கொரோனா பரவலைத் தடுப்பதில் மத்திய அரசாங்கம் தவறிவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிரான கண்டனங்களை வீசிவருகின்றன. இதுகுறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய பிரதமர் மோடி, ‘""நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிகையையும் அதிகரிக்கச் செய்திருக்கிறோம். ஆக்சிஜனுக்கும் தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரச் சூழல் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்''‘என்று உறுதியளித்தார். ஆனால் நிலவரமோ அவர் சொன்னதுபோல இல்லை.

modifailure

கொரோனா தாக்குதலால் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாலும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாகக் கவனித்துவருகிற ராகுல்காந்தி, ‘""கொரோனா வைரஸால் மட்டுமல்ல; மோடி அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் குறைவதற்கு வேண்டுமானால் கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், மருத்துவமனைகளில் பலரும் இறந்து போவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும், தேவையான அளவில் படுக்கைகள் இல்லாததும்தான் காரணம். உங்களால்தான் இது ஏற்பட்டுக்கொண்டி ருக்கிறது'' என்று மோடிக்கு எதிராக சாட்டையைச் சுழற்றியுள்ளார் ராகுல்.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஓர் அவசர ஆலோசனையை நடத்தினார் பிரதமர் மோடி. அதில், ஆக்சிஜனின் உற்பத்தித்திறன், தற்போதைய தேவைகள், மருத்துவமனைகளில் ஏன் தட்டுப்பாடு ஏற்படுகிறது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளார்.

Advertisment

modi-failure

இதுகுறித்து டெல்லியிலுள்ள சோர்ஸ்களிடம் விசாரித்தபோது,’""ராகுல் வீசும் குற்றச்சாட்டுகள் மோடியின் இமேஜை உடைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான் ஒரு அவசர மீட்டிங்கை அவர் நடத்தினார். ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை பற்றித்தான் அதிகமாக கேள்விகள் எழுப்பியிருந்தார் மோடி. அப்போது, விளக்கமளித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன், ’பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி வேகமாக அதிகரித்ததால்தான் ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனாலும் நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. நாடு முழுவதும் நம்முடைய ஆக்சிஜன் உற்பத்தித்திறன் 7,500 மெட்ரிக் டன். ஆனால், இப்போதைய சூழலில் நமக்கான ஆக்சிஜன் தேவை 6,620 மெட்ரிக் டன் என்கிற அளவில்தான் இருக்கிறது. தேவையைவிட உற்பத்தி அதிகமாகத்தான் உள்ளது''’ என சொல்லியிருக்கிறார்.

"அப்படின்னா, ஆக்சிஜன் கிடைக்கவில்லை என அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் மத்திய அரசுக்கு கடிதம் ஏன் எழுதுகின்றன?' என மோடி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ஹர்ஸவர்தன், ’""மாநில அரசுகளிடமிருந்து ஒரே சமயத்தில் ஆக்சிஜன் தேவையை எழுதி, "உடனடியாக அனுப்புங்கள்' என கோரிக்கை வைக்கிறபோது, ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதம்தான் அடிப்படை காரணம். மற்றபடி இப்போதைய சூழலில் பற்றாக்குறையோ, தட்டுப்பாடோ இல்லை. அதேசமயம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால் இனிவரும் நாட்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். அதனால், அத்தியாவசிய தொழில்களைத் தவிர மற்ற தொழில்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்சிஜனை நிறுத்திவிட்டு, அவைகளை கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கிறோம். தவிர, உற்பத்தியை உயர்த்தவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் கால தாமதத்தை தவிர்க்க முடியும். தேவையின்றி அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ்''’ என்றிருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட மோடி, "மீட்டிங்கின் விவாதத்தை வைத்தே காங்கிரஸுக்கு பதிலடித் தந்து வருகிறார்' என்று விவரித்தார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.

Advertisment

modi-failure

இதற்கிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதை சுட்டிக்காட்டி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ""ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. பிரச்சினையின் தீவிரத்தையும் உண்மையையும் மத்திய அரசு உணரவேண்டும். மக்கள் உயிர்மீது அரசுக்கு அக்கறையில்லையா?''‘என்று கடுமைகாட்டினார்கள் நீதிபதிகள். அப்போது மத்திய அரசுக்கு இருக்கும் சிக்கல்களை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா சொன்னபோது, அதில் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ""ஆக்சிஜன் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள்; கடன் வாங்குங்கள் அல்லது திருடுங்கள். ஆக்சிஜன் இல்லைன்னு ஒரு உயிர்கூட பலியாகக்கூடாது'' என கடுமை காட்டினார்கள்.

