பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தி.மு.க. ஆட்சியில் ஓராண்டுக்குள் மின்வெட்டு பிரச்சனைகள் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க, ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்குத் தர வேண்டிய மின்சாரம், நிலக்கரி பற்றிய சர்ச்சையும் எழுந்துள்ளது.
வியாபார நிறுவனமாக மாறிவிட்ட வாரியம்!
தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில் 2 கோடியே 97 லட்சம் மின் இணைப்புகள் இருக்கின்றன. இதில் 1 லட்சம் மின் இணைப்புகள் கடந்த 8 மாதங்களில் தி.மு.க. அரசு கொடுத்தவை. தமிழக எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டி லுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம்தான் மொத்த மின்சப்ளை. தற்போது தமிழகத்திற்கான மின்தேவை ஒருநாளைக்கு 17,000 மெகாவாட். கிடைப்பதோ 15,500 மெகாவாட். பற்றாக்குறை 1,500 மெகாவாட். மக்களுக்கான சேவை நிறுவனமாக 1957-ல் தொடங்கப்பட்ட இந்த வாரியம், கடந்த 10 ஆண்டுகாலத்தில் வியாபார நிறுவனமாக மாறிவிட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒன்றிய அரசு உருவாக்கியதால் ஏற்பட்ட விளைவு இது. இதனால் ஏற்படும் கடன் சுமைகள் வாரியத்தின் தலையிலும் மக்கள் தலையிலும் விழுகின்றன.
வாரியத்தின் மின் ஆதாரமும் ஊழலும்!
தேவையான மின் விநியோகத்தை வழங்க, 30 சதவீதம் சொந்த உற்பத்தியிலும், 30 சதவீதம் மத்திய மின்தொகுப்பி லிருந்தும் கிடைக்கின்றன. மீதம் 40 சதவீதம் தனியாரிட மிருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதான் ஊழல்களுக்கும் கமிஷனுக்கும் வாய்க்கால். தனியார் நிறுவனங்கள் டிமாண்டுகளுக்கேற்ப விலையை அதிகப்படுத்தி விடுகின்றன. ஒரு யூனிட் மின்சாரத்தை தயாரிக்க 2 ரூபாய் 98 காசுகள் போதும். யூனிட்டிற்கு 1 ரூபாய் லாபம் வைத்தால் கூட 3 ரூபாய் 98 காசுகளுக்கு விற்கமுடியும். ஆனால், தனியார் நிறுவனங்களிடமிருந்து 12 ரூபாய் 77 காசுகள் வரை கூடுதல் விலையில் ஒரு யூனிட் மின்சாரம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது. சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க ஆர்வம் காட்டாத முந்தைய அ.தி.மு.க. அரசு, தனியாரிடம் வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இதனால் ஊழல்களும் கமிஷன்களும் கடந்த ஆட்சியில் பல்கிப் பெருகின.
கடன்களில் தள்ளாடும் வாரியம்!
தமிழக மின்வாரியம் இன்றைய நிலையில் சுமார் 1,80,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. தனியாரிடம் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதாவின் 2001 ஆட்சிக் காலத்தில்தான் விதை போடப்பட்டது. அன்றைய கடன் சுமை 4,800 கோடி. இன்றைக்கு 1,80,000 கோடியாக வளர்ந்திருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்துறை பொறி யாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி, ’"தனியாரிடமிருந்து 40 சதவீதம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம். இதற்காக நீண்டகால ஒப்பந்தம், குறுகியகால ஒப்பந்தம், மாத ஒப்பந்தம், தினசரி ஒப்பந்தம், காற்றாலை -சூரிய மின்சக்தி ஒப்பந்தம் என ஏகப்பட்ட ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. தனியாரிடமிருந்து வாங்கப் படும் மின்சாரம், அவர்களிடம் போடப்படும் ஒப்பந் தம், அதிலுள்ள ஊழல்கள், தனியார்கள் அடிக்கும் கொள்ளைகளை அனுமதித்தல் ஆகியவை தான் வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டமும் கடன் சுமையும்'' என்கிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அன்றைக்கு மின்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் அதிகபட்சம் 5 ரூபாய் 43 காசுகளுக்கு கிடைத்தபோது, 12 ரூபாய் 77 காசுகள் கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்தனர். இன்றைக்கு 21 ரூபாய் கொடுத்து வாங்குகின்றது தி.மு.க. அரசு.
