தீவிரமா பா.ஜ.க. எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க. பா.ஜ.க.வுடன் இதுவரை கூட்டணி வைக்காத நேரெதிர் கொள்கை கொண்ட காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகளும், பா.ஜ.க. எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் வி.சி.க.வும் தி.மு.க. கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் சூழலில் பா.ஜ.க. எதிர்ப்பாளரான குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்தால் அதற்கு யார் தலைமை?

அதை எல்லோருமாக சேர்ந்துதான் முடிவுசெய்ய வேண்டும். நாம் மோசமான கட்டத்தில் இருக்கிறோம். 2019-ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், நம் அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக சிதைந்துபோகும். அதனால்தான் பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைக்க சென்னை வந்தேன்.

jignesh

Advertisment

காங்கிரஸை ஆதரிக்கும் கட்சிகளே பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் முரண்பாடாக இருக்கின்றனவே?

மெகா கூட்டணியை தேர்தலுக்கு முன்பே அமைக்கமுடியாமல் போகலாம். ஆனால், மாநில அளவிலான கூட்டணி என்பது ரொம்பவும் முக்கியமானது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திப்பதால் புரட்சி நடக்கப்போகிறது என்று சொல்லவில்லை. அதேசமயம், இந்த தேசம் முழுமையாக சிதைந்து போகாமல் பார்த்துக்கொள்ள அப்படியொரு கூட்டணி அவசியம் என்கிறேன்.

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அ.தி.மு.க. -பா.ஜ.க. இடையே சில ஆண்டுகளாக நடந்துவரும் மேட்ச்-பிக்ஸிங் பற்றிதான் எப்போதும் பேச்சாக இருக்கிறது. எல்லோரிடமும், குறிப்பாக இளைஞர்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பெரியாரின் கொள்கைகளை நாம் கொண்டாட வேண்டும். கோல்வாக்கர், சாவர்க்கரின் வழியைப் பின்பற்றினால் நாசமாய்ப் போவோம். இந்தியாவின் அழகே பன்முகத்தன்மைதான். அதன்மீதுதான் தாக்குதல் நடக்கிறது.

புலவாமா தாக்குதலுக்குப் பிறகு வலிமையான ஒருவர்தான் பிரதமர் ஆகவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களே?

மோடி ஒன்றும் வலிமையானவர் கிடையாது, அவர் பேரழிவுக்காரர். ஒருவேளை வலிமையானவராக இருந்திருந்தால் பதான்கோட், உரி, புலவாமா தாக்குதல்கள் நடந்திருக்காது. மோடி தேசத்தின் உணர்வுகளோடு விளையாடியபடி, மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்திய விமானப்படையின் பதிலடித் தாக்குதலை எதிர்க்கட்சிகளும் பாராட்டுகின்றனவே?

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதேசமயம், இந்திய குடிமக்கள் என்கிற முறையில் மற்ற பிரச்சனைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். இந்திய ராணுவப் படையினரின் நீண்டகாலக் கோரிக்கையான ‘ஒரு ரேங்க் ஒரு பென்ஷன்’ விவகாரத்தை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு புறம்போக்கு நிலங்களை வழங்க குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதேசமயம், அம்பானியோ, அதானியோ, வேதாந்தாவோ கேட்டிருந்தால் நிச்சயமாக நிலம் கிடைத்துவிடும்.

தேசபக்திதானே தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது?

பொதுசுகாதாரம், வேலையின்மை, கல்வி போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கும் தேசபக்தி இருக்கிறதே. பா.ஜ.க.வினர் யார், தேசபக்திக்கான சான்றிதழ் வழங்குதற்கு?

துப்புரவுப் பணியாளர்களின் கால்களை மோடி கழுவியதைப் பார்த்தீர்களா?

இது போலித்தனத்தின் உச்சகட்டம். மோடி மனுதர்மக் கொள்கைகளை தீவிரமாக நம்பக்கூடியவர். குஜராத் முதல்வராக இருந்தபோது கையால் மலம் அள்ளும் முறையையும், தீண்டாமையையும் கண்டு மவுனம் காத்தவர். தலித்துகளை இந்துத்வா குண்டர்கள் தாக்கியபோதும் தட்டிக் கேட்காதவர். லட்சக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். மலக்குழி மரணங்களைத் தடுக்காமல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி.

தலித் செயற்பாட்டாளராக இருப்பதே சாதியவாதம்தான் என்ற கருத்து நிலவுகிறதே?

ஒடுக்குமுறை, தீண்டாமை, வன்முறை போன்ற கொடுமைகள் நிகழும்போது தலித்துகள் அமைதியாக இருக்க வேண்டுமா? அல்லது அதை எதிர்த்து நிற்கவேண்டுமா? அப்படி எதிர்த்து நின்றால்… வீதிக்கு வந்து போராடினால் அது சாதியமாகுமா? சாதிகள், அதன் படிநிலைகள், உட்பிரிவுகள் என எல்லாமும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சாதியை அழித்தொழிக்காமல் புதிய இந்தியா பிறக்காது!

-சந்திப்பு : பெலிக்ஸ்

தொகுப்பு : -ச.ப.மதிவாணன்