(17) எம்.ஜி.ஆர். ஸ்டைலும்... விஜயகாந்த் ஸ்டைலும்!
"மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் "இரவும் பகலும்' படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோவாக சண்டைக் காட்சிகளில் அசத்தியிருந்தார். அந்தப் படம் வெற்றிபெற்றது. பலருடைய பார்வை ஜெய்சங்கர் அவர்கள் மீது திரும்பியது. தயாரிப்பாளர்களின் பார்வை மட்டுமல்ல... ரசிகர்களும் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.
அப்போது "இரவும் பகலும்' படத்திற்கு விமர்சனம் எழுதியிருந்த ஒரு பத்திரிகை, "எம்.ஜி. ஆருக்குப் போட்டியாக ஒருவர் வந்துவிட்டார். சண்டைக் காட்சிகளை பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்கு சவால் விடுவதுபோல் இருக்கிறது' என்றெல்லாம் பாராட்டி எழுதியிருந்தார்களாம். காரணம்... அப்போது அசைக்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக எம்.ஜி.ஆர். இருந்தார்.
ஜெய்சங்கர் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஹீரோவாக ஆனார். தயாரிப்பாளர்களும், விநி யோகஸ்தர்களும் விரும்புகிற ஹீரோவாக ஆனார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மாற்றாக ஆக முடியவில்லை. சண்டைக் காட்சிகளில் "எம்.ஜி.ஆர். ஸ்டைல்' என்பதை அன்று மட்டும் இல்லை... இன்றுவரை எந்த ஹீரோவாலும் முறியடிக்க முடியவில்லை... முடியவும் முடியாது.
டெக்னாலஜி வளர்ச்சியடையாத அந்தக் காலத்திலேயே அசத்தியவர் எம்.ஜி.ஆர். வெறும் சண்டைக் காட்சிகளில் நடித்து மட்டும் புகழ் பெறவில்லை, அரசியலில் இருந்ததனால் மட்டும் புகழ் பெறவில்லை, அதை யும் தாண்டி மக்கள் மனதிலே அவர் இடம் பிடித்ததற்கு காரணம்... அவர் செய்த தர்மம். ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள். அவர் நடித்தது வெறும் படங்கள் அல்ல... அவை மக்களுக்கான படங்கள். இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டும் என்றால் மக்களுக்கான பாடங்கள்.
நான் படித்த ஒரு செய்தியை இங்கே சொல்கிறேன். ஒரு வெளிநாட்டுக்காரர் கொஞ்சம் தமிழ் பேச கற்றுக்கொண்டவர். சென்னையில் இருக்கும் நண்பரை பார்க்க வந்திருக்கிறார். வந்தவர் நண்பரிடம், "தமிழ்ப் படங்கள் பார்க்க வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்.
"வாத்தியார் நடிச்ச படத்துக்கு கூட்டிட்டு போறேன்'' என்று நண்பர் சொல்ல...
"உங்க ஊர்ல வாத்தியார் என்ற பெயரிலேயே ஒரு நடிகர் இருக்காரா?'' என்று கேட்க...
"இல்ல சார் அவர் பெயர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவரை "வாத்தியார்'னு கூப்பிடுவாங்க'' என்று நண்பர் சொன்னார்.
"புதுசா இருக்கே'' என்று வெளிநாட்டுக்காரர் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். நடித்த இரண்டு, மூன்று படங்களுக்கு வெளிநாட்டுக்காரரை கூட்டிச் சென்றிருந்தார் நண்பர். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் ரசித்து பார்த்திருக்கிறார். அந்தப் படங் களை பார்த்துவிட்டு நண்பரிடம் சொன்னாராம்.
