மோடி தலைமையிலான பா.ஜ.க. இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் பலத்தோடு வெற்றி பெற்றதிலிருந்தே, பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸை பலவீனப் படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியது. 2019 ஆகஸ்ட் மாதத்தில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம் பரத்தை சி.பி.ஐ. நள்ளிரவில் கைது செய்தது. அப்போது அதனை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டித்தன. அடுத்ததாக, தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கை தூசிதட்டி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகச்செய்து அலைக்கழிக்கச் செய்துவருகிறது. பா.ஜ.க. தனது வளர்ச்சிக்காக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை தன் கைப்பாவையாகக் கொண்டு காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளை மிரட்டியும், உடைத்தும் வருகிறது.
டெல்லி
கூடிய விரைவில் குஜராத் மாநிலத் தில் தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கே ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வுக்கு சவாலான கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்து வருகிறது. தனது சொந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி மக்கள் செல்வாக்கோடு வளர்வதை கவுரவப் பிரச்சனையாகப் பார்க்கிறார் பிரதமர் மோடி. எனவே சி.பி.ஐ. மூலமாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு. மதுபான ஆயத்தீர்வை கொள்கையை உருவாக்கியதிலும், அமல்படுத்தியதிலும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி, மணீஷ் சிசோடியாவின் இல்லம், ஆயத்தீர்வை முன்னாள் ஆணைய ரின் வீடு உள்பட, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மகா ராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரபிரதேச மாநிலங்களிலுள்ள 21 இடங்களில் சி.பி.ஐ. அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது. மதுபான உரிமம் பெற்ற சமீர் மகேந்துரு என்ற தொழிலதிபரிடமிருந்து மணீஷ் சிசோடியாவுக்கு நண்பரான தினேஷ் அரோரா என்பவர் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மணீஷ் சிசோடியா, "கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் டெல்லி அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. கல்வித்துறையின் செயல்பாடுகளுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பொறுக்காமல் இந்த சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்படுகிறது. நான் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தால் என்மீதான சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் நடவடிக் கைகளைக் கைவிடுவதாக பா.ஜ.க. வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது'' என்றார். தற்போது, மணீஷ் சிசோடி யாவுக்கு எதி ராக சி.பி.ஐ. லுக் அவுட் நோட் டீஸ் அனுப்பி யுள்ளது. அதற் கும், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று சிசோடியா பதிலடி தந்துள்ளார். ஆம் ஆத்மிக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகத்தை, அனைத்து எதிர்க்கட்சியினரும் கண்டித்துள்ளனர்.
பீகார்
இதேபோல் பீகாரில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து முதல்வர் நிதிஷ்குமார் விலகிவந்து, தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி, பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நாளில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி.க்களுக்குச் சொந்தமான 25 இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடைபெற்றது. இதுகுறித்து ஆர்.ஜே.டி. கட்சி தரப்பில், "லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது முறைகேடு நடந்ததாகக்கூறி 13 ஆண்டு களுக்குப் பிறகு சி.பி.ஐ. சோதனை நடத்த வேண்டும் என்றால், அதில் உள்ள நோக்கத்தை நீங்களே புரிந்து கொள்ளலாம். லாலு குடும்பத்தினர் பணிந்து பயப்பட மாட்டார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட் டர்ஜி கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாகக்கூறி அவரது வீட்டிலும், அவரது உதவியாளர் வீட்டிலும் கடந்த ஜூலை மாதத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. அப்போது முறைகேட்டில் தொடர்புடைய 20 கோடி ரூபாயைக் கைப்பற்றியதாகக்கூறி அமைச்சரைக் கைது செய்தது சி.பி.ஐ.. இதற்கு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட சில அமைப்புகளை கைக்குள் வைத்துக்கொண்டு மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதே பா.ஜ.க.வுக்கு வாடிக்கையாகிவிட்டது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். இதேபோல் கடந்த ஆண்டில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களான ஃபிர்ஹாத் ஹக்கிம், மதன் மித்ரா, சுப்ரதா முகர்ஜி ஆகி யோரை சி.பி.ஐ. கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டில் ஹேமந்த்சோரன் தலைமை யிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கே, கடந்த மே மாதத்தில், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பாண்டு டிர்கியின் வீட்டில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், லோக்பால் அமைப்பு, சிபு சோரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பதாகவும், விசாரணைக்கு ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான டெல்லியிலுள்ள வீடுகளில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில், கடந்த 2020 அக்டோபர் மாதத்தில், அவர் சட்டவிரோதமாக பணம் சேர்த்ததாகக்கூறி சி.பி.ஐ. யும் அவரது வீடு மற்றும் அவரது சகோதரரின் வீடு களிலும் சோதனை நடத் தியது. கர்நாடக காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இந்த ரெய்டு பார்க்கப்பட்டது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமை யிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, அதனை உடைப்பதற்காக, துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருக்கு நெருக்கமான புனேயைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்களின்மீது சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின், கடந்த 2021 நவம்பரில், அஜித் பவாரின் சகோதரிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பா.ஜ.க. தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும், இதற்கு நாங்கள் பயப்படமாட்டோம் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கைப்பாவையாக அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலிலும் சரி, மத்திய பா.ஜ.க. அரசு தனது இஷ்டத்துக்கு ரெய்டு விட்டுவருகிறது. கடந்த 2016 டிசம்பரில் தமிழக அரசின் தலைமைச் செயலகத் திலேயே வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி புது வரலாறு படைத்தனர். அதற்கடுத்து குட்கா ஊழல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக சி.பி.ஐ. ரெய்டு அவ்வப்போது நடத்தப் பட்டு, அ.தி.மு.க.வை தனது கட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டது. தற்போதுகூட எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் செய்யா துரையின் அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. அதற்கு எதிராக அ.தி.மு.க. மூச்சுகூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இந்தியா முழுக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் அதி தீவிரமாகச் செயல்படும் பா.ஜ.க.வின் போக்குக்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பினைத் தெரிவித்துவருகிறார்கள். இத்தகைய ரெய்டுகளைத் தாண்டி குதிரை பேரத்தின் மூலம் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதிலும் பா.ஜ.க. ஜனநாயகச் சீரழிவைச் செய்துவருகிறது. சமீபத்தில் டெல்லியிலுள்ள 40 எம்..எல். ஏ.க்களுக்கு தலா 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக கெஜ்ரிவால் கூறிய குற்றச் சாட்டுகளே சாட்சி!
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரத்துடன், குற்றம் யார் செய்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது, எந்த கட்சி தங்களுக்கு சவாலாக உருவெடுக்கிறதோ, அந்த கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காக, ஒன்றிய அரசு கைகாட்டுவோர் மீது மட்டுமே பாயக்கூடிய ஏவலர்களாக உருமாறியிருப்பது தான் இங்கே சிக்கலே! இதனால் இங்கே ஜனநாயகமென்பது சர்வாதிகாரமாக வெகுவேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு திருந்த வேண்டும்… அல்லது மக்கள் திருத்த வேண்டும்! இல்லையேல் ஜனநாயகம் என்பதும் தேர்தல் என்பதும் நகைப்புக்குரிய வார்த்தைகளாகி விடும்!