லகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கையில், மனித உரிமைப் போராளிகளை சிறைச் சித்திரவதையில் தள்ளுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறது மோடி அரசு. இதில், முனைவர் ஆனந்த் தெல்டும்டே, மனித உரிமைப் போராளியும், பத்திரிகையாளரு மான கவுதம் நவலகா மீதான கைது நடவடிக்கை பொதுத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

modi

2018, ஜனவரி 01ந்தேதி, புனேவின் பீமா-கோரேகான் பகுதியில், மராத்தா மற்றும் தலித் மக்களுக்கிடையே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்துக்கும், அதற்கு முந்தைய நாள் அதே பகுதியில் இடதுசாரிகள் ஒன்றிணைந்து நடத்திய எல்கர் பரிஷத்’ மாநாட்டிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறியது புனே காவல்துறை. ஜூன் மாதம் சிலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட கடிதத்தில், "ராஜீவ்காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்லவேண்டும்' என்று மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறை சொன்னது.

இதைத் தொடர்ந்து, கவிஞர் வரவரராவ், சமூக செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரய்ரா, வெர்னன் கோன்ஸ்லேவ்ஸ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 18 மாதங்களாக பிணையில்லாமல் தனிமை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜெயில்கள் அதன் பரவலுக்கான மையமாகி விடக்கூடாது எனக்கூறி விசாரணைக் கைதிகள், குற்றவாளிகளை பிணையில் விடச் சொல்லி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதே கோரிக்கையுடன் சிறையிலிருக்கும் சமூக செயற் பாட்டாளர்களை விடுவிக்கக்கோரி வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், எழுத்தாளர் அருந்ததிராய் முன்வைத்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டு, ஆனந்த் தெல்டும்டேவை யும், கவுதம் நவலகாவையும் தேசிய விசாரணை நிறுவனமான என்.ஐ.ஏ.விடம் சரணடைய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்தால் பிணை கிடைக்காது. விசாரணை செய்யா மலே கால வரம்பின்றி சிறையில் அடைக் கலாம். குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். பத்திரிகையாளர்களோ, சாதாரண மக்களோ விசாரணையை பார்க்க முடியாது. இப்படியொரு மிகக்கொடூர சட்டத்தின் கீழ், இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளரையும், முன்னணி மனித உரிமைப் போராளியையும் அடைக்கவேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ஏப்ரல் 14ந்தேதி மும்பை என்.ஐ.ஏ.வில் சரணடைவதற்கு முன்பாக, ஓர் மனம்திறந்த கடிதத்தை ஆனந்த் தெல்டும்டே வெளியிட்டிருந்தார். "2018, ஆகஸ்ட் மாதம் கோவாவில் இருக்கும் தனது வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் இருந்தே தனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். காவல்துறை கைப்பற்றியதாகச் சொல்லும் கடிதங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் என்னை சம்மந்தப்படுத்தியதாக சொல்கிறார்கள். ஆனந்த் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமே எனக்கெதிராக அவர்கள் முன்வைக்கும் சாட்சியம். இந்தியாவில் எத்தனையோ ஆனந்துகள் இருக்கிறார்கள். சாதாரண வழக்காகக்கூட செல்லுபடியாகாத வழக்கில் என்னை உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்கிறார்கள். நாளை உங்களை நெருங்குவதற்கு முன் விழித்துக்கொள்ளுங்கள்' என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்ஸ்டிட்யூட் ஆஃப் கான்ஃப்ளிக்ட் மேனேஜ்மேண்டைச் சேர்ந்த அஜய் சகானி எனும் நிபுணர் காவல்துறை முன்வைக்கும் கடிதங்கள் போலியானவை என்று கூறியதை நீதிமன்றம் கண்டுகொள்ளாதது வியப்பிற்குரியது ஆனந்த் தெல்டும்டே, சட்டமேதை அம்பேத்கரின் பேத்தியின் கணவர். அவரை அம்பேத்கரின் பிறந்த தினத்திலேயே உபா சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதில், சங்பரிவாரின் சதி அடங்கியிருப்பதாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் குற்றம்சாட்டி இருக்கிறார். “தீவிர அம்பேத்கரியவாதியான ஆனந்த், தொடர்ந்து சமூக, பொருளாதார காரணிகளின் மூலம் இந்துத்வ சித்தாந்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தவர். குறிப்பாக, 2018ல் அவர் எழுதிய சாதியக்குடியரசு நூல், சங்பரிவார் அமைப்புகளை வெகுவாக வெறுப்பேற்றியதுதான், இந்த அதீத நடவடிக்கைக்குக் காரணம்’என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

Advertisment

vv

இதே வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும் மனிதஉரிமை செயற்பாட்டாளர் கவுதம் நவலகா, “இந்த வழக்கில் என்னையும், என்னைப் போலவே கைதாகி இருப்பவர்களையும் துரிதமாக விசாரித்து விடுவிப்பார்கள் என்பது மட்டுமே எஞ்சியிருக்கும் நம்பிக்கை என்று விரக்தியான குரலில் சொல்லிவிட்டு சென்றி ருக்கிறார். இதற்கிடையே, ஊரடங்கு சமயத்தில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மார்ச் 25ந்தேதி நடைபெற்ற ராமநவமி கூட்டம் தொடர்பாக செய்தி வெளி யிட்டதற்காக, தி வயர் இணைய இதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது அம்மாநில அரசு.

தடா, பொடா போன்ற கொடூர உபா சட்டத்தை மனித உரிமையாளர்கள் மீது பாய்ச்சுவது கொரோனாவை விட கொடூரமானது என எச்சரிக்கை மணி அடிக் கிறார்கள் ஜனநாயகவாதிகள்.

- ச.ப.மதிவாணன்