நீதிபதிகளின் காட்டத்தில் மத்திய அரசின் சப்தநாடியும் ஒடுங்கியிருந்தது. டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்த கடுமையான விமர்சனங்கள் நாடுமுழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்த, பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு அவசரம் அவசரமாக விவாதித்தனர் ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்கள். இதனையடுத்து, "அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருப்பதாக பொது வெளியில் பகிரங்கப்படுத்தக்கூடாது; தேவைகளை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கும் வகையில் கருத்துக் களைப் பகிர வேண்டாம்' என மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது மத்திய சுகாதாரத்துறை.

டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளி லும் கொரோனா நோயாளிகளே இருக்கின்றனர். ஆனால், போதுமான படுக்கைகள் இல்லாததால் மருத்துவ மனை வராண்டாக்களிலும், வளாகத்திலுள்ள மர நிழல்களிலும், சாலைகளிலிலும் வரிசை, வரிசையாக உயிரை பிடித்துக்கொண்டு நிற்கும் அவலம் உருவாகிவருகிறது. பல மருத்துவமனைகளில், ஆக்சிஜன் இல்லாததால் "நோயாளிகள் யாரும் இங்கு வரவேண்டாம்' என பேனர்கள் வைக்குமளவுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால், ஆக்சிஜனை நிரப்புவதற்காக சிலிண்டர்களை வைத்துகொண்டு மக்கள் நிற்கும் வரிசைகள் நீண்டுவருகின்றன.

கங்காராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 510 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 142 பேருக்கு உயர்அழுத்த ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், "தொடர்ச்சியாக கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகள் உயிருக்குப் போராடுகிறார்கள்' என எச்சரிக்கை செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து ஒரு டேங்கர் ஆக்சிஜனை கங்கா ராம் மருத்துவமனைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வேகமான முயற்சியில் அனுப்பி வைக்கப் பட்டது. அந்த டேங்கர்லாரி மருத்துவமனைக்கு வருவதற் குள், "ஆக்சிஜன் இல்லாமல் 25 பேர் பலியாகியிருக் கிறார்கள். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகக் கூடும்' என பரவிய தகவல்களால் நோயாளிகளிடமும் அவர்களது உறவுகளிடமும் பயமும் பதட்டமும் தொற்றிக் கொண்டது. டெல்லியில் நோயாளிகளை ஏற்றிவந்த ஆம்புலனஸ்கள் ஒவ்வொரு மருத் துவமனைகளிலும் கியூவில் நிற்கும் அவலங்களையும் பார்க்க முடிகிறது.

modi-failure

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ""ஆக்சிஜனுக்காக பல மாநிலங்களின் உதவியை நாங்கள் நம்பியிருக்கிறோம். ஆனால், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்சிஜன் டேங்கர்களை பல மாநிலங்கள் தடுக்கின்றன. இதனை கவனத்தில்கொண்டு கடும் நடவடிக்கை எடுத்து மத்திய அரசு, டெல்லிக்கு உதவ முன்வர வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் பேரழிவு ஏற்படும்'' என்று மோடி அரசாங்கத்தை எச்சரித்திருக்கிறார் கெஜ்ரிவால். ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில் தான்... மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடுப்பூசியின் புதிய கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

இதுகுறித்து மூத்த தலைவர்களுடன் விவாதித்து விட்டு பிரதமர் மோடிக்கு காட்டமாக கடிதம் எழுதியுள்ள சோனியாகாந்தி, ""அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தவேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடுப்பூசியின் புதிய தாராளமயக் கொள்கை. தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலையை உறுதிப்படுத்துவதைத்தான் எவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், ஒரே மருந்துக்கு 3 விதமான விலைகளை நிர்ணயிப்பது எதற்கு? மக்களின் துயரங்களிலிருந்து லாபம் சம்பாதிக்க மத்திய அரசால் எப்படி அனுமதிக்க முடிகிறது? மத்திய அரசுக்கு தடுப்பூசி நிறுவனங்கள் கொடுக்கும் 50 சதவீத மருந்துகளில், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும். இத்தகைய விவகாரங்களில் பிரதமர் தலையிட்டு, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச தடுப்பூசியை உறுதிசெய்ய வேண்டும்''‘என்று காங்கிரசின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் சோனியாகாந்தி.

கொரோனாவைக் கட்டுப் படுத்துவதில் தவறியுள்ள பிரதமர் மோடிக்கு, தற்போது அதிகரித்து வரும் பிரச்சினைகள் தலைவலியை அதிகப்படுத்தியிருக்கிறது.