மின்சார சந்தையில் நடப்பது என்ன?
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் அதன் சொந்த மின் உற்பத்தி மிகவும் குறைவு. தமிழக மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி திறன் 4,320 மெகாவாட். இதிலும், 2,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகிறது. தனியார் நிறுவனங்கள் தற்போதைய நிலையில், 1 லட்சத்து 200 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றன. கோடை காலங்களில் மின் தேவை அதிகமாக இருப்பதால் மின்சந்தையில் எல்லா மாநிலங்களுமே முட்டி மோதுகின்றன. அதிக விலை கொடுப்பவர் களுக்கே மின்சாரம் கிடைக்கிறது. மின் விற்பனைக்காக 96 சிலாட்டுகள் இருக்கிறது. ஒவ்வொரு சிலாட்டுக்கும் தனித்தனி ரேட்! ஒரு யூனிட் 12 ரூபாயிலிருந்து ஆரம்பித்து 21 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மின் விற்பனைக்கு கடிவாளம்போட ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டுமென மத்தியில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி அரசு இருந்த காலத்திலிருந்தே பல மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. நடக்கவில்லை.
மின் தேவையும் மின்தடையும்!
ஒரு நாளைக்கு தற்போதைய தேவை 17,000 மெகாவாட் மின்சாரம். நம்மிடம் இருப்பது 15,500 மெகாவாட்தான். பற்றாக்குறையாக இருக்கும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை பவர் மார்க்கெட்டில் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அந்த 15,500 மெகாவாட்டில் மத்திய தொகுப்பி லிருந்து கிடைக்கக்கூடிய 30 சதவீதத்தில் 796 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் ஏற்பட்ட தடங்கல்தான் மின்தடைக்கு காரணம்” என்கிறார்கள் அதிகாரிகள். மே மாதத் தில் மின் தேவை 18,000 மெகாவாட்டாக அதிகரிக்கக்கூடும் என வாரியம் கணக்கிட்டுள்ளது. அதனை சமாளிக்க நிலக்கரியை இறக்கு மதி செய்யும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
ஒன்றிய அரசே காரணம்!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்காததால் தமி ழகத்தில் 41 முறை மின் தடை ஏற்பட்டது என்று குற்றம் சாட்டுகின்றன எதிர்க் கட்சிகள். இதற்கு விளக்க மளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "மத்திய தொகுப்பிலிருந்து 796 மெகாவாட் கிடைக்காததால்தான் மின்தடை. நமக்குத் தேவையான நிலக்கரி ஒரு நாளைக்கு 72,000 டன். ஆனால், ஒரு நாளைக்கு 48,000 முதல் 50,000 டன் மட்டுமே வழங்கி வந்த ஒன்றிய அரசு, கடந்த 18-ந் தேதி 30,317 டன், 19-ந்தேதி 37,285 டன், 20-ந்தேதி 20,257 டன், 21-ந் தேதி 46,000 டன் என குறைவான அளவிலேயே நிலக்கரியை வழங்கி வருகிறது. இந்த சூழலில், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்படும் அதிகபட்ச மின் தேவைக்காக நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 4 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, அதில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 137 டாலர் என்ற அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி.யை சேர்த்தால் 143 டாலர். இனி மின்தடை ஏற்படாது''’என்கிறார்.
அதானியின் சந்தை!