"நீ சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர். வாத்தியாருதான்யா. அவரோட படங்கள்ல அன்பைக் கத்துக் குடுக்கிறாரு, பண்பைக் கத்துக் குடுக்கிறாரு, பாசத்தை கத்துக் குடுக்கிறாரு, நேசத்தை கத்துக் குடுக்கிறாரு, தாயை நேசிக்கணும், தாய் நாட்டை நேசிக்கணும், தாய்மொழியை நேசிக்கணும்னு கத்துக் குடுக்கிறாரு, வீரத்தைக் கத்துக் குடுக்குறாரு, துணிச்சலைக் கத்துக் குடுக்கு றாரு, அநியாயத்தை எதிர்க்கணும், தீயவர்களை எதிர்க்கணும், தப்பு பண்றவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தட்டி கேட்கணும்னு கத்துக் குடுக்கிறாரு, உறவுகளை நேசிக்கணும், நட்பை மதிக்கணும்னு கத்துக் குடுக்கிறாரு, சட்டத்தை மதிக்கணும், நீதிக்குத் தலைவணங்கணும்னு கத்துக் குடுக்கிறாரு. கற்றுக் குடுக்கிறவருன்னா... அவர் வாத்தியார்தானே'' என்று வெளிநாட்டுக்காரர் சொல்ல... நண்பர் மலைத்துப்போனாராம்.
ஜெய்சங்கர் சினிமாவுக்கு வரும்போது, எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்தார். அவர் மாதிரி வருவார், அவரை அசைத்துடுவார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்துபோனார்கள்.
விஜயகாந்த் நடித்த "சட்டம் ஒரு இருட் டறை' படம் வரும்பொழுது ரஜினி சாரும் கமல் சாரும் பெரிய ஹீரோக்களாக இருந்தார்கள். இரு வரையும் விஜயகாந்த் அசைத்துப் பார்த்தார். பல படங்கள் அவர்களின் படங்களைத் தாண்டி வெற்றி பெற்றது. அவர்களைப் போலவே, ஏராளமான ரசிகர் மன்றங்கள் உருவாகின. முன்பு சினிமாவை "ஏ' சென்டர், "பி' சென்டர், "சி' சென்டர் என பிரித்து வைத்திருந்தார்கள் இப்பொழுது அதெல்லாம் மாறிவிட்டது. கிராமப் பகுதியில் ரஜினி, கமல் இருவரையும் விட விஜயகாந்த் மாஸ் ஹீரோவாக மாறினார். எம்.ஜி.ஆரைப் போலவே அடித்தட்டு மக்களின் மனதைக் கவர்ந்த ஹீரோவாக அவர் களுக்கான ஹீரோவாக விஜயகாந்த் வளர்ந்தார்.
எம்.ஜி.ஆர். புகழ் பெறுவதற்கும், மக்களால் போற்றப்படுவதற்கும் பல காரணங்கள் இருந்தன.
சண்டைக் காட்சிக்கு வருவோம். எப்படி எம்.ஜி. ஆருக்கு ஒரு தனி ஸ்டைல் இருந்ததோ அதைப்போல விஜயகாந்த் அவர்களுக்கு என்று ஒரு தனி ஸ்டைல் உருவானது. எம்.ஜி.ஆர். போல விஜயகாந்த் சண்டைக்காட்சிகளில் மிகவும் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தபோதும் விஜயகாந்த்தின் சண்டைக் காட்சிகள் வேறு ஸ்டைலாக அமைந்தது.
"சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் வெற்றிக் குப் பிறகு விஜயகாந்த்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக ஆரம்பித்தது. விஜயகாந்த் ரசிகர்கள் தலைமை மன்றம் மதுரையில் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் தலைவராக ஆர்.சுந்தர் ராஜ், (இவர், அ.தி.மு.க.வின் கூட்டணியில் தே.மு. தி.க. வேட்பாளராக மதுரையில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். பிறகு அ.தி.மு.க.வில் போய் ஐக் கியமாகி விஜயகாந்த்தின் கோபத்துக்கு ஆளான வர்) பொருளாளராக ரவீந்திரன், பொதுச்செயலாள ராக ராமுவசந்தன் போன்ற நண்பர்களும் செயல் பட்டு வந்தார்கள். விஜயகாந்த் வெற்றிப்பட ஹீரோ ஆனதும், தலைமை ரசிகர் மன்றம் சென்னையில் செயல்பட ஆரம்பித்தது. ராமுவசந்தன் மட்டும் சென்னையில் வந்து குடியேறினார். அவரும் நானும் சென்னையிலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் போய் ரசிகர் மன்றங்களை திறந்து வைத்தோம்.
