கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கே தகவல்கள், சட்டமன்ற கொறடா அல்லது வாட்ஸ்அப் வழியாகவே தெரிவிக்கப்படுகின்றன. இதனால் எம்.எல்.ஏக்கள் தங்கள் குறைகளை தலைவரிடம் எப்படி நேரடியாகச் சொல்வது எனத்தெரியாமல் தவித்துவந்தனர்.
இந்நிலையில், இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கட்சி விவகாரங்களில் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனிப்பட்ட முறையில் குடும்ப நிலவரம், கட்சி நிலவரம், உட்கட்சி பிரச்சனைகள், மாவட்ட அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கேட்டு வருகிறார். "உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள், என்னை எப்போதும் தொடர்புகொள்ளலாம் எனச் சொல்லிவருவது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதுபோல், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், சேர்மன்களையும் சந்திக்கவேண்டும் என்கிற கோரிக்கையை கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் வைக்கின்றனர்.
ஏன் எதற்கென விசாரித்தபோது, "புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளின் ஆளுங்கட்சி ஒன்றியச் சேர்மன்கள் பலரும் சோர்வாகவே உள்ளனர். இதனால் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி சேர்மன்கள் கலந்துகொள்வதைத் தவிர்க்கிறார்கள். கடந்த ஜூலை 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எம்.எம்.அப்துல்லா, கரூர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தர்வக்கோட்டை சின்னத்துரை, அறந்தாங்கி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் பல சேர்மன்கள் கூட்டத்துக்கு வரவில்லை. முன்பெல்லாம் தொகுதிக்குள் வரும் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் பார்ப்பாங்க. ஒன்றியத்தில் வரும் பணிகளை ஒன்றிய சேர்மன்கள் பார்ப்பாங்க. ஆனால் இப்ப நாங்க ஆளுங்கட்சியாக இருந்தாலும் எந்தப் பணியையும் செய்ய முடியல. மா.செ.க்கள், எம்.எல்.ஏக்கள் நேரடி யாக தலையிட்டு பணிகளை அவங்களே ஒதுக்கிக்கிறாங்க. எங்க வடக்கு மா.செ. செல்லப்பாண்டியன், எல்லாப் பணியையும் அவரே எடுத்துக்கறார். பின்ன, ஆய்வுக் கூட்டத்தில் எங்களுக்கென்ன வேலை? எங்கள் குறைகளையும் உதயநிதி கேட்கணும்னு நினைக் கிறோம்'' என்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஒன்றிய நிர்வாகியொருவர், "எம்.எல்.ஏ.க்களுக்கு தர வேண்டிய காண்ட்ராக்ட்டுகள், கமிஷன்களைச் சரியாக வழங்கி, எம்.எல்.ஏ.க்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தலைமை சொன்னதாகக் கூறிக்கொண்டு, எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட நிதிகளில் 20 சதவீதம் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல், கட்சி நிர்வாகிகளுக்கு சாதாரண வேலையைத் தரக்கூடத் தயங்குகிறார்கள். திருப்பத்தூர் நிர்வாகியின் மகள், அனைத்துத் தகுதியோடு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் பணியிடத்துக்காக எம்.எல்.ஏ. நல்லதம்பியிடம் கேட்டிருக்கிறார். தரவில்லை. 5 லட்சம் தருவதாகக்கூறியும் தரவில்லை. ஆனால் 7 லட்சம் வாங்கிக்கொண்டு அ.தி.மு.க.வை சேர்ந்தவருக்கு அந்த வேலை தரப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளின் நிலை இதுதான். எந்தப் பணியையும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குவதில்லை. அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் 10.88 கோடி ரூபாய்க்குரிய நெடுஞ்சாலைப் பணிகளை தங்களுக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கே கொடுத்தனர். எங்களுக்கும் தாருங்களென ஒ.செ, பேரூர் செயலாளர்கள் கேட்டபோது, உங்களுக்கு தருவதானால் நான் சொல்ற கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மூலமாகத்தான் செய்யணும்னு சொல்லிட்டாங்க. 100 கோடி ரூபாய்க்கான 300 பணிகளை சில நிறுவனங்களே செய்கிறார்கள். பேரூராட்சிக்கு வரும் நிதியை நீங்களே எடுத்துக்கிட்டா எப்படின்னு புதுப்பாளையம் பேரூராட்சி வார்டு செயலாளர் செல்லையா, எம்.எல்.ஏ.விடம் கேட்டதுக்கு, மிகவும் கேவலமாகத் திட்டியதோடு, அடித்தும் உதைத்தனர். போலீஸ், அமைச்சர்னு புகார் அளித்தும் நடவடிக்கையில்ல.
திருவண்ணாமலை, திருப்பத் தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு அமைச்சர் உதயநிதியின் மூன்று நாள் சுற்றுப்பயணத்துக்கு சிறப்பான வரவேற்பளிக்க, நெடுஞ்சாலைத்துறை மூலமாக சில கோடிகளுக்கான சாலை பேட்ச் ஒர்க் வேலைகளைக் கொடுத்தார் அமைச்சர் எ.வ.வேலு. அதில்வரும் கமிஷனை வைத்து வரவேற்புப் பணிகளைச் செய்யுமாறு கூறினார். ஆனால் கான்ட் ராக்ட் பெற்றவர்கள், பாதிகூட செலவழிக்கவில்லை. பெருசா சம்பாதிக்கறது அவுங்க, செலவு மட்டும் எங்களுக்கு. ஒவ்வொரு ஒன்றிய செயலாளரின் கீழும் 15 முதல் 20 பஞ்சாயத்துகள் இருக்கு. இங்குள்ள ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கு வேலை, சின்னச்சின்ன ஒப்பந்தங்களைக் கேட்டாலும் கொடுப்பதில்லை.
கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு எதுவுமே செய்து தராதவர்கள், ஓட்டு சேகரிக்கும் போது மட்டும் அடிமட்ட நிர்வாகிகளிடம் உதவி கேட்பதெப்படி? அடிமட்ட நிர்வாகிகள் தேர்தல் வேலை செய்யாவிட்டால் இவர்களாக எம்.எல்.ஏ. ஆகிட முடியுமா? எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் குறித்த புகாரை தலைமை நேரடியாக விசாரிக்கும் சூழல் வேண்டும். அப்போதுதான் கட்சியை கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்று ஆட்சியை தக்கவைக்க முடியும்'' என்றனர் எச்சரிக்கையாக.
-ராஜா, செம்பருத்தி