நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. நகர்மன்றத் தலைவரும் ஒருமையில் பேசி சண்டை போட்டுக்கொண்ட விவகாரம் மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தைச் சூடாக்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராகவும், எம்.எல்.ஏ.வுமாகவும் இருப்பவர் ராஜ்குமார். மயிலாடுதுறை தி.மு.க. நகரச் செயலாளராகவும், நகராட்சித் தலைவராகவும் இருப்பவர் குண்டாமணி என்கிற செல்வராஜ்.
மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை மகளிர் அரசினர் கலைக்கல்லூரியில், புதிய கட்டடம் மற்றும் நூலகம் கட்டுவதற்காக தமிழக அரசு 4.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நூலகத்திற்கான கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி யில்தான் மேற்சொன்ன சண்டை நடந்துள்ளது.
என்ன நடந்ததென கல்லூரியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டோம்:
"பூமி பூஜையில் கலந்துகொண்ட ராஜ்குமார் பணியைத் தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சி முடியும் தறுவாயில் டூவீலரில் அதிவேகமாக வந்த மயிலாடுதுறை நகராட்சி சேர்மன் செல்வராஜ், எடுத்த எடுப்பிலேயே அங்கு நின்றுகொண்டிருந்த ஒப்பந்தக்காரர்களிடமும், அதி காரிகளிடமும், "நகர்மன்றத் தலைவரை அழைக்க மாட்டீங்களா, திருட்டுத்தனமா செய்வீங்களா?'’என ஆத்திரமடைந்தார். அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென தெரியாமல் கை பிசைந்தபடி நின்றனர். அவர்களைப் பார்த்த செல்வராஜ், “"எல்லாத்துக்கும் தலையாட்டினால் என்ன அர்த்தம், முதலமைச்சர் அறிவித்த திட்டம்தானே? அவர்தானே நிதி ஒதுக்கினார். நாலு பேருகிட்ட சொல்றதுல என்ன சங்கடம். எம்.எல்.ஏ. இன்னைக்கு இருந்துட்டுப் போயி டுவார்'’என பேசியவர், ஒருகட்டத்தில் எம்.எல். ஏ.வை ஒருமையில் பேச... விபரீதத்தைப் புரிந்து கொண்ட எம்.எல்.ஏ. காரில் ஏறி கிளம்ப முயன்றார்.
ஆனாலும் விடாமல் அவரது காரைமறித்து "காங்கிரஸ் கட்சி ஓட்டை வாங்கியா எம்.எல்.ஏ. ஜெயித்தார்? தி.மு.க. ஓட்டை வாங்கித்தானே ஜெயித்தார்' என்றவர், ஒருகட்டத்தில் ராஜ்குமாரை பார்த்து, “"நீ எம்.எல்.ஏ.தானே... நீ இங்க வந்தது தப்பு. எப்படி வந்த? உன்னை ஜெயிக்க வைச்சது யாரு? மயிலாடுதுறையில யாரும் உனக்கு ஓட்டு கேட்கவரல, நான்தானே உன்னை ஜெயிக்க வைத்தேன்'’என திட்டினார்'' என்கிறார்கள்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். “"நகரத்தில் நடக்கும் அனைத்துப் பணிகளையும் குண்டாமணி தனது மருமகன் சந்தோஷ் பெயரில்தான் எடுத்துச் செய்கிறார், தி.மு.க.காரர்களோ மற்ற கட்சிக்காரர்களோ எடுக்க முடியாது. அப்படியெடுத்தால் இப்படி பிரச்சனை செய்துவிடுவார். இந்த வேலையையும் கேட்டார், ஆனால் வெளியூர்க்காரருக்கு இந்த டெண்டர் கொடுக்கப்பட்டுவிட்டது. இது தெரிந்து, அந்த காண்ட்ராக்டர்கிட்ட "இந்த வேலையை என்கிட்ட கொடுங்க. அதுக்குப் பதிலா நான் பேட்ச் ஒர்க் ஏதாவது உங்களுக்குத் தரேன். லோக்கல்ல அசிங்கமா போகும்'னு கேட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தக்காரர்களோ, "நாலு மாவட்டத்துல நாங்க வேலை செய்யுறோம் இந்த வேலையை மாற்றிக் கொடுத்தா எங்களுக்கு கெட்ட பெயர் ஆயிடும். அடுத்த வேலை ஏதாவது எடுத்து உங்களுக்குத் தர்றேன்'னு சொல்லிட்டாங்க, "கட்டடம் கட்டப்போகிற இடம் நகராட்சிக்குச் சொந்தமான இடம். பாதிதான் தீர்மானம் ஆகியிருக்கு. மீதித் தீர்மானம் நான்தான் போடணும்' என மிரட்டிப் பார்க்க... நைசாக ஃபோனை கட் செய்துவிட்டு, தி.மு.க. மாவட்டச் செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதாமுருகனிடம் சென்றுவிட்டனர்''’என்கிறார்.
மறுநாள் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் சேர்மனைக் குறித்த அதிருப்திகள் கிளம்பின. நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சியில் மட்டுமின்றி பல வகையிலும் மாதாமாதம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நகராட்சி சேர்மன், நகரத்தின் மையத்தில் இருந்த பகுத்தறிவு மன்றத்தை புனரமைப்பு செய்கிறேன் என ஒரு வருடமாக பாழடைந்த கட்டடமாகப் மாற்றிப் போட்டுள்ளார். அதேநேரத்தில் அவரது வீட்டை ஆறு மாதத்தில் பளிங்குபோல கட்டி முடித்துள்ளார். ஆனால் கலைஞர் சிலை இன்னும் தயாராகலைன்னு காரணம் சொல்லுறாங்க, இதை தி.மு.க. மாவட்டச் செயலாளரும் கண்டுக்கல. இதுகுறித்தான தகவல்களை தலைவரின் கவனத் திற்கு புகாராகக் கொடுத்துள்ளோம்'' என்கிறார்கள் ஆத்திரத்தோடு.
பிரச்சனை குறித்து மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமாரிடம் கேட்டோம்... "அடிக்கல் நாட்டப் போவதாகச் சொன்னதால் கன்னியாகுமரியிலிருந்து அவசரமாகக் கிளம்பிவந்தேன். நிகழ்ச்சிக்காக மற்றவர்களை அழைக்கவேண்டிய பொறுப்பு எனக்குக் கிடையாது, இந்த புரிதலில்லாமல் நகர்மன்ற உறுப்பினர் பேசுவது வேதனையா இருக்கு. ஒரு நகர்மன்றத் தலைவராக இருந்து கொண்டு முதல்வரின் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அந்த நிதிக்கு நகர்மன்ற இடத்தைத் தரமாட்டேன்,… தீர்மானம் நிறைவேற்றமாட்டேன் என சர்வாதிகாரிபோல பேசுகிறார், காண்ராக்ட்காரன் கமிஷன் தரலைன்னா, தொகுதி எம்.எல்.ஏ.வான என்கிட்ட பந்தா காட்டுறது சரியா இல்லை''’ என்றார்.
நகர்மன்றத் தலைவர் குண்டாமணியைத் தொடர்புகொண்டோம். "அந்தக் கல்லூரியில் அமையப்போகும் கட்டடம் நகராட்சிக்குச் சொந்தமான இடம். அதோடு எங்க தலைவர் நிதி ஒதுக்கிறார். மக்கள் பிரதிநிதியான எங்களைப் போன்றவர்களை அழைக்காமல் அரசியல் செய்வதை நியாயமான்னு கேட்டேன். அவ்வளவு தான். அடுத்த அரைமணி நேரத்தில் இருவருமே இன்னொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம், பிரச்சினை ஒன்றுமில்லை. கலைஞர் சிலை தயாராகிவருகிறது, பகுத்தறிவு மன்ற கட்டடப் பணிகளும் விரைந்து நடக்கிறது''’ என்றார்.
தேர்தல் வேலையை எப்படி இணக்கமாகச் செய்வார்களோ என்ற பதட்டத்தில் அப்பகுதியின் இரு கட்சி நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.