"சட்டம் ஒரு இருட்டறை' வெற்றியின் மூலம் விஜயகாந்த் பேசப்பட்டது போல, அதை எழுதிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் வெளிச்சத்திற்கு வந்தார். விஜயகாந்த்தை வெற்றி பெற வைத்ததில் அவருடைய பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு புதுமுக ஹீரோவுக்கு ஒரு படம் வெற்றியடைந்தால் அடுத்த படமும் வெற்றியடைய வேண்டும். அப்பொழுது தான் அந்த ஹீரோவுக்கு திரையுலகில் நிரந்தர இடம் கிடைக்கும். அது விஜயகாந்த் அவர்களுக்கு அமைந்தது.
"சட்டம் ஒரு இருட்டறை' படத்தை தொடர்ந்து அவரைத் தேடிவந்த படம் "சிவப்பு மல்லி.' புகழ்பெற்ற ஏவி.எம். நிறுவனம் தயாரித்தது. எழுதி இயக்கியவர் என் பாசத்துக்குரிய இராம.நாரா யணன் அவர்கள்.
"சிவப்பு மல்லி' படத்தைப் பற்றி சொல்ல வேண்டும். "சட்டம் ஒரு இருட்டறை' வெளியான அதே 1981ஆம் ஆண்டு அந்தப் படமும் ரிலீஸ் ஆனது. தெலுங்கிலே "எர்ர மல்லி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றதன் தமிழ் ரீமேக்தான் சிவப்பு மல்லி. சிவப்புச் சிந்தனையை திரையில் உரக்கச் சொன்னது. தெலுங்கில் இந்தப் படத்தின் கதையை எழுதியவர் நடிகரும், கதாசிரியரும், தீவிர கம்யூனிஸ்ட்டுமான மதலரங்காராவ் என்பவர். முதலாளி வர்க்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய இரண்டு கம்யூனிஸ சிந்தாந்த தோழர் களைப் பற்றிய படம் இது. ஆந்திராவில் மிகப் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. தொழிலாளர் பிரச்சினை என்பது உலகம் முழுக்க உள்ள சர்வதேச பிரச்சினை. தமிழில் எடுத்தால் நிச்சயம் வெற்றிபெறும் என்று நினைத்து தெலுங்குப் படத்தின் கதை உரிமையை வாங்கி, தமிழில் தயாரித்தனர்.
1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப் பைத் தொடங்கினார்கள். படப்பிடிப்பு தொடங் கும்போதே ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதாவது 56 நாட்களில்...!
குறுகிய காலத்தில் ஒரு படத்தை திட்ட மிட்டு முடிப்பவர் இராம.நாராயணன். அதனால் அது சாத்தியமாயிற்று என்று சொன்னாலும், விஜயகாந்த் அவர்களின் கடும் உழைப்பும் காரணம். இரவு, பகலாக நடித்தார்... இடைவிடாமல் நடித் தார். அவரோடு இணைந்து இன்னொரு ஹீரோ வாக வாகை சந்திரசேகர் நடித்தார். இரவு, பகலாக நடிக்கும் விஜயகாந்த்தை உற்சாகப்படுத்துவதற்காக இப்ராகிம் ராவுத்தரும், நானும் அடிக்கடி படப் பிடிப்பு நடக்கும் இடங்களுக்குப் போய்விடுவோம். நாங்களும் தூங்காமல் விழித்துக்கொண்டிருப்போம்.
"விஜயகாந்த் மனுசனா இல்ல மிஷினா?' என்று படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களும், தொழிலாளர்களும் நினைத்தார்கள். "இவரு முகத்துல சோர்வே தெரியாதா?' என்று அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்.
"காங்கிரஸ்காரர் மகன் கம்யூனிஸ்ட் ஆயிட்டானே...'
(வளரும்...)
படம் உதவி: ஞானம்