மத்திய அரசு சரியாக உள்ளது என்றும் தனியாரிடம் மின்கொள்முதல் செய்யவே செயற்கையான தட்டுப் பாட்டை தமிழக அரசு உருவாக்குவ தாக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை குற்றம்சாட்டுகிறார். ஆனால், அதிகாரிகளோ, செயற்கையான தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உருவாக்குவதாகவே தெரிவிக்கிறார் கள். சில மாதங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலிய அரசுக்கும் பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி நிறுவனத்துக்குமிடையே நிலக்கரி தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. அதேபோல இந்தோனேஷியாவிலும் நிலக்கரி வயல்களை வாங்கியிருக்கிறார் அதானி. அதானி நிறுவனம் நேரடியாக இந்தியாவுக்குள் நிலக்கரியை இறக்குமதி செய்தால் அரசியலாக்கப்படும் என்பதால், வெவ்வேறு நாடுகளிலுள்ள அதானியின் ஷெல் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இந்தியாவுக்குள் நுழைவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு உருவானால்தான் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனாலேயே மாநிலங்களுக்கு சரியான நேரத்தில் தரவேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு குறைத்தும் தாமதப்படுத்தியும் வருகிறது. செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது ஒன்றிய அரசுதான் என்கிறார்கள் மின்துறை அதிகாரிகள்.
நெய்வேலியை தமிழக அரசு வசமாக்குக!
நிலக்கரி விநியோகத்தில் ஆக்கப்பூர்வமான சில முடிவுகளை தி.மு.க. அரசு எடுத்தால் மின்சார பற்றாக்குறையே வராது என்கிறார்கள் பொறியாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி,’"நெய்வேலியில் வருடத்துக்கு 30 மில்லியன் டன் நிலக்கரி வெட்டியெடுக்கப் படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் 40 சதவீதம்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது. மீதம் 60 சதவீதத்தை தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு பங்கு பிரித்துத் தருகிறது. நிலக்கரியை எடுப்பதால் உருவாகும் அனைத்து பிரச்சனைகளும் தமிழர்களுக்கு. ஆனால், உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையாக நமக்கு இல்லை. அதனால் நெய்வேலி நிலக்கரியை முழுமையாக நாம் பயன்படுத்தும் வகையில் நெய்வேலி சுரங்கத்தை தமிழக அரசு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதேபோல, தமிழக மின்வாரியமும் தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேசனும் இணைந்து வல்லூரில் 4000 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கிறது. இது முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. வல்லூரிலிருந்து தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேசனை வெளியேற்றி அதனை தமிழக அரசின் உடைமையாக்க வேண்டும். இது நடந்தாலே, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கும் தேவை இருக்காது'' என்கிறார் அழுத்தமாக.
கழக அரசுகளின் புதிய மின்திட்டங்கள்!
கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு போட்ட மின் திட்டங்கள்தான் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் செயல்பாட்டுக்கு வந்தன. ஜெயலலிதாவின் 15 ஆண்டுகால ஆட்சியில் ஒரு மின்திட்டம்கூட உருவாக்கப்படவில்லை. 2012-ல் வடசென்னை மூன்றாவது அலகு 800 மெகாவாட் திட்டம் மட்டுமே அவர் கொண்டு வந்தார். தற்போது அதன் உற்பத்தி துவங்கியிருக்க வேண்டும். ஆனால், இல்லை. இந்த திட்டத்தில் மேஜர் ப்ளாண்டை பெல் நிறுவனமும், பேலன்ஸ் ப்ளாண்டை பி.ஜி.ஆர். எனெர்ஜியும் எடுத்திருக்கின்றன. பெல் நிறுவனம் தனது வேலையை முடித்து விட்டநிலையில், தனது வொர்க்கை பி.ஜி.ஆர். இன்னும் முடிக்கவில்லை. அதனால் உற்பத்தி துவங்கவில்லை. இந்த ஓராண்டில் தி.மு.க. அரசு இதில் அக்கறை காட்டவில்லை.
இதற்கிடையே, பி.ஜி.ஆர். எனெர்ஜி நிறுவனத்துடன் 4,472 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் அனல்மின்நிலைய திட்ட விரி வாக்கத்திற்காக எடப்பாடி அரசில் போட்ட ஒப்பந்தத்திற்கு தற்போது தி.மு.க. அரசு உயிர்கொடுத்த விவகாரம் சர்ச்சையானது. இதுவும் கிடப்பில் கிடக்கிறது. அனல் மின்நிலைய திட்டங்கள் மட்டுமே மின் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும்.
ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படி புதிய திட்டங்கள் இல்லை. அ.தி.மு.க. அரசைப் போலவே தனியாரிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதில்தான் அக்கறையாக இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் கடன்சுமை மக்கள் தலையில்தான் கட்டணமாக விழப்போகிறது.