந்திய பொருளாதார வளர்ச்சியில் 32% பங்களிப்பைத் தருகின்றன. எனவே இந்நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது 6.4% ஆக இருக்கிறது. அமெரிக்காவின் அபரிமித வரி விதிப்பானது, இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4% அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதியைப் பொறுத்தவரை, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சராசரியாக 17% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதேவேளை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படுவதால், இரண்டுக்குமான 33% இடைவெளியானது, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வருமானத்தில் பல லட்சம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
மோடி ஆட்சியின் மோச மான நிதி நிர்வாகத்தால், மன்மோகன்சிங் காலத் தில் பெறப்பட்ட கடனை விட, மோடியின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் 100% அதிக அளவு கடன் கள் வாங்கப்பட்டுள்ளன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்கனவே வீழ்ச்சியடைந்த நிலையில்... அது மேலும் அதிகரிக்கக்கூடும். இதன் பின்விளைவாக வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்தியாவில் தற்போது 52% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்ற சூழலில், இது இன்னும் மோசமாகக் கூடும். மோடி 2014, 2019ஆம் ஆண்டுகளில் தேர்தல் பிரச்சாரத்தில் "ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்' என்று சொன்ன தையே தற்போதுவரை நிறைவேற்றவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலாததால், காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்தியா வின் அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட சிறிய நாடுகளோடும் இந்தியாவுக்கு இணக்கமான சூழல் இல்லை. அதேபோல், வெளிநாட்டிலிருந்து செய்யப்பட்ட முதலீடுகள், கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி அளவுக்கு விலக்கப்பட்டுள்ளன. ஆக, இந்தியா தற்போது பல்முனைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்கா நம் மீது வர்த்தகப் போர் தொடுத்திருப்பதை மோடி அறிவிக்க வேண்டும். அதை துணிவோடு எதிர்கொள்வோம் என்று சொல்லவேண்டும். ஆனால் மோடிக்கு பதிலாக, காங்கிரஸின் சசிதரூர் எம்.பி.தான் பேசுகிறார். நாம் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்க வேண்டுமென்று சொல்கிறார். ஆனால் மோடியோ மவுனம் காக்கிறார். இவ்வளவு காலமாக மொழிக்கு எதிரான அரசியல், தேசிய கல்விக்கொள்கை, மாட்டுக்கறி அரசியல் என வெற்று முழக்கங்களைத்தான் செய்துவருகிறார். தற்போது, இந்தியாவின் அரசாட்சி உரிமையையே அமெரிக்கா அசிங் கப்படுத்தியுள்ளது. இதனை, இந்திய பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்'' என்றார்.
"அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா துணிந்து நடவடிக்கை எடுக்குமா?' என இந்திய ஏற்றுமதி யாளர்கள் எதிர் பார்ப்பிலிருக்கிறார்